யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், இலங்கை டென்னிஸ் சங்கம் (SLTA) ஏற்பாடு செய்யும் இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் (SLTPL) போட்டியில் பங்கேற்கும் எட்டு நகர அணிகளில் ஒன்றான யாழ் ஃபிளமிங்கோஸ் (Jaffna Flamingos) அணியின் உத்தியோகபூர்வ அறிமுக விழா இன்று (20.08.2026) வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக ஷங்கர் ஃபூட்ஸ் (UK) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், யாழ்ப்பாணம் சிட்டி ஹோட்டலின் உரிமையாளருமான சந்திரசேகரம் கேதீஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக அருட்தந்தை அ.பி. திருமகன் அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மட்ட டெனிஸ் போட்டியில் பங்கேற்கும் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி வெற்றிபெற வேண்டும் என தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 10 வயதுடைய ரோஹன் தேசிய மட்ட அணியில் இடம்பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சிறுவயதிலேயே தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண டெனிஸ் வீரர்களுக்கு உயர்மட்டப் பயிற்சிகளையும் போட்டி அனுபவங்களையும் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாகவும், இதனால் தேசிய மட்டத்திற்கு வீரர்கள் தெரிவாகுவதில் சவால்கள் காணப்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். டெனிஸ் விளையாட்டு தற்போது விளையாட்டைத் தாண்டி பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் வளர்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், மாணவர்களை கல்வியுடன் இணைந்து விளையாட்டுத் துறையிலும் ஈடுபடுத்த பெற்றோர்கள் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார். எட்டு மாவட்ட அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் ‘யாழ் ஃபிளமிங்கோஸ்’ அணி தொடர்ச்சியான சுற்றுகளில் முன்னேறி வெற்றிபெற வேண்டும் எனவும் வாழ்த்துத் தெரிவித்தார்.
நிகழ்வுகள் :
அதிதிகளுக்கு வரவேற்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டது. இதன்போது, யாழ்ப்பாண மாணவர்களுக்கான டென்னிஸ் விளையாட்டின் எதிர்கால வாய்ப்புகள், இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் ஊடாகக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மற்றும் யாழ் ஃபிளமிங்கோஸ் அணியின் நோக்கங்கள், எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, யாழ் ஃபிளமிங்கோஸ் அணியின் முதலாவது உத்தியோகபூர்வ ஜெர்சி, மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் அணியின் உத்தியோகபூர்வ சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மேலும், அணியின் வீரர், வீராங்கனைகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வ அணிச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வில் C.L. Synergy Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோஹணன் சில்வா, இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் நிறுவனர், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உடற்கல்விப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர். ராஜசீலன், யாழ்ப்பாண மாவட்டத்தில் டென்னிஸ் விளையாடும் பாடசாலைகளின் மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இலங்கை டென்னிஸ் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் 30ஆம் திகதி வரை கொழும்பிலுள்ள இலங்கை டென்னிஸ் சங்கத்தின் கடினத் தரை மைதானங்களில் நடைபெறவுள்ளன. இத்தொழில்முறை லீக் போட்டியானது இலங்கையில் டென்னிஸ் விளையாட்டை மேம்படுத்துவதுடன், வணிக வருவாயை ஈட்டி, மீண்டும் டென்னிஸ் கட்டமைப்பு மற்றும் இளம் வீரர்களின் வளர்ச்சிக்காக முதலீடு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. யாழ் ஃபிளமிங்கோஸ் அணியானது யாழ்ப்பாணத்தின் டென்னிஸ் பாரம்பரியத்தை மீட்டெடுத்து, இளம் வீரர்களுக்கு நிலையான வளர்ச்சிப் பாதையை உருவாக்குதல், டென்னிஸ் தொடர்பான பொது விழிப்புணர்வை அதிகரித்தல், சமூக டென்னிஸ் மைதானங்களை மேம்படுத்துதல், சிறுவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் திறமையான வீரர்களை அடையாளம் கண்டு தேசிய, சர்வதேச மட்டங்களுக்கு வழிநடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் செயற்படவுள்ளது.
 
1 2 3 8 9 10 11 12 15 16 17