யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான முயற்சியாண்மை அபிவிருத்தி வதிவிடப் பயிற்சி நெறியின் (EDP) இறுதி நாள் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (21.09.2026) அரியாலை சர்வோதய நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 14.09.2026 அன்று ஆரம்பிக்கப்பட்ட இவ்வதிவிடப் பயிற்சி நெறி, தொடர்ச்சியாக 08 நாட்கள் இடம்பெற்றதுடன், இளம் முயற்சியாளர்களின் தொழில் முயற்சித் திறன்கள், வணிக முகாமைத்துவம் மற்றும் தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. இறுதி நாள் நிகழ்விற்கு சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். சசீபன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்ததுடன், பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த இளம் முயற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
அரசாங்க அதிபர் உரை :
அரசாங்க அதிபர் உரையாற்றுகையில், இங்கு பயிற்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில் தொழில் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றீர்கள். பல்வேறு சவால்களைத் தாண்டி இன்று தொழில் முயற்சியாளர்களாக வளர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. இளம் வயதிலேயே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு, தங்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், எதிர்காலத்தில் ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும், தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்கு அறிவு, திறன், மனப்பான்மை ஆகிய மூன்றும் அவசியம் எனவும், தொழில் தொடர்பான அறிவை தொடர்ந்து மேம்படுத்துவதுடன், பயிற்சிகள் மூலம் திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இன்றைய போட்டிமிக்க வணிகச் சூழலில் வாடிக்கையாளர்களை அணுகும் விதம், சேவை மனப்பான்மை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவை தொழில் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரே பொருளை அல்லது சேவையை பலர் வழங்கினாலும், வாடிக்கையாளரை அணுகும் விதமும் வழங்கும் சேவையின் தரமுமே எமது தொழிலை வேறுபடுத்திக் காட்டும். எனவே, கிடைக்கும் பயிற்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, புதிய அறிவையும் திறன்களையும் தொடர்ந்து பெற்றுக்கொண்டு, தமது தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், இளம் வயதிலேயே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களின் முயற்சிகளைப் பாராட்டிய அரசாங்க அதிபர், அவர்களின் தொழில் முயற்சிகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து, எதிர்காலத்தில் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
வதிவிட பயிற்சி நெறி :
இம்முறை ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டு அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் வளர்ந்து வரும் 25 இளம் முயற்சியாளர்கள் நேர்முகத் தேர்வு மூலம் மிகவும் துல்லியமாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் 16 முயற்சியாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 9 முயற்சியாளர்களும் உள்ளடங்குவர். இம்முறை புதிய திட்டத்தின்கீழ் 8 நாட்கள் வதிவிடப் பயிற்சியாக வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பங்குபற்றிய முயற்சியாளர்களுக்கு மேலும் 4 நாட்களைக் கொண்ட வியாபாரத்திட்டம் (Business Plan) தயாரிக்கும் தங்குமிடப் பயிற்சி ஒன்றினை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் முழுமையான அனுமதியுடன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் நிதி ஒதுக்கீட்டில், வடக்கு மாகாணத்திலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே இந்த விசேட பயிற்சி நெறி பிரத்தியேகமாக நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சியில் வவுனியா மாவட்டச் செயலக முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்கள் திரு. தர்மராஜா கிரிகரன் மற்றும் செல்வி. சி. கோகிலவாணி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வளவாளர்களாக பங்குபற்றினர். இன்றைய சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.







