நவம்பர் முதல் பெப்ரவரி வரை விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபர் தலைமையுரை :
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தி, சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். மாவட்டத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் சாதகமான நிலைமையை உருவாக்க முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பிரதேச சபைகள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரினதும் ஒருங்கிணைந்த பங்களிப்புக்கு நன்றியையும் தெரிவித்தார்.
பருவமழைக் காலத்தில் அதிக அவதானம் :
ஒக்டோபர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், பருவமழையைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். மழைநீர் தேங்கக்கூடிய இடங்கள் மற்றும் நுளம்புகள் பெருகுவதற்கான சூழல்களை அடையாளம் கண்டு அகற்றுவதுடன், பொதுமக்களிடையே தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம் எனத் தெரிவித்தார்.
கழிவகற்றலை முறையாக முன்னெடுத்தால் :
வீடுகள் மற்றும் பொது இடங்களில் தேவையற்ற கழிவுகளை முறையற்ற வகையில் வீசுவதால் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான அபாயம் அதிகரிப்பதாகக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், கழிவகற்றல் தொடர்பான விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார். உள்ளூராட்சி மன்றங்கள் தமது பகுதிகளுக்கான கழிவகற்றல் அட்டவணைகளைத் தயாரித்து, அவற்றை பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம மட்டங்களுக்கு அறிவிப்பதுடன், கழிவுகளை உரிய முறையில் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் முறையாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் :
யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில், நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் மருதங்கேணி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய 11 பிரதேச செயலாளர் பிரிவுகளும் டெங்கு நோய்த் தாக்கம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், விமானப்படையினர் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து கள ஆய்வுகள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சையளிக்கும் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்த அவர், அனைத்து நிறுவனங்களினதும் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையையும் உயிரிழப்புக்களையும் குறைத்து, யாழ்ப்பாண மாவட்டத்தை ஆரோக்கியமான மாவட்டமாக மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி :
கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் அதன்படி, 2025ஆம் ஆண்டில் 1,591 டெங்கு நோயாளர்களும், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 1,206 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். மேலும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 93 நோயாளர்களும், செப்டெம்பர் மாதத்தில் 69 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டங்களை நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். வணக்கஸ்தலங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாதங்களில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், வெற்றுக் கொள்கலன்களை அகற்றுதல், மழைநீர் தேங்கும் வடிகால்களைச் சீரமைத்தல் மற்றும் வீடுவீடாகச் சென்று நுளம்புக் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.
டெங்கு ஒழிப்பில் உள்ளூராட்சி நிறுவனங்களின் பங்களிப்பு :
இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளதால், பிரதேச சபைத் தவிசாளர்கள் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து வெற்றுக் கொள்கலன்களைச் சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார் கிராம மற்றும் பிரதேச மட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டங்கள் ஊடாக மக்களுக்கு முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், துப்புரவுப் பணிகளை உரிய திட்டமிடலுடன் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உள்ளூராட்சி அதிகார சபைகளுடன் இணைந்து செயற்படுவதன் மூலமும், கிராம மட்டங்களில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலமும் டெங்கு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனப் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
கழிவு முகாமைத்துவத்தில் பொதுமக்களின் பொறுப்பு :
பொதுமக்கள் மத்தியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு காணப்பட்டாலும், சிலர் கழிவுகளை முறையாக அகற்றாமல் வீதிகளில் வீசுவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். எனவே, பொதுமக்கள் உள்ளூராட்சி அதிகார சபைகளுடன் இணைந்து முறையான கழிவு முகாமைத்துவ நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
வெற்றுக் கொள்கலன்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை :
பிரதேச செயலகங்கள் ஊடாகச் சேகரிக்கப்படும் வெற்றுக் கொள்கலன்களை ஒரு கிலோ கிராமுக்கு 30 ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்கு Offer Ceylon நிறுவனம் தயாராக இருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகளைப் பிரதேச செயலாளர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5