யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிறைக் கைதிகளுக்கு சாரணர் பயிற்சியை வழங்கி, சாரணர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு 25.09.2026 அன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட சாரணர் ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன், சிறைச்சாலைகள் ஆணையாளர் – வழங்கல் மற்றும் சேவைகள் திரு. B.D.M.G.B. திஸாநாயக்க, வட மாகாண சாரணர் ஆணையாளர் திரு. P. அஜித்குமார், யாழ்ப்பாண சிறைச்சாலை பொறுப்பதிகாரி திரு. S. இந்திரகுமார், சிறைச்சாலை நலன்புரி சங்கத்தின் உறுப்பினர் பிரபல வர்த்தக பிரமுகர் திரு. ஈ. எஸ். பி. நாகரெட்ணம் உள்ளிட்ட அங்கத்தவர்கள், சாரண தலைமையக மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள், மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், தேசியக் கொடி, சிறைச்சாலைக் கொடி மற்றும் சாரணர் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதமும் சிறைச்சாலை கீதமும் இசைக்கப்பட்டன. தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலை பொறுப்பதிகாரி திரு. S. இந்திரகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து, சிறைக் கைதிகளுக்கு சாரணர் சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. அரசாங்க அதிபரும், யாழ்ப்பாண மாவட்ட சாரணர் ஆணையாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் உரை: சிறைச்சாலையில் உள்ளவர்களை உரிய முறையில் ஆற்றுப்படுத்தி, அவர்கள் சமூகத்திற்குத் திரும்பிச் செல்லும் போது நற்பிரஜைகளாக செயற்படுவதற்கு தேவையான நல்ல பண்புகள், தலைமைத்துவத் திறன்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பது இத்தகைய புனர்வாழ்வு நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்தார். சிலர் தங்களது கடந்தகால செயல்பாடுகளின் காரணமாக சிறைச்சாலைக்கு வரவேண்டிய துரதிர்ஷ்டமான சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தாலும், அதிலிருந்து மீண்டு தமது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் திரும்பிச் செல்லும் போது புதிய சிந்தனைகள் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுடன் வாழ்க்கையை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், சாரணர் சின்னம் பெற்றவர்கள் தொடர்ச்சியாக சாரணர் பயிற்சிகளைப் பெற்று, நாட்டின் ஏனைய சாரணர் பயிற்சி நிலையங்களில் தமது பயிற்சிகளைப் பூர்த்தி செய்து, எதிர்காலத்திலும் சாரணர் இயக்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
“ஒரு நாள் சாரணர்;
வாழ்நாள் முழுவதும் சாரணர்” என்ற சாரணியக் கொள்கையின் அடிப்படையில், சாரணர் பயிற்சியின் ஊடாகப் பெற்ற தலைமைத்துவம், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நல்ல பண்புகளை வாழ்க்கையில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். கடந்த காலத்தை மறந்து புதிய வாழ்க்கையை நோக்கி முன்னேறி, நல்ல சிந்தனைகளையும் பழக்கவழக்கங்களையும் வளர்த்துக்கொண்டு சமூகத்தில் பொறுப்புள்ள நற்பிரஜைகளாக உருவாக வேண்டும் என்பதே அனைவரிடமும் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து சிறைச்சாலைகள் ஆணையாளர் திரு. B.D.M.G.B. திஸாநாயக்க உரையாற்றியதுடன், விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் தலைமை புனர்வாழ்வு அதிகாரி திரு. B. சுசிதரன் நன்றியுரை நிகழ்த்தினார்.
 
1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14