USAID நிறுவனத்தின் நிதி அனுசரனையில் சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கிலான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில்  (22.11.2022) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது.

USAID நிறுவனத்தின் நிதி அனுசரனையில் உள்ளூர் உற்பத்தி முயற்சியாளர்களை தெரிவுசெய்து அவர்களுக்கான உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் இக் கலந்துரையாடல்  மேற்கொள்ளப்பட்டது. 

இக் கலந்துரையாடலில்  அசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும்போது "சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்குதல், பயிற்சிகளை வழங்குதல், முயற்சியாளர்களின் தேவைகளை அறிந்து வளவாளர்கள் மற்றும் அனுசரனையாளர்களின் பங்களிப்புடன் செயலமர்வுகளை கூடுதலாக நடாத்துவதன் ஊடாக வளப்படுத்தமுடியும்" எனவும் கூறினாா்.

யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையின் ஏற்பாட்டில் மரக்கறிகள் மற்றும் பழங்கள் நீரகற்றல் தொழில்நுட்ப மாற்றுப்பயிற்சி செயலமர்வின் ஆரம்பக்கட்ட நிகழ்வானது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் (21.11. 2022) காலை 8.30 மணிக்கு யாழ்.மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வானது 21,22ஆம் திகதிகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் திணைக்களங்கள் சார்ந்த மேலதிக ஆலோசனைகளை வழங்கியதோடு தொழில் முயற்சியாளர்கள் கிடைக்கின்ற வாய்ப்பினை பயன்படுத்தி முன்னேற்றமடைய வேண்டும் எனவும் நிபுணத்துவம் சார்ந்தவர்களை அணுகி தொடர்புகளை ஏற்படுத்தி தொழிலை விரிவாக்கம் செய்வதனூடாக வெற்றி இலக்கை அடைய முடியும் ,இதற்கு துறைசார் திணைக்களங்கள் ஊக்குவிப்புக்களை வழங்கும் எனவும் தெரிவித்தாா்.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஏற்பாட்டில் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு"அதிகரித்த நிறையையும் பிழையான வாழ்க்கை முறையையும் மாற்றி நீரிழிவை வெற்றி கொள்வோம் " எனும் தொனிப்பொருளில் நடைபவனி விழிப்புணர்வுப் பேரணி இன்றைய தினம் (14.11.2022) காலை 7.30 மணிக்கு யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் வரை நடைபெற்றது.
நீரிழிவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வாழ மேற்கொள்ள வேண்டிய உணவுப்பழக்கவழக்கங்கள் , உடற்பயிற்சி, உடல் நிறையைக் குறைத்தல் ,அன்றாடம் அறிந்த விடயங்களை நடைமுறைப்படுத்தும் விதம், நீரிழிவு நோய் தொடர்பாகவும் வைத்திய நிபுணர்களால் விழிப்புணர்வு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.அத்துடன் நீரழிவு தொடர்பாக ஓய்வுபெற்ற விரிவுரையாளர் கலாநிதி சிதம்பரநாதன் அவர்களின் ஏற்பாட்டில் அரங்க செயற்பாட்டு்க்குழுவின் பண்பாட்டு மலற்சிக்கூடத்தின் செயலாளிகளினால் சிறப்பு ஆற்றுகை வழங்கப்பட்டதுடன் கவிதை, சிறப்புப் பாடல் போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழுவால் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்களுக்கான அறிவினை தற்காலப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (17.11.2022) காலை 9.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சித் திட்டமானது தொழில் வழிகாட்டல் சேவையினை வழங்குகின்ற உத்தியோகத்தர்களுக்கான தேசிய தராதர முறைமைக்குள் (NVQ)உள்வாங்குதல் மற்றும் இவர்களூடாக தொழில் வழிகாட்டல் சேவையை மேம்படுத்துவதுடன் (ERPL), Skills Passport மேம்பாடு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவிப் பணிப்பாளர் W.M.விஜேசிங்க (Tvec), உதவிப் பணிப்பாளர் M.L.பிரியந்த (Naita) மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய கைத்தொழில் பயிற்சி அதிகார சபை தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் சமுத்திரவியல் பல்கலைக்கழகம் என்பவற்றிலிருந்து வருகை தந்திருந்த தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (11.11.2022 )காலை 9.30மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ் மாவட்ட மரக்கறி செய்கை விவசாயிகளுக்கும் விவசாய கடன் முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக விவசாய அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தெரிவித்தார். மேலும் ,நெல் செய்கை விவசாயிகளுக்கு 40,000 ரூபாவாக இருந்த விவசாய கடன் ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது.
இவ் வருடம் பெரும்போக நெற் செய்கைக்கான உர விநியோகத்தில் 70% இரசாயன உரமும், 30% சேதன உரமும் தெரிவுசெய்யப்பட்டதுடன் மாவட்டத்தில் சேதன உர விநியோகத்திற்காக தயாராகவுள்ள உர விநியோகத்தர்களை இனங்கண்டு அவர்களிடம் உள்ள உரத்தின் தரத்தை உறுதிசெய்து விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.