தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.04.2026) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், தொழில்நுட்ப ரீதியாக செயற்பாடுகளை மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக ரீதியாக ஒழுங்குபடுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும், அதனை ஒழுங்குபடுத்தும் நோக்கில் இக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து,
தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான பொறுப்புக்கள், உத்தியோகத்தர்களின் பதவியுயர்வு விடயங்கள், மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார். மேலும், மாவட்டச் செயலக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப திருத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. கே.திருக்குமார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் செல்வி உ.தர்ஷினி, கணக்காளர் திரு. எஸ்.சுபாசன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மாவட்டச் கிளைத் தலைவர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

நடப்பாண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண சுற்றுப் போட்டிகள் இன்றைய தினம் (25.04.2026) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றைய ஆரம்ப போட்டி நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் நலன்புரிச் சங்கத்தின் போசகருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த போட்டித் தொடரினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இங்கு அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாண்டு க்கான அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணமானது இன்றைய தினம் வேலனை பிரதேச செயலாளர் பிரிவின் வேலனை மத்திய கல்லூரி மைதானத்தில் ஆண்களுக்கான துடுப்பாட்ட போட்டியுடன் ஆரம்பமாகி தொடர்ந்து, ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் சென். அன்ரனீஸ் மைதானத்தில் பெண்களுக்கான துடுப்பாட்ட போட்டியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது எனவும், இப் போட்டி ஏற்படுகளில் சிறப்பான பங்காளிப்பினை ஆற்றிவருகின்ற பிரதேச செயலாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், உண்மையில் உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பரஸ்பர நட்பினை வளர்த்தல், உடலியல் உளவியல் ரீதியான மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற வகையில் இப் போட்டித்தொடர் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகிறது எனவும், தொடர்ந்து ஏனைய போட்டித் தொடர்களும் பிரதேச செயலர் ரீதியாக இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும், உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இப்போட்டி தொடர்களில் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றனர் எனவும், அந்தவகையில் இப் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதனை ஆரம்பித்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
நடப்பாண்டுக்கான அரச அதிபர் வெற்றிக் கிண்ண தொடரானது ஆண் மற்றும் பெண்களுக்கான துடுப்பாட்ட போட்டியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பான மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக அணிகள் கலந்து கொள்கின்றன. இப் போட்டித்தொடரின் ஊடாக உத்தியோகத்தர்களிடையே பரஸ்பர தொடர்புகளை உருவாக்குதல், அவர்களின் திறமைகளை இனங்காணல், உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல் போன்ற பல்வேறு நோக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறன. இம் முறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு போட்டித்தொடர்களும் பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட வகையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், நலன்புரி கழகத்தின் தலைவரும், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளருமான திரு. ம. வித்தியானந்தநேசன் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், போட்டியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான உளசமூக மன்ற கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அண்மைக்காலமாக வெள்ளிக்கிழமைகளில் ஆலயம் செல்வது குறைவடைந்து வருவதாகவும், இதனால் பிள்ளைகளின் அறநெறி சார்ந்த விடயங்கள் குறைவடைந்து காணப்படுவதால் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்விநிறுவனங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி பிள்ளைகள் அறநெறி பாடசாலைகளுக்குச் செல்வதனை ஊக்கப்படுத்த அனைவரும் முன்வருமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்தல், உளவளத்துணை மற்றும் உள சமூக பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தற்போது மாவட்ட மட்டத்தில் காணப்படும் உளசமூக பிரச்சனைகளை அடையாளமான கண்டு அவற்றுக்கு இணைந்த வகையில் தலையீடுகளை மேற்கொள்வது பொருத்தமானதாக அமையும் என்பது தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திரு. பரா.நந்தகுமார், உள மருத்தவ வைத்திய அதிகாரி திருமதி அ.வினோதா, மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு ந.உதயகுமார் , அரச மற்றும் அரச சாா்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி அலுவலக ஆலோசகர்கள், பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் தொழில் அமைச்சரும், நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான கௌரவ போராசிரியர் (கலாநிதி) அனில் ஜெயந்த பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026). மாலை 06.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு வருகை தந்த கெளரவ அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்ற அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் மற்றும் தேவைப்பாடுகளை முன்வைப்பின் (Presentation) ஊடாக முன்வைத்தார்.
