10அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கியவர்களின் மூலம் மனிதத்துவம் நிலைத்திருப்பதை உணர்வதாக ஒளிவிழா நிகழ்வில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா நிகழ்வானது மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் பிரதி புள்ளிவிபர பணிப்பாளருமான திரு. எம். வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (23.12.2025) பி. ப. 2.30 மணிக்கு ஆரம்பமாகி எழிமையாக நடைபெற்றது . நத்தார் தீப ஒளியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் போசகருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, ஆசியுரையினை அகவொளி உளவளத்துணை மற்றும் உளவியலுக்கான நிலையத்தின் பணிப்பாளர் அருட்பணி எம். அன்ரன் ஜொராட் அவர்களும், கிறிஸ்துமஸ் செய்தியை தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீன பேராயர் அருட்பணி கலாநிதி வி. பத்மதயாளன் அவர்களும் வழங்கினார்கள்.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அண்மையில் ஏற்பட்ட அனர்த்த சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எளிமையான முறையில் ஒளிவிழாவினை கொண்டாடுவது என்ற நலன்புரிக் கழகத்தின் தீர்மானமானத்திற்கமைய இன்றைய ஒளிவிழா நடைபெறுவதாகவும், அனர்த்தங்கள் எமது வாழ்வோடு பின்னிப்பி ணைந்துள்ளது எனவும், அதிலிருந்து நாம் மீண்டெழுந்து வாழப் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிகளில் ஒவ்வொரு மனிதனின் உணர்வும் இருந்ததாகவும், இதன் மூலம் மனிதத்துவம் இன்னும் வாழ்வதாகவும் இதனையே பாலன் பிறப்பு உணர்த்துவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், எமது உத்தியோகத்தர்கள் நேரகாலம் பார்க்காமல், விடுமுறை நாட்கள் பார்க்காமல் உலர் உணவுப் பொருட்களை பாரவூர்திகளிலிருந்து இறக்கவும், அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதிலும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியதனை இச் சந்தர்ப்பத்தில் தெரிவிப்பது பொருத்தமாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும், 2025 ஆம் ஆண்டு மக்கள் பணி செய்வதற்கு இறைவன் நல்ல சந்தர்ப்பம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஏழைகளின் கண்ணீரை துடைக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், இன்றைய தினம் கடல் கடந்த அனலைதீவு, கடந்த வாரம் எழுவைதீவு மற்றும் நயினாதீவில் அங்குள்ள மக்களைத் தேடிச் சென்று நடமாடும் சேவை மூலம் அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ததில் மகிழ்வடைவதாகவும், எமது பணி மக்கள் நலன் சாா்ந்த விடயங்களையும் அவர்கள் தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதாகவும் இருக்கும் பட்சத்தில் அதன் பிரதிபலிப்பு அனைவரினதும் வாழ்விலும் ஒளிமயமாகவிருக்கும் என அரசாங்க அதிபர் தெரிவித்து, அனைவருக்கும் தமது கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சிறுவர்களின் வரவேற்பு நடனம், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் கரோல் கீதங்கள், பாடல்கள், நாடகம், நாதஸ்வர கச்சேரி மற்றும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், நன்றியுரை நலன்புரிக் கழகத்தின் செயலாளரும், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளருமான திருமதி கி. தயாபரி அவர்களால் நிகழ்த்தப்பட்டது. இறுதியாக நத்தாா் தாத்தா வருகையுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு கிறிஸ்மஸ் நத்தார் இசையுடன் விழா சிறப்பாக இனிதே நிறைவு பெற்றது. மேலும் குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 3 4 5 6 7 8 8 9 10 13 14 15 16 17 18 19 20 2122 24 25