
யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் 06.02.2021 அன்று காலை 9மணிக்கு கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், பொலிஸ்தரப்பினர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களின் கருத்துகளுக்கமைய மீளவும் மீளாய்வு செய்து மிகவிரைவாக விபரங்களை சமர்ப்பிக்க உரிய தரப்பினருக்கு கௌரவ அமைச்சரால் வலியுறுத்தப்பட்டது.யாழ். மாவட்டத்தின் முதன்மையான ஏற்றுமதிப் பொருளாக கடலுணவுகள் காணப்படுகின்ற போதிலும் இடைத் தரகர்களினால் சுரண்டப்படுதல் போன்ற சில காரணங்களினால் கடற்றொழிலாளர்களுக்கு பூரணமான பலன் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், யாழ். மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற கடலுணவுகளை கொண்டு செல்வதற்கான செலவையும் நேரத்தினையும் குறைப்பதுடன் நவீன தொழில்நுட்பத்தினை உள்வாங்கும் நோக்குடன் கொழும்பிற்கான புகையிரதத்தில் குளிரூட்டி பெட்டி ஒன்றை இணைத்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்ற முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், ஒவ்வொரு கடற்றொழில் சமாசங்களின் ஊடாகவும் கிராமிய வங்கிகள்கிராமிய கடன் திட்டங்களை அறிமுகப்டுத்துவதன் மூலம், நுண்கடன் திட்டத்திலிருந்து கடற்றொழில் சார் குடும்பங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
அதேபோன்று, கிராமிய கடற்றொழிலாளர் அமைப்பு, கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டு அமைப்புக்கள் செயற்பட்டுக் கொண்டிருப்பதனால் கடற்றொழிலாளர்கள் நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதால் இரண்டு அமைப்புக்களும் ஒரு அமைப்பாக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
குறித்த விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த கௌரவ கடற்றொழில் அமைச்சர், கடலுணவுகளை ஏற்றுவதற்கான குளிரூட்டிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும்,குறித்த குளிரூட்டி வசதியை புகையிரதத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன்கலந்துரையாடுவதாகவும், அதேபோன்று கடற்றொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்ட முன்மொழிவொன்றை அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
மேலும்,கடற்றொழிலாளர் சங்கங்கள் இரண்டு இருப்பதனால் ஏற்படக்கூடிய நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொள்வதாவும் இரண்டு அமைப்புக்களையும் இணைப்பது தொடர்பாக ஆராய்ந்துவருவதாக தெரிவித்ததுடன் கிராமிய கடன் திட்டம் தொடர்பாக பொருளியல் ஆய்வாளர் கலாநிதி அகிலன் போன்றவர்களுடன் கலந்துரையாடி சிறந்த பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதாகவும், காணி விடுவிப்பு தொடர்பாகவும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி சிறந்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