மேலும், இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ். கபிலன் அவர்களால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2027 - 2028 ஆண்டுக்களில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் முன்வைப்பின் ஊடாக முன்வைக்கப்பட்டது. இக் கூட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கான அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு விடயங்கள் கெளரவ அமைச்சரால் ஆராயப்பட்டது. இதன் போது முதலீடு மேற்கொள்வதற்கு - முதலீட்டுச் சபை மற்றும் ஏனைய திணைக்களங்களால் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான அனுமதியினை விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், 2027 மற்றும் 2028 ற்காக பாரிய திட்டங்களின் சாத்தியப்பாடான திட்டங்களை எதிர்வரும் ஆண்டுகளின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கெளரவ அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், மின்மாற்றிக்கான இயலளவு போதுமானதாக இல்லாத காரணத்தினால் சூரிய கலன் பொருத்துவதற்கான அனுமதியினை வழங்க முடியாதிருப்பதாகவும், அதற்கு இரண்டு ஆண்டுகள் எடுக்கும் எனவும், எனினும் மாற்று ஒழங்குகளுக்கான நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அமைச்சரால் மேலும் தெரிவிக்கப்பட்டது. மேலும், யாழ்ப்பாணத்தில் ஒப்புரவான அபிவிருத்திக்கு (Balanced Development) ஏற்றவகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கெளரவ அமைச்சரால் தெரிவிக்கப்பட்டதுடன், மாகாண மாவட்ட திட்ட முன்மொழிவுகளை ஒருங்கிணைந்த வகையில் அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், திறைசேரியின் பணிப்பாளர் நாயகம், தேசிய திட்டமிடல் பணிப்பாளர் நாயகம், தேசிய அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம், மேலதிக பணிப்பாளர் நாயகம், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி), மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், திணைக்களங்களின் தலைவர்கள், நிதி அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டிற்கான தந்திரோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு (SEA) தொடர்பாக பங்குதார்களுடனான கலந்துரையாடல் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.04.2026) காலை 09.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபை (SLSEA) ஒரு உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீட்டை (SEA) தொடங்கியுள்ளது எனவும், அதற்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்டத்தில்இன்றைய கூட்டம் நடைபெறுவதாகவும், இதன் முக்கிய முன்னெடுப்பானது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டைத் துரிதப்படுத்துவதையும், தந்திரோபாய திட்டமிடலை வலுப்படுத்துவதையும், நாட்டின் ஆற்றல் மாற்றத்தில் தனியார் துறை முதலீடுகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். அந்த வகையில் நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, சங்கானை, பருத்தித்துறை, மருதங்கேணி ஆகிய பிரதேசங்களில் சாத்தியப்பாட்டு மதிப்பீடுகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏனைய பிரதேச செயலகங்களிலும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், கடல்கடந்த தீவுகளான நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, நயினாதீவு ஆகியவற்றுக்கான சீரான மின் விநியோகம் தொடர்பாகவும், அத் தீவுகளில் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளதாகவும் (RO Plant), மின்சாரம் தடைப்படும் போது நீர் விநியோகம் தடைப்படுவதாகவும், ஆதலால் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், வீடுகளின் கூரைகளில் சூரிய கலன்களை (Solar Plant) பொருத்தி மின்சார உற்பத்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் இலங்கை மின்சார சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டும், மின்பிறப்பாக்கி (Transformer) இயலளவு போதாமை காரணமாக இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதாகவும், இது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். சூரிய ஒளி, காற்றாலை மற்றும் கடல் அலை மூலமாக மின் வலுவினை உற்பத்தி செய்யக்கூடிய பொருத்தமான இடங்களையும் சாத்தியமான சூழல்களையும் ஆய்வு செய்து மேற்கொள்வது தொடர்பாக முன்னேற்பாடக பங்குதாரர்களுடான கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆய்வு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது நிலையான அபிவிருத்தி மற்றும் ஆற்றல் மாற்றத்திற்கான அதன் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. அதற்கமைவாக ஆலோசனைச் சேவைகள், ஜப்பானைச் சேர்ந்த ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் கோ.லிமிடெட் (OCG) நிறுவனத்திற்கும், இலங்கையைச் சேர்ந்த கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் அண்ட் ஆர்க்கிடெக்ட்ஸ் அசோசியேட்டட் (பிரைவேட்) லிமிடெட் (CEAA) நிறுவனத்திற்கும் இணைந்து வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் (SLSEA) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குனர் பொறியியலாளர் திரு. சதுர வன்னியாராச்சி, உதவி இயக்குநர் திரு. பாலித அபயரத்ன, மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ். சிவகுமாரன், ஜப்பானைச் சேர்ந்த ஓரியண்டல் கன்சல்டன்ட்ஸ் குளோபல் கோ. லிமிடெட் (OCG) நிறுவனத்தினைச் சேர்ந்த ஆலோசகர்கள் ,உதவி பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.






