யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்  05.04.2024 அன்று காலை 08 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும், சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சின் செயலாளர் திரு.பற்றிக் நிறஞ்சன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 28 பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வலயக்கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களிடம் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கௌரவ அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும்போதுஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மாணவர்கள் மீது அக்கறை செலுத்தி நல்வழிப்படுத்த வேண்டுமெனவும், வட மாகாண இளைஞர் யுவதிகளை விளையாட்டுத் துறையில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் மாகாண உடற்பயிற்சி உதவிக் கல்வி பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாணம், தீவகம், வலிகாமம், வடமராட்சி மற்றும் தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.