சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுஜன ஊடக அமைச்சும், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவும் இணைந்து "தகவல் அறியும் சட்டத்தினை கையாளுகையில் ஊடகவியலாளர்களுக்கு உள்ள சவால்கள்" தொர்பான கலந்துரையாடல் 29.06.2022 காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேற்கொண்டது..
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் கருத்துத் தெரிவிக்கும் போது " தகவலறியும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மக்கள் தமக்கான தகவல்களை பெறமுடிகின்றது. இச் சட்டம் மக்களுக்கான ஒரு உரிமையாகவும் காணப்படுகிறது. அத்தோடு தகவலறியும் சட்டம் அரச நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையோடு, ஊழலில்லாது மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க உதவுகின்றது. அந்த வகையில் சர்வதேச தகவலறியும் தினத்தினை முன்னிட்டு வெகுஜன ஊடக அமைச்சும், தகவலறியும் ஆணைக்குழுவும் கிராம மக்கள் மத்தியில் தகவல் சட்டத்தினை கொண்டு செல்லும் நோக்கோடு இக் கலந்துரையாடலை மேற்கொள்கின்றது. எனவே இச் சட்டத்தை சரியான வகையில் அனைவரும் பயன்படுத்த வேண்டும்" எனவும் தெரிவித்தார்.

மேலும், வட மாகாணத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தகவலறியும் சட்டத்தை அதிகளவு பயன்படுத்துகின்றீர்கள் அவ்வாறு பயன்படுத்தும் போது எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து கொள்ள இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்படுகிறது. அத்தோடு ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் மூலம் தகவலறியும் சட்டத்தை மேலும் வலுவூட்ட உதவும் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந் நிகழ்வில் தகவலறியும் ஆணைக்குழுவின் தலைவரும் நீதிபதியும் திரு.உபாலி அபேரத்ன (ஓய்வு நிலை), தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி கிஸாலி பின்ரோ, தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.முகமட் நகியா, தகவலறியும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் (பதில்) திரு.எஸ்.ஆர்.டபிள்யூ.எம்..ஆர்.பி. சத்குமார, சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியனாராட்சி,மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் மற்றும் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
29rti