யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கைத்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக விதாதா வளநிலையத்தினால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பயிற்சிநெறி தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (09.01.2024) காலை பத்து மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை முழுவதும் ஐந்து மாவட்டங்களில் முச்சக்கர வண்டி சாரதிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பயிற்சி நெறி முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளன. இவ் ஐந்து மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இப் பயிற்சி நெறியில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மாற்றுத் தொழிலொன்றுக்கான (மரவேலை,சிகையலங்காரம், மின் பயிற்சி, நீர் குழாய் பொருத்துதல், வர்ணம் பூசுதல்) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இப் பயிற்சிநெறி மூலம் யாழ் மாவட்ட இளம் முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில் திறன், தொழில் வாய்ப்பு மற்றும் வருமானத்தினை அதிகரிக்க முடியுமென குறிப்பிடப்பட்டன.
மேலும் முச்சக்கர வண்டி சாரதிகள் இப் பயிற்சி நெறிக்கான விண்ணப்பங்களை 18.01.2024 ஆம் திகதிக்கு முன்பாக கிராம சேவகர் ஊடாக விண்ணப்பிக்கமுடியுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் திரு.A.லக்கதாஸ் மற்றும் உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், முகாமையாளர்(VTA), NEDA பிரதிநிதி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், மாவட்ட விதாதா இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.





