ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தின் யாழ்ப்பாண மாவட்ட மட்ட கொடித் தின நிகழ்ச்சித் திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது "போதையற்ற ஓர் எதிர்காலம் ஆரோக்கியமான ஓர் தேசம்" எனும் தொனிப்பொருளில் ஆவரங்கால் சிவசக்தி மணி மண்டபத்தில் இன்றைய தினம்(2026.05.31) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பொ.ஸ்ரீவர்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் மேலதிக மாவட்ட பணிப்பாளர் நாயகமுமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள் கலந்து கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து தலைமையுரையுடன் வரவேற்புரையினை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ.ஸ்ரீவர்ணன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் மாவட்ட மட்ட கொடித் தின நிகழ்ச்சித் திட்டத்தினை அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சம்பிரதயாபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும் உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய மட்ட அமைப்பு பிரதிநிதிகளின் கௌரவிப்பு, குறுநாடகம், வங்கி தரப்படுத்தலில் சிறந்த பெறுபெறுகளை வெளிப்படுத்திய சமுர்த்தி வங்கிகளுக்கு தேசிய மட்டச் சான்றிதழ் வழங்கல், வங்கியில் கூடுதலான சேமிப்பை மேற்கொண்ட உத்தியோகத்தர் கெளரவிப்பு, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தொழிற்பயிற்சியினை பூர்த்தி செய்தவர்களுக்கு தொழில் பயிற்சிச் சான்றிதழ் வழங்கல் முதலான நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், சமுர்த்தி கணக்காளர், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






