யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்தும் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் உதவி மாவட்ட செயலாளருமான செல்வி உ.தர்சினி அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் 30.12.2024 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 04.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் உத்தியோகத்தர்களின் - புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்ற பிள்ளைகள் மற்றும் உயர்தரத்தில் சிறப்புச் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் உத்தியோகத்தர்களுக்கிடையிலான போட்டிகள், உத்தியோகத்தர்களின் கவிதை மற்றும் பாடல் இசை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் 27.12.2024 வெள்ளிக்கிழமை பி. ப 02.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்புற நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு எம்மிடம் உள்ளது எனவும், இன்றைய கலாசார பவனியில் தமிழர்களின் அரிய கலாசாரம் வெளிக்கொணரப்பட்டதாகவும், இதனை எமது இளஞ் சமூகம் அறிந்து பேணுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், தமிழர்கள் தம் பண்பாட்டில் மூத்தவர்களுக்கு மதிப்பளித்தல், கனம் பண்ணுதலுக்கு மிக முக்கியத்துவம் வழங்குவதால், நாமும் எமது மாவட்டத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய மூத்த நிர்வாக சேவை அதிகாரியும், சிறந்த ஆளுமைமிக்கவருமான அரியாலை மண்ணின் மைந்தன் முன்னாள் அரசாங்க அதிபர் உயர்திரு. செல்லையா பத்மநாதன் அவர்களை பிரதம விருந்தினராகவும், ஏனைய ஓய்வு பெற்றவர்களையும் எமது பண்பாட்டிற்கு அமையவே விருந்தினர்களாக அழைத்து கனம் பண்ணுவதாகவும் தெரிவித்தார். மேலும், எமது மூத்த கலைஞர்கள் மற்றும் இளங்கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பதும் எமது பண்பாட்டிற்கு அமைவானதே எனத் தெரிவித்து, கல்வியோடு இணைந்த வகையில் எமது கலைப் பொக்கிசத்தினை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என விழாவிற்கு வருகை தந்தவர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை அரசாங்க அதிபர் உயர்திரு செல்லையா பத்மநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டு அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி லாகினி நிரூபராஷ் அவர்களும், மற்றும் ஓய்வுநிலை அழகியல் உதவிப் பணிப்பாளரும் பன்னாட்டு ஆடற்கலை ஆற்றுகையாளருமான கலைஞர் வேல் ஆனந்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட ஓய்வுநிலை பிரதம கணக்காளர் உயர்திரு சுப்பையா சண்முகரத்தினம் அவர்களும், மற்றும் நல்லூர் பிரதேச செயலக ஓய்வு நிலை கலாசார உத்தியோகத்தர் திருவாட்டி ரஜினி குமாரசிங்கம் அவர்களும், கலந்து சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அரசாங்க அதிபர் உயர்திரு செல்லையா பத்மநாதன் அவர்கள் தமதுரையில், ஒரு சமூகம் தமது கலாசார பண்பாட்டு விழுமியங்களை அழியாமல் பாதுகாத்தல் கூட அபிவிருத்தியாகும் எனக் குறிப்பிட்டு, இஸ்ரேல் தேசமானது பல இழப்பிற்கும் மத்தியிலும் தமது மொழி மற்றும் மதக் கோட்பாட்டை இற்றைவரை பேணிவருவதனால் இன்று முன்னோடி நாடாகவே உள்ளது எனவும் ஆனால் கம்போடியாவில் அத் தேசத்தின் ஆவணச்சாலைகள் அழிக்கப்பட்டு இழப்புக்களை சந்தித்தமையால் அத் தேசம் மொழி கலாசாரம் அழிக்கப்பட்ட இனமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டு, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வதும் அபிவிருத்தியின் ஒரு அங்கமாகும் எனக் குறிப்பிட்டார். மேலும், எமது அரியாலை மண்ணில் நூற்றாண்டு கடந்த நிலையில் சுதேசிய விழா கொண்டாடப்பட்டு - எமது கலாசாரம் அழியாவண்ணம் பாதுகாக்கப்படுவதாகவும், அரியாலை மண்ணின் 106 வதுஆண்டு சுதேசிய விழாவிலும் அனைவரும் பங்குபற்றி மக்களின் அபிவிருத்தி வளர்ச்சி மற்றும் மக்களின் மகிழ்ச்சியிலும் பங்கெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வு ஆரம்பமாகவதற்கு முன்னர் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலிருந்து விருந்தினர்கள் கலாசார முறைப்படி மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன், இனியம், கோலாட்டம், சிலம்பாட்டம், குதிரையாட்டம் உள்ளடங்கலான கலாசார ஊர்வல பவனியும் சிறப்பாக இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நெல்லியடி சிவா குழுவினர் வழங்கிய மங்கல இசை நிகழ்வும், பருத்தித்துறை ஞானசம்பந்தர் கலாமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனமும், கொழும்புத்துறை கீதவாஹினி இசைக் கல்லூரி மாணவர்களின் வாத்திய பிருந்தா நிகழ்வும், வேலணை துறையூர் ஐயனார் கலாமன்ற மாணவர்களின் அம்மன் நடன நிகழ்வும் மற்றும் சங்கானை பதஞ்சலிஷேத்திரா நடனாலய மாணவர்களின் புத்தாக்க நடன நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், இந் நிகழ்வில் "யாழ்ப்பாணம் - 3 "நூல் வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற்றது. நூலின் முதற்பிரதியினைஅரசாங்க அதிபர் வெளியிட பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அரசாங்க அதிபர் உயர்திரு செல்லையா பத்மநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். நூலிற்கான நயப்புரை வழங்கிய கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் அவர்கள், இந் நூலானது வரலாற்றுப் பொக்கிசம் எனவும், எதிர்கால சந்ததிக்கு கையளிக்கும் மேன்மையுடைய நூலாகும் என "யாழ்ப்பாணம் - 03" நூலுக்கு பெருமை சேர்த்தார்.
