உள்ளூர் நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான வியாபார பயிற்சி மற்றும் சமையல் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்று (14.08.2024) காலை 9.00 மணிக்கு யாழ் பஸ்ரியன் விடுதியில் நடைபெற்றது.
தலைமையுரையாற்றிய பதில் அரசாங்க அதிபர் அவர்கள் ஒருவருக்கு அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு முக்கியமானது எனவும் திறனை வளர்த்துக்கொள்ள இப் பயிற்சி முக்கியத்துவம் பெறுவதாகவும், மேலும் மனப்பாங்குகளில் மாற்றம் வரவேண்டும் என்றும் குறிப்பாக உணவுத்துறை சார் தொழில் முயற்சியாளர்கள் வாடிக்கையாளர் திருப்தியில் அதிக கவனம் செலுத்துவதன் ஊடாகவே தொழில் முயற்சியில் முன்னேற்றத்தினை அடைய முடியும் என தெரிவித்ததுடன், இப் பயிற்சி பட்டறை மூலம் உணவு தயாரிப்பதில் மேலும் மேம்படுத்தலை அடையவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளமையால் பயனாளிகள் இதனை வினைத்திறனுடன் பயன்படுத்தி பொருளாதார ரீதியில் முன்னேற்றம்மடைய முயற்சிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மாவட்டச் செயலக திறன் அபிவிருத்திப்பிரிவின் ஏற்பாட்டில், இந்த பயிற்சிப் பட்டறையானது இன்று தொடக்கம் 18.08.2024 ஆம் திகதி வரை 5 நாட்கள் காலை 9.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு Australian AID மற்றும் Skills for Inclusive Growth அமைப்பின் அனுசரணையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக கல்லூரி நிறைவேற்றுப் பணிப்பாளர், Skills for Inclusive Growth அமைப்பின் திட்ட அலுவலர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.







