யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டமும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம்(15.10.2026) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த கூட்டத்தின் தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மாவட்டத்தின் சுற்றாடல் பாதுகாப்பு, கழிவு முகாமைத்துவம், டெங்கு ஒழிப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, பின்வரும் அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், பின்வரும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
01.யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்கு துரித நடவடிக்கை.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு, ஆபத்தான மரங்கள் காணப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்ற வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஆபத்தான மரங்களை அகற்றுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து தேவையான வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் பெற்று, நடைமுறைகளுக்கு அமைவாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்நடவடிக்கைகளின்போது பொதுமக்கள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன், ஆபத்தான மரங்களை அகற்றுதல் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பிரதேச செயலாளர்களும் உள்ளூராட்சி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் காலதாமதமின்றி ஆராய்ந்து, அவற்றை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
02.சுற்றாடல் அதிகாரசபையின் வழிகாட்டல்:
மின்னணுக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி, நடைமுறைச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
03.திணைக்களங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு: மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் சுற்றுச்சூழல் மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.
04.தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகள்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எதிர்கொள்ளக்கூடிய சமூக மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
05.பிரதேச செயலாளர் மட்டத்தில் ஒலி அமைப்புகளின் உரிமையாளர்களுடன், பிரதேச சபைத் தவிசாளர்களின் பங்கேற்புடன் ஒரு மாத காலத்திற்குள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, ஒலி அமைப்புகளின் பயன்பாடு தொடர்பான பொதுவான நடைமுறைகளை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
06.மேலும், மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்புடன் டெங்கு பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், மழைக்காலம் நெருங்கி வருவதால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
07 சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை உரிய முறையில் அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் நோக்கில் பிரதேச செயலாளர் மட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுற்றாடல் குழுக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
08.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் புவிசார் வளங்களை அகழ்வது தொடர்பான மாவட்டக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள் குறித்து வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலத்திரனியல் கழிவுகளைத் திறம்படக் கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்!
இலத்திரனியல் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இக்கழிவுகளைத் திறம்படக் கையாள்வதற்கான நடவடிக்கைகளில் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சுற்றாடல் அதிகாரசபை Dialog Axiata PLC நிறுவனத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் லோ.கி. ஆனந்த் வரவேற்புரையாற்றியதுடன், நிகழ்ச்சியின் நோக்கம், சுற்றாடல் முகாமைத்துவத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வகிபாகம் மற்றும் அண்மையில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். தொடர்ந்து, இலத்திரனியல் கழிவுகளை விசேடமாகக் கருத்திற்கொண்டு கழிவு முகாமைத்துவ ஒழுங்குமுறைகள் தொடர்பில் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி செங்கமலச்செல்வி செந்துரன் உரையாற்றினார். இலத்திரனியல் கழிவு முகாமைத்துவத்தைச் சுழற்சிப் பொருளாதாரத்தின் ஊடாக ஊக்குவித்தல் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஸ்ரீ. அசோகரத்தினம் விளக்கமளித்தார். திண்மக் கழிவுகளைத் திறம்பட முகாமைத்துவம் செய்வது தொடர்பான விடய ஆய்வினைப் பருத்தித்துறை நகரசபைச் செயலாளர் திரு. C. பிரசாத் முன்வைத்தார். மேலும், E-Kunu திட்டத்தின் ஊடாக இலத்திரனியல் கழிவுகளைச் சேகரித்து முகாமைத்துவம் செய்வது தொடர்பில் Dialog Axiata PLC நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. தி. சிவகுகன் விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சித் திட்டமானது இலத்திரனியல் கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றுதல், அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல் மற்றும் சுற்றாடல் மாசுபாட்டைக் குறைத்தல் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சுற்றாடல் பாதுகாப்பில் அனைத்துத் தரப்பினரினதும் பங்களிப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விபரங்கள் :
இக்கூட்டத்தில் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அகழ்வுப் பொறியியலாளர், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 5 6 7 8 10