பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தின் ஏற்பட்டில் மறைந்த திருமதி ரெஜினா சம்பந்தநாதன் அறக்கட்டளையின் உதவி திட்டத்தினூடாக நலிவுற்ற குடும்பங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் 15 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான நீங்கள் இந்த சிறிய உதவி தொகையை பெற்று சரியான தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமெனவும், இவ்வாறான உதவிகள் கிடைக்காமல் அதிக மக்கள் அவதிப்படும் நிலையில் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளமைக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டுமெனவும் இவ்வாறான உதவித் தொகையை யாழ் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்க முன்வந்த திருமதி.ரெஜினா சம்பந்தநாதன் அறக்கட்டளைக்கு நன்றிகளை தெரிவித்திருந்தார்.
மேலும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொது நம்பிக்கை நிதிய நீதிபதி ஜிஹான் பிலபிற்றிய அவர்கள் யாழ் மாவட்டத்தில் இந்த உதவி திட்டத்தை வழங்க அனுமதித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ரெஜினா சம்பந்தநாதன் அறக்கட்டளையின் உதவி திட்டங்களை அரசாங்க அதிபரின் கோரிக்கைகளுக்கு அமைவாக செயற்படுத்துவதோடு இனிவரும் காலங்களில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து நிரந்தர வேலை இல்லாத பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மிகவும் நலிவுற்ற 31 குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி.உ.தர்சினி, சட்ட ஆலோசகரும் ஓய்வுபெற்ற நீதிபதி திரு.அம்ஜாட், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.