மேலும் "யாழ் முத்து" விருது 15 கலைஞர் களுக்கும், இளங்கலைஞர் விருது 15 கலைஞர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பெரு விழாவானது வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரனையுடனும், யாழ் மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பெருந்திரளாக கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது மக்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து விழாவினைச் சிறப்பித்தனர்.
அனர்த்ததின் போது இறந்தவர்களை நினைவு கூருவதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கு நல்லாசி வேண்டும் முகமாக, மார்கழி 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு வருடந்தோறும் தேசிய ரீதியாக நினைவு கூரப்பட்டு வருகின்றது. அதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்றைய தினம் 26.12.2024 காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகி, சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
சர்வமத ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா அவர்களின் தலைமையுரையுடன், அரசாங்க அதிபரால் சிறப்புரையாற்றப்பட்டது.
அரசாங்க அதிபர் தமதுரையில், இதே தினத்தில் 20 ஆண்டு பின்னோக்கிச் செல்லும் போது இலங்கை தேசம் உட்பட பலநாடுகள் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக பாரதூரமான இழப்புக்களை சந்தித்த நாளாகும் எனவும், இலங்கையில் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டார்கள் எனவும், எமது மாவட்டத்தில் 1,005 பேரை சுனாமி ஆழிப்பேரலை காவுகொண்டுள்ளது எனவும், பாரியளவு சொத்தழிவுகள் ஏற்பட்டது எனவும், அதில் குறிப்பாக முழுமையாக 4,391 வீடுகளும், பகுதியளவில் 1,182 வீடுகளும் சேதமடைந்திருப்பதனை புள்ளிவிபரங்கள் தெரிவித்தாலும், அதற்கப்பால் இன்னமும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீளமுடியாத துயரத்தில் உள்ளார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும், மருதங்கேணியில் மேற்படி சுனாமி ஆழிப்பேரலக்குப் பின்னரான நிலமைகளை நேரடியாக கண்டதாகவும், இறந்தவர்களின் உடல்களையும், மரண ஒலங்களைக் கேட்டதாகவும், இது இன்று வரை ஜீரணிக்க முடியாத சம்பவமாகவுள்ளதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இனிமேலும் இவ்வாறு நிகழாமலிருக்க விழிப்புணர்கள் தேவை என்ற செய்தியினை சர்வதேசத்திற்கு சுனாமி ஆழிப்பேரலை ஏற்படுத்தியுள்ளதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாமலிருக்க முன்னாயத்த பொறிமுறையினை அனைவரும் சேர்ந்து எடுத்து பொறுப்புக் கூறுபவர்களாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவித்தார்.
சுனாமி முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வு காணோளி காட்சி ப்படுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்குபற்றினார்கள்.


யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகம் நடாத்திய வருடாந்த உத்தியோகத்தர்கள் கெளரவிப்பு நிகழ்வு கழகத் தலைவர் செல்வி உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் 26.12.2024 பி.ப 02.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபரும் நலன்புரி கழகத்தின் போசகருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
ஓய்வு பெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் தொடர்பாக அனுபவப் பகிர்வினை உத்தியோகத்தர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் இடமாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.


யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக இன்று பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் மானந்த யஹம்பத் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(23.12.2024) பி. ப. 04.00 மணிக்கு மரியாதை நிமித்தம் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.






