தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.04.2026) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், தொழில்நுட்ப ரீதியாக செயற்பாடுகளை மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக ரீதியாக ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும், அதனை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து,
தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான பொறுப்புக்கள், உத்தியோகத்தர்களின் பதவியுயர்வு விடயங்கள், மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். மேலும், மாவட்டச் செயலக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப திருத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. கே.திருக்குமார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் செல்வி உ.தர்ஷினி, கணக்காளர் திரு. எஸ்.சுபாசன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மாவட்டச் கிளைத் தலைவர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






