யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வட மாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் 28.03.2024 அன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
16.02.2024 இல் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும் ஆராயப்பட்டன.
மாவட்டத்தில் முதலீட்டு வாய்ப்புக்காக அடையாளம் காணப்பட்ட நிலங்கள், இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடு மற்றும் திருத்தப்படவேண்டிய மீன்பிடி துறைமுகம், காணி விடுவிப்பு, சூரியகல வீட்டுத்திட்டம், பேரூந்து சேவை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள், புகையிரத கடவைகளை முன்னுரிமை அடிப்படையில் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்தல், தென்னையில் ஏற்படும் வெள்ளை ஈ தாக்கம், வீடற்றவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கல், வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலைய மீதமுள்ள மக்களின் காணிகளை மீள வழங்குதல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறிதரன், கௌரவ செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் கௌரவ சி.வி.கே.சிவஞானம் வட மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், வட மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,இராணுவ, பொலிஸ், கடற்படை அதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.





