யாழ்ப்பாண மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில், சமாசப் பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07.09.2026) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சமாசத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தருதல், யாழ். மாவட்ட கால்நடை வளர்ப்போருக்கு நல்லினப் பசுக்கள் மற்றும் கன்றுகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் சமாசத்தினால் அரசாங்க அதிபரிடம் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, சமாசத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நடைமுறையில் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் மக்களின் வாழ்வாதாரத்திலும் மாவட்டப் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்துறைகளின் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளையும் ஆதரவையும் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் எனத் தெரிவித்தார்.
சமாசத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துக் கொள்வதற்கான கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், சமாசம் நீண்டகாலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதன்போது, சமாசத்திற்குச் சொந்தமான காணி இருப்பதாகவும், அக்காணியில் நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்கான விருப்பம் காணப்படுவதாகவும் சமாசத் தலைவர் தெரிவித்தார். எனினும், கட்டட நிர்மாணத்திற்குத் தேவையான போதிய நிதி வளம் தற்போது இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத பல கட்டடங்கள் காணப்படும் நிலையில், புதிதாக பாரிய கட்டடம் அமைப்பதற்கு முன்னர், ஏற்கனவே உள்ள அரச வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். அதன்படி, பயன்பாட்டில் இல்லாத பொருத்தமான அரச கட்டடங்கள் ஏதேனும் உள்ளனவா, அவற்றை சமாசத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்த முடியுமா அல்லது பொருத்தமான இடத்தில் செயற்படுத்த முடியுமா என்பன தொடர்பில் ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், சமாசத்திடம் காணப்படும் நிதி வளம், அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி உள்ளிட்ட சாத்தியமான நிதி மூலங்களை ஒருங்கிணைத்து, பொருளாதார ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமான தீர்வொன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். கோரிக்கைகளை முன்வைப்பது மாத்திரமன்றி, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து ஆராய்வதே முக்கியம் எனவும், கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் நாம் செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பரிசங்கஸ்வெவ கால்நடை விவசாயப் பண்ணையிலிருந்து, வடமாகாணத்தின் காலநிலைக்கு ஏற்ற வகையில் உயிர்வாழக்கூடிய பசுக்கள் மற்றும் கன்றுகளை உயிர் எடை அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர், தேவையான பசுக்கள் மற்றும் கன்றுகளின் எண்ணிக்கையைத் தெளிவாகக் குறிப்பிட்டு கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார். குறித்த கோரிக்கை கிடைக்கப்பெற்றதும், தமது சிபார்சுடன் கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவரிடம் முன்வைத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
சமாசத்தினால் முன்வைக்கப்பட்ட ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆராய்ந்து, நடைமுறையில் சாத்தியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், கால்நடை வளர்ப்புத் துறையின் மேம்பாடு தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான முறையில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் வடமாகாணப் பிரதிப் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சமாசத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






