யாழ். மாவட்டச் செயலகத்தில் நிதி நிலைசார் நிகழ்நிலை மென்பொருள் (Computerized Integrated District Secretariat Accounting System) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (14.05.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் மென் பொருளானது அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்களான திரு.செல்வரத்தினம் சிவச்செல்வன் மற்றும் திரு. செல்வராஜா அமல்ராஜ் ஆகியோரால் அரச நிதி விதிமுறைகள் மற்றும் கணக்கீட்டு முறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இவ் மென்பொருளின் நோக்கமானது காலத்துக்கு காலம் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப வினைத்திறன் மிக்கதாக மேற்கொள்வதற்கும், சிறந்த உள்ளக கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், காலத்துக்கு காலம் கிடைக்கப்பெறும் நிதிசார் நடவடிக்கைகள் தொடர்பான மாற்றங்களை இற்றைப்படுத்துவதற்காகவும், மாவட்ட செயலகத்துடன் பிரதேச செயலகங்களை நிகழ்நிலையில் ஒருங்கிணைத்து எவ்விடத்திலிருந்தும், எந்நேரமும் துல்லியமான கணக்கீடுகளை மேற்கொண்டு காலதாமதமற்ற வெளிப்படையான மற்றும் உன்னதமான அரச சேவையை உறுதி செய்வதாகும் எனவும் தெரிவித்தார். மேலும், இதன் தனித்துவமான நன்மைகளாக மாத இறுதி கணக்கறிக்கைகளை விரைவாக தயார் செய்யலாம் என்பதுடன், நிதி கொடுக்கல் வாங்கல்களில் முழுமையான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாகும் எனவும் தெரிவித்து, இவ் மென்பொருள் உருவாக்க உறுதுணையாகவிருந்த பிரதம கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், இவ் மென்பொருளினை தனியார் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பது எனின் அதிக செலவுகள் ஏற்படும் எனவும், எமது உத்தியோகத்தர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டதால் எமக்கு எதுவித செலவும் இல்லாமல் வினைத்திறனான கடமைக்கு உறுதுணையாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாறான வினைத்திறனாக செயற்பாடுகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் இவ் மென்பொருளினை வடிவமைத்த உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபரால் மெச்சுரை வழங்கி கெளரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இவ் மென்பொருள் தொடர்பான பயனர் கையேடு (User Guide) அரசாங்க அதிபரினால் சகல பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா.ஜெயகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உள்ள சிறிய மாநாட்டு மண்டபமானது கூட்டங்கள் மற்றும் செயலமர்வுகள் நடாத்தும் வகையில் ஒலி அமைப்புக்கள் மற்றும் தளபாட வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் (14.05.2026) மு.ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் கணக்காளர்களுக்கான நிர்வாகக் கடமைகள் மற்றும் மக்களுக்கான சேவைகளை மேன்மேலும் வினைத்திறனாகவும் விரைவாகவும் வழங்குதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, அரசாங்க அதிபரினால் உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில், அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம்(14.05.2025) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த வாரம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றதாகவும், அக் கண்காட்சியானது 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றது எனவும், இனி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற முன்கூட்டி திட்டமிட்டு அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், இது உற்பத்தியாளர்களுக்கான சந்தை வாய்ப்பாகவும் அவர்களை ஊக்குவிக்கவும் மக்களை சென்றடையஉதவும் எனவும் தெரிவித்தார். மேலும், இவ்வாண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் ரூபா 08.65 மில்லியனில் நடைமுறைப்படுத்திவருகின்ற 08 திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களின் செயற்பாடுகளும் ஆராயப்பட்டது.
மேலும் இக் கூட்டத்தில் மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பிறிஜிற் நளாயினி உதயகுமார் அவர்கள் கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இக் கூட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, கிராம அபிவிருத்தி திணைக்களம் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்ரா சுதாகர் மற்றும் மாவட்ட பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அரசகாணி வேலை திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், வட மாகாண காணி ஆணையாளர் திரு. ஆர்.குருபரன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.05.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ள வேண்டிய காணிச் செயற்பாடுகள், காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தின் கீழ் காணிக் கச்சேரி மூலம் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டிய காணிகள், அரச காணியினை வர்த்தக நோக்குடன் கூடிய விவசாய நடவடிக்கைகளுக்காக நீண்ட கால குத்தகைக்கு வழங்கும் காணிகள், பிரதேச சபைக்கு ஆளுகைக்கு உட்பட்ட இதுவரை கையளிக்கப்படாத காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அரச காணிகள் குறைவாக காணப்படுவதால் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார். மேலும், மாகாண காணி திணைக்களத்தின் கீழ் பிரதேச செயலங்களில் கடமையாற்றும்
ஆளணியை ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும், அதனை மீள் ஒழுங்கு செய்யுமாறு மாகாண காணி ஆணையாளர் அவர்களை கேட்டுக்கொண்டார். மேலும், தற்போது ஹிமிகம திட்டத்தின் மூலம் காணி ஆவணங்களை வழங்குவதனை விரைவுபடுத்துமாறும், பிரதேச ரீதியாக காணி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்கான இறுதியான தீர்மானத்தை பிரதேச செயலாளர்கள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும், மக்களின் தேவைகளை சரியான வகையில் காணி உத்தியோகத்தர்கள் அடையாளம் கண்டு பிரதேச செயலாளர்களுக்கு தெரியப்படுத்தி சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கு வழியை ஏற்படுத்துமாறும் தெரிவித்ததுடன், வினைத்திறனாக செயற்பட்டு மாவட்ட காணி தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும் பின்வரும் அறிவுறுத்தல்களும் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது.
