யாழ் மாவட்ட மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய காலாண்டுக்கான தொழிற்சந்தை நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்அவர்களின் தலைமையில் இன்று (10.03.2022) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இச்தொழிற்சந்தை நிகழ்வில் 12 தொழில் தருநர்கள் தங்களிடமிருந்த 175 வேலைவாய்ப்புக்களுடன் பங்குபற்றியிருந்ததோடு தொழிலொன்றை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் 212 தொழில் தேடுவோரும் பங்குபற்றியிருந்தனர்.
இந நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள்,யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் அற்றவர்களுடைய வீதம் சராசரியாக ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது சற்று அதிகமாக காணப்படுகின்றது.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இளைஞர் யுவதிகள் அரசதுறை வேலைவாய்ப்பை நாடுவதன் காரணமாகவே யாழ் மாவட்டத்தில் தொழில் அற்றவர்களுடைய எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்றது எனவும், இதற்குப் பிரதானமான காரணம் பாடசாலைகளில் தொழில் வழிகாட்டி செயல் முறைகளை நாம் ஒழுங்காகச் செயற்படுத்திய போதிலும் அதனை மாணவர்கள் சரியாக பின்பற்றாமையே பிரதானமான காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டியதுடன் நமது பெற்றோர்கள் மாணவர்களிற்கு கல்வியை போதிப்பது மட்டுமல்லாது உரிய தொழில் வழிகாட்டி தொடர்பிலும் அக்கறையாக செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் எமது மாவட்டத்தில் வேலையற்றோரின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் கூறினாா்.
இந்நிகழ்வில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் , வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,தொழில் தருநர்கள், மற்றும் தொழில் தேடுவோரும் பங்குபற்றியிருந்தனர்






