இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 10ஆவது தேசிய சாரணிய ஜம்போரி 20.02.2024 ஆம் திகதி தொடக்கம் 26.02.2024 ஆம் திகதிவரை திருகோணமலையில் நடைபெறுகிறது.
இலங்கையின் தலைமை சாரணரான அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றைய தினம்(21) ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
தேசிய சாரணிய ஜம்போரியில் யாழ்ப்பாண சாரணிய மாவட்டத்தை சேர்ந்த 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுக்கான ஜம்போறி ஒத்திகை நிகழ்வு கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (17) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டு சாரணிய மாணவர்களுக்கு உணவுப் பொருட்களை கையளித்தார்.
இதேவேளை சாரண மாணவர்களை கெளரவித்து வழியனுப்பும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (19) பிற்பகல் 4.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடக்குமாகண ஆளுநரின் செயலாளர் திரு.எம் நத்தகோபாலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு .எம் .பற்றிக் டிறஞ்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட கிளைச்சங்க சாரணர்களின் அணிவகுப்பு இடம்பெற்றதோடு, யாழ் மாவட்ட சாரணர் கிளைச் சங்கக் கொடி யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட ஆணையாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன்,
சாரணர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு சாரணிய மாணவர்களை கௌரவ ஆளுநர் வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.








