யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச உதவியுடனான வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான கட்டுமணல் மற்றும் பூச்சு மணலை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் 04.09.2026 அன்று நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவும், 17.09.2026 அன்று வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தலைமையில் மணல் விநியோகப் பொறிமுறை தொடர்பாக அரசாங்க அதிபர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் அடிப்படையிலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (23.09.2026) கிளிநொச்சி மாவட்ட செயலாளருடன் தொலைபேசி மூலம் மேற்கொண்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 500 கியூப் மணலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணல் விலை அரச வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு ஒரு ரிப்பர் (3 கியூப்) மணல் ரூ.44,000 என்ற விலையில் வழங்கப்படவுள்ளது.( மேற்குறிப்பிட்ட தொகையில் போக்குவரத்துக் கட்டணம் உள்ளடக்கப்படவில்லை) மணல் தேவைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் :
ஏற்கனவே மணல் தேவைக்கான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்துள்ள பயனாளிகளுக்கு மேலதிகமாக, மணல் தேவைப்படும் ஏனைய அரச வீட்டுத்திட்டப் பயனாளிகளின் விபரங்களையும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தேவையான மணலின் அளவு மற்றும் தேவைகள் தொடர்பான விபரங்களையும் 25.09.2026 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.மேலும், ஏற்கனவே மணல் தேவைக்கான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்திருந்தும் இதுவரை மணலைப் பெற்றுக்கொள்ளாத பயனாளிகள், கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட பாரவூர்தி சங்கத்தில் மணலின் மாதிரியைப் பார்வையிட்டு, அதனைத் தொடர்ந்து உரிய பணத்தைச் செலுத்துமாறும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.