யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், திணைக்களங்களில் பணி புரிகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் நிகழ்வு இன்றைய தினம் (05.08.2026) யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திருமதி சிவகாமி உமாகாந்தன், கற்கை நெறியின் வளவாளர் P.G.D சுனில் ஆரியரட்ன, வேலனை ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் எம்.அலெஸரீன், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் வடமாகாண இணைப்பாளர் N.உமாகாந் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது கலந்துகொண்டிருந்த அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, 150 மணித்தியால கற்கை நெறியினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களின் கற்கை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், இரண்டாம் மொழித்திறனானது தொழில் முன்னேற்றத்திற்கும் அரச சேவையின் செயற்திறனுக்கும் இன்றியமையாதது. ஏனெனில் இரண்டாம் மொழியான சிங்கள மொழியை சிறந்த முறையில் கற்றுக்கொள்வது அரச அலுவலக பணிகளை இலகுவாக மேற்கொள்ளவும், பதவி உயர்வு உள்ளிட்ட தொழில்முறை முன்னேற்றங்களுக்கும் பெரிதும் உதவும் எனத் தெரிவித்தார். மேலும், 150 மணித்தியால மொழிப் பயிற்சியுடன் கற்றலை நிறுத்திவிடாமல், NVQ உள்ளிட்ட மேற்படிப்புகள் மற்றும் சான்றிதழ் பயிற்சிகளின் ஊடாக மொழித்திறனை தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், முன்னைய காலங்களில் சுய கற்றல் ஊடாகவே பெருமளவானவர்கள் மொழி அறிவை மேம்படுத்திக் கொண்டனர். மேலும், Google Translate போன்ற மொழிபெயர்ப்பு செயலிகளை முழுமையாகச் சார்ந்திருக்காமல், முதலில் சிங்கள ஆவணங்களை வாசித்து புரிந்துகொள்ள முயற்சிப்பதன் மூலம் மொழியறிவும் கற்றலின் ஆர்வமும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
குறித்த மொழிப் பயிற்சியில் பங்கேற்ற பயிலுநர்கள் சிங்கள மொழித் திறனுடன், பாடல், நடனம் உள்ளிட்ட பல்வேறு தனித்திறமைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்ததை பாராட்டிய மேலதிக அரசாங்க அதிபர், நிகழ்வை ஒழுங்குபடுத்திய ஆசிரியருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தேசிய மொழிகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற இக் கற்கை நெறியில், யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு திணைக்களங்களில் கடமையாற்றும் 64 அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். அரச உத்தியோகத்தர்களின் ஆளுமை மற்றும் மொழிவாண்மையை மேம்படுத்துவதற்கும் அவர்களின் அலுவலக கடமையின் போது இரண்டாம் மொழி தொடர்பாடலை மேம்படுத்துவதற்காகவும் இக்கற்கை நெறி அரச உத்தியோத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 2 3 4 5 6 7 8 9 11 1012 13 14 15 16 1719 20 21