யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு, செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் திறன் விருத்திப் பயிற்சிப் பட்டறை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபரின் தலைமை உரை :
இப் பயிற்சிகளின் மூலம் பெற்றுக்கொள்ளும் அறிவையும் திறன்களையும் தமது பணிகளில் நடைமுறைப்படுத்துவதிலேயே அவற்றின் உண்மையான பயன் தங்கியுள்ளது எனத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ற இன்றைய சூழலில், அதன் நன்மைகளைப் பயன்படுத்திக்கொள்வதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியம் என வலியுறுத்தினார். குறிப்பாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகளைக் கையாளும் உத்தியோகத்தர்கள், செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்படும் போலியான படங்கள், குரல் பதிவுகள் மற்றும் தகவல்களுக்கும் உண்மையான தகவல்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளம் காணக்கூடிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். குடும்ப வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகக் கிடைக்கும் முறைப்பாடுகளை ஆராயும்போது, அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான குரல் பதிவுகள் மற்றும் தகவல்கள் சமூகத்தில் தவறான புரிதல்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றைச் சரியாக அடையாளம் கண்டு கையாள்வதற்கான அறிவும் திறனும் உத்தியோகத்தர்களுக்கு அவசியம் என அவர் தெரிவித்தார். அதேவேளை, உத்தியோகத்தர்கள் தமது அன்றாடப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும், தகவல்களைத் திரட்டுவதற்கும், பணிசார் திறன்களை மேம்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், உளவளத்துணைச் சேவைகளை வழங்கும் உத்தியோகத்தர்கள் தமது தொழில்சார் அனுபவங்களையும் திறன்களையும் தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொள்வதுடன், தமக்குக் கிடைக்கும் பயிற்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, மக்களுக்குத் தரமான சேவைகளை வழங்க முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்றிட்ட முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் :
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் தொடர்பாக Curveup Foundation நிறுவனத்தின் AI பயிற்றுவிப்பாளர் திரு. பூபாலசிங்கம் சாமுவேல் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு விளக்கமளித்தார். அத்துடன், செயற்றிட்ட முகாமைத்துவம், உளச்சோர்வுக்கு உள்ளாகாமல் வினைத்திறனுடன் பணியாற்றுதல் மற்றும் சக உத்தியோகத்தர்களுடன் சிறந்த முறையில் இணைந்து பணியாற்றுவதற்கான நுட்பங்கள் தொடர்பாக வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையின் சிரேஷ்ட தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை உத்தியோகத்தர் திரு. எஸ். இக்னேசியஸ் அவர்கள் வளவாளராகக் கலந்து கொண்டு கருத்துரைகளை :வழங்கினார். இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கை. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உளவளத் துணை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 5 6 7 855833534 1645124393679474 745772078637546126 n