சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “திடமான உள்ளங்கள் – வளமான சிறுவர்கள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வு, உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி அவர்களின் தலைமையில் இன்று (01.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு வயாவிளான் கரிசல் இயற்கைப் பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், இலங்கை சிவபூமி அறக்கட்டளையின் தலைவருமான "செஞ்சொற் செல்வர்" கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களும், தோலகட்டி ஆச்சிரமத்தின் 2ஆம் பிராந்திய மேலதிகாரி அருட்பணி ஜோன்சன் இராஜசேகர் அவர்களும் கலந்து கொண்டனர். கௌரவ விருந்தினர்களாக CCH அரசசார்பற்ற நிறுவனத்தின் இயக்குநர் திரு. தி. மயூரன் அவர்களும், வயாவிளான் கரிசல் இயற்கைப் பூங்கா உரிமையாளர் திரு. R. K. அசோகன் அவர்களும் கலந்துகொண்டனர்.
அரசாங்க அதிபர் உரை :
சிறுவர்கள் தமது எதிர்காலத்தை வலுப்படுத்த நல்ல பழக்கவழக்கங்களையும் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் – அரசாங்க அதிபர் தெரிவிப்பு சிறுவர் தினத்தை ஒவ்வொரு வருடமும் மாவட்டச் செயலகத்திலும் பிரதேச செயலகங்களிலும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றோம். எனினும், இம்முறை சற்று வித்தியாசமான முறையில், இயற்கை எழில் நிறைந்த இந்த ரம்மியமான சூழலுக்கு உங்களை அழைத்து வந்து சிறுவர் தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். இத்தகைய சந்தர்ப்பத்தில், சிறுவர்கள் இந்த அழகான சூழலை முழுமையாக அனுபவித்து மகிழ்வதற்கு நாம் தடையாக இருக்கக்கூடாது. அதற்காகவே, இன்றைய நிகழ்வை மகிழ்ச்சியுடனும் சுதந்திரமான சூழலிலும் அனுபவிக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்துள்ளோம் என தெரிவித்தார்.
சிறுவர் பருவத்தை அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்த வேண்டும் :
இன்று நாங்கள் அனைவரும் வளர்ந்து பெரியவர்களாக இருக்கின்றோம். எவ்வளவு விரும்பினாலும், உங்களைப் போன்று மீண்டும் சிறுவர்களாக மாற முடியாது. அந்த ஏக்கம் எம்மில் பலருக்கும் இருக்கின்றது. எனவே, இன்றைய சிறுவர்களாக இருக்கின்ற நீங்கள், உங்களுக்குக் கிடைத்துள்ள இந்தப் பருவத்தை அர்த்தமுள்ளதாகப் பயன்படுத்தி, உங்களைச் சிறந்த முறையில் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். சவால்களை எதிர்கொண்டு எதிர்காலத்திற்குத் தயாராக வேண்டும் : ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு சவால்களும் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. அவற்றைச் சரியான முறையில் எதிர்கொண்டு, எதிர்காலத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது ஒவ்வொரு சிறுவரினதும் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.
நல்ல பழக்கவழக்கங்களும் பண்புகளும் அவசியம் :
நீங்கள் சிறுவர்கள் என்ற அடிப்படையில் உங்களைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஏனைய பெரியவர்களும் வழிநடத்த முடியும். இருப்பினும், நீங்கள் உங்களைச் சரியாக அடையாளப்படுத்திக் கொண்டு, உங்கள் செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாகவும், சமூகத்துக்கு ஏற்புடையவர்களாகவும், சமூகத்தால் விரும்பப்படுபவர்களாகவும், அதேவேளை சமூகத்தை நேசிப்பவர்களாகவும் நீங்கள் வளர வேண்டும் என்றால், நல்ல பழக்கவழக்கங்களையும் நல்ல பண்புகளையும் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார். இன்று உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த நேரத்தை நீங்கள் முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இன்றைய இந்த ரம்மியமான கரிசல் பூங்கா சூழலில் உங்கள் சிறுவர் தினத்தை மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அனைத்து சிறுவர்களுக்கும் எனது இனிய சிறுவர் தின நல்வாழ்த்துக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்வுகள் :-
இயற்கையோடு இணைந்த சிறுவர் தினக் கொண்டாட்டம் :இந் நிகழ்வின் சிறப்பு அம்சமாக, இயற்கையோடு இணைந்த வகையில் சிறுவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இக் கொண்டாட்டத்தில் 250 இற்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இயற்கை சார்ந்த செயற்பாடுகளுடன் சிறுவர்களின் மகிழ்ச்சியான வரவேற்பு இடம்பெற்றதுடன், விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறுவர் தின நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து இடம்பெற்ற வரவேற்பு நடனத்துடன், சிறுவர்களை மகிழ்வித்த கலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பொம்மலாட்டம் சிறப்பாக இடம் பெற்றது. விருந்தினர்களின் உரையினைத் தொடர்ந்து, CCH அரசசார்பற்ற நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பில் சிறுவர்களும் பெரியோர்களும் இணைந்து மகிழும் “உளம் மலரும்” விளையாட்டுகள், சிறார்களின் பங்கேற்புப் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன. இந் நிகழ்வுகள் சிறுவர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதுடன், மற்றும் சமூக ஒருங்கிணைப்புத் திறன்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்தன. நிகழ்வின் இறுதியில் சிறார்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டமை அவர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்தது. இந் நிகழ்வில் சிறுவர்கள், பெற்றோர்களுடன் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், கணக்காளர் திரு. சுபாசன், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. செந்தூரன் மற்றும் மாவட்ட பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் CCH அரசசார்பற்ற நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.







