வடக்கு நோக்கி செடி நாட்டுதல் - திட்டத்தின் யாழ்.மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகள் நேற்று 29.03.2022 காலை 9.18 மணிக்கு யாழ்.நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி அலுவலகத்தில் இடம்பெற்றன.
கொவிட் பெருந்தொற்று எல்லா நாடுகளிலும் சமூக, பொருளாதாரத் துறைகளில் பாரிய தாக்கங்கள் ஏற்படுத்திய நிலையிலும், இந்த நெருக்கடியிலிருந்து உருவான சவால்களை எதிர்கொள்வதற்காகவும், பசுமைச் சமூகப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கையை மாற்றுவதற்காக - அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத்திட்டத்திற்கமைய, கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிநடத்தலிலும்,நிதி அமைச்சரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும்,நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சரும், வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத்திட்ட மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்கான தேசியக்குழுவின் தவிசாளருமான கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களின் வழிநடத்தலிலும், உள்நாட்டில் உற்பத்தி செய்யத்தக்க உணவுப் பயிர்களைக் கிடைக்கச்செய்து, இறக்குமதிக்கான மாற்றீடுகளின் உள்ளூர் உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்கு முதலிடம் வழங்கப்பட்டு - தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கைப் புரட்சியினை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி ஆர்வமூட்டி, நேரடியாக பங்கேற்க நடடிவக்கை எடுக்கும் வகையில், “பசுமையான தேசம்” தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை - 2022 திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், வீடுகளைச் சுற்றி சுத்தமான சூழல் காணப்படும் நிலையில், நாளாந்த நுகர்வுக்கு தேவைப்படும் நச்சுத்தன்மையற்ற புதிய மரக்கறிகள், கீரைகள் மற்றும் கிழங்கு வகைகள், பழங்கள், பால், முட்டை போன்ற போசனை மிக்க உணவுகளை வீடுகளிலேயே பரஸ்பர குடும்ப அங்கத்தவர்களின் உதவிகளினூடாக அடைந்து உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியமுள்ள தன்னிறைவு பெற்ற குடும்ப அலகுகளாலான மக்கட்தொகையை உருவாக்குவதே இந்த “பசுமையான தேசம்” தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன்படி, அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சமுர்த்தி நாற்று மேடைகளினால் உருவாக்கப்பட்ட மரக்கறிச் செடிகள்( ஒரு வீட்டிற்கு 40 செடிகள் என்ற வகையில்) அந்த பிரிவின் பயனாளிகளுக்கு இயலுமானளவு பகிர்ந்தளிப்பதற்கும், வீட்டுத் தோட்டம் தொடர்பாக ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களினால் வழங்கப்படுகின்ற உள்ளீடுகள் ( தென்னங் கன்று, மருத்துவ மூலிகைச் செடிகள், பழக்கன்றுகள், சிறு ஏற்றுமதி போகச் செடிகள் ஆகிய) கிடைக்கின்ற ஒழுங்குமுறைகளுக்கமைய பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இவ் ஆரம்ப நிகழ்வில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்