01.ஜூன் இறுதி வாரத்திற்குள் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தீர்வு காணப்பட வேண்டிய காணி தொடர்பான பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் காணி சம்பந்தப்பட்ட அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து கலந்துரையாடி தீர்வு காண வேண்டும்.
02.ஜூன் 25 ஆம் திகதி மாவட்ட காணி பயன்பாட்டுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக பிரதேச காணி பயன்பாட்டுக்குழு கூட்டத்தை நடாத்தி எடுக்கப்பட்ட தீர்மானங்களை மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவித்தார்.
03.டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக யாழ்ப்பாண மாவட்டத்தின் காணி தொடர்பான நடமாடும் சேவை ஒன்றினை மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நடாத்த ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
04.பிரதேச செயலகங்களில் காணி அளவீடுகளை மேற்கொள்ள நில அளவைத் திணைக்களத்திடம் முனவைக்கும் போது முன்னுரிமை அடிப்படையில் நில அளவைத் திணைக்களம் காணி அளவீடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், நில அளவைகள் திணைக்கள அத்தியட்சகர் திரு.பிறேமதாஸ், வட மாகாண உதவி காணி ஆணையாளர் செல்வி. ரி.விதுஷா, பிரதேச செயலாளரகள், மாகாண காணி ஆணையாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக காணி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அரச சேவையிலிருந்து இளைப்பாறும் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. விஜயரத்தினம் சுகுணளினி அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் உதவி மாவட்ட செயலாளர் செல்வி. உ. தர்சினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(13.05.2026) பி.ப 2.30 மணிக்கு யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது திருமதி.விஜயரத்தினம் சுகுணளினி அவர்கள், 1994.08.16ஆம் ஆண்டு தொடக்கம் கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் 2021.06.04 தொடக்கம் 2026.05.13 திகதிவரை சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள்,
கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இக் காலகட்டத்தில் கடமையாற்றியவர் எனவும், பின்னர் 2021 தொடக்கம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக கடமையாற்றியவர் எனவும், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழாக்களை2021 ஆம் ஆண்டு தொடக்கம் 2026 ஆண்டு வரை அனைத்தும் உரிய காலங்களில் சிறப்பாக நடைபெற காத்திரமான பங்களிப்பை வழங்கியமைக்கு சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. விஜயரத்தினம் சுகுணளினி அவர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் முதன் முதலாக 2021ஆம் ஆண்டு பண்பாட்டு விழாவில் "யாழ்ப்பாணம்" நூல் வெளியிடப்பட்டு தொடர்ச்சியாக ஆண்டுதோறும் அந் நூல் வெளியீடு செய்வதற்கு பங்களித்தமைக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், மாகாண, பிரதேச செயலக பண்பாட்டு விழாக்களிலும் கலாசார உத்தியோகத்தர்களை சிறப்பாக நெறிப்படுத்தி வழிப்படுத்தியவர் எனவும், அவருடைய ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய, வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந் நிகழ்வில், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு எஸ்.ரமேஷ்குமார், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளரும் நலன்புரிக் கழகத்தின் தலைவருமான திரு. எம்.வித்தியானந்தநேசன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ். சிவகுமாரன், கணக்காளர் (பெறுகை) திரு.சுபாசன், நிர்வாக உத்தியோகத்தர் திரு. கி. பொ. தனபால உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி. விஜயரத்தினம் சுகுணளினி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து
கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும், பண்பாட்டு பேரவை உறுப்பினர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதியாக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.விஜயரத்தினம் சுகுணலினி தமது ஏற்புரையில், இன்றைய பிரிவு உபசார விழாவிற்கு கௌரவித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், அரசாங்க அதிபர் அவர்கள் 2024 ஆம் ஆண்டிலிருந்து பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கும் பண்பாட்டு விழாவில் பொறுப்புக்களை வழங்கி விழா சிறப்பாக நடைபெற சிறந்த தலைமைத்துவத்தினை வழங்கி உறுதுணையாக இருந்தத மைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், மேலும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய அரசாங்க அதிபர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், இன்றைய நிகழ்விற்கு வாழ்த்துரைகள் வழங்கிய உத்தியோகத்தர்களுக்கும் நிகழ்வில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினையும் சிரேஷ்ட கலாசார உத்யோகத்தர் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






