நெதர்லாந்து நாட்டின் பதில் தூதுவர் திரு.ஐவன்ரூட்ஜென்ஸ் மற்றும் நெதர்லாந்து நாட்டின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சின் கொள்கை அதிகாரி திரு.ப்ராங் டீ வைல்ட் ஆகியோர் தலைமையிலான குழு யாழ்ப்பாண மாவட்ட நிகழ்கால நிலவரங்களை அறியும்பொருட்டான சந்திப்புக்களின் ஓர் அங்கமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுடன் இன்றையதினம் (08.02.2024) காலை 8.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள்.
இக் கலந்துரையாடலில் கொழும்பில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தின் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அரசியல் கொள்கை ஆலோசகர் திரு.நாமல் பெரேரா மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் பிரிவும் தேவை நாடும் மகளிர் அமைப்பும் (WIN) இணைந்து மாவட்ட மற்றும் பிரதேச மட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இணைய வன்முறை (Cyber)தொடர்பாக விழிப்புணர்வுப் பயிற்சி பட்டறையை நேற்று (07.02.2024) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேற்கொண்டது.
இப் பயிற்சி பட்டறையில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது இணையவழி குற்றம் மற்றும் இணையவழி மோசடிகள் தற்காலத்தில் அதிகரித்தவண்ணம் காணப்படுகிறது எனவும் இணையவழி மூலம் பெண்களிற்கு ஏற்படும் பிரச்சினைகள், போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் தெரிவித்தார்.
மேலும் இப் பயிற்சி பட்டறையில் Win நிறுவனத்தின் சேவைகள் தொடர்பாக நிறுவன முகாமையாளர் சித்ரா கஜானனன், இணைய வன்முறைகளின் அச்சுறுத்தல்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (Win) நிரோஜன், இணைய வன்முறைப் பாதிப்புகளுக்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக சட்ட உத்தியோகத்தர் (Win) இந்துகா மற்றும் இணையத்தள வன்முறை தொடர்பிலான பிரச்சினைகளும் சமகாலத்தில் தீர்வு காணக்கூடிய வழிமுறைகளும் தொடர்பாக காங்கேசன்துறை Oic கோணாவள மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ரஞ்சித்காந் ஆகியோர் விரிவுரைகளை மேற்கொண்டார்கள்.
இதில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்ட உளவள இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச உளவள உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயிற்சியாளர்களாக கலந்துகொண்டிருந்தார்கள்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வு 04.02.2024 காலை 8 மணிக்கு "புதிய தேசத்தை அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், அக வணக்கம், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை, பிரதம விருந்தினர் உரை, மற்றும் மரநடுகை நிகழ்வுகள் உள்ளடங்கலாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும்போது " எமது நாடு எதிர்நோக்குகின்ற பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து சமூக பொருளாதார பண்பாட்டு சரிவுகளிலிருந்து நாட்டை நேர் நிறுத்தி அபிவிருத்திப் பாதையை நோக்கி முன்னேற்ற வேண்டும் எனவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்கும் பொறுப்பு இன்றியாதது. ஆதலால் "புதிய தேசம் அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் 76ஆவது சுதந்திர தினத்தில் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்ப கிராம மட்டத்திலிருந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், 512 உப கட்டளைத் தளபதி பிரிகேடியர் லக்ஸ்மன் சமர திவாகர, காங்கேசன்துறை பிரதி பொலிஸ் அத்தியட்சகர் விஜயவர்த்தன மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விமானப்படை பிரதிநிதி , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புகள் திணைக்களம் மற்றும் JICA நிறுவனமும் இணைந்து இயலாமையுடைய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் ஆதரவை மேம்படுத்தும் செயற்திட்டம்(ESPD) தொடர்பான கலந்துரையாடல் (30.01.2024) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட ரில்கோ தனியார் விடுதியில் இடம்பெற்றது.
சமூக சேவைகள் திணைக்களமும் மனித வலு வேலைவாய்ப்பு திணைக்களமும், JICA நிறுவனமும் இணைந்து இயலாமையுடைய நபர்களுக்கு தொழில்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடந்தவருடம் பதினொரு இயலாமைக்குட்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதில் மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன், JICA நிறுவன பிரதிநிதி, மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள மாவட்ட செயலக இணைப்பாளர், யாழ் மாவட்டத்தில் பிரதேச செயலகரீதியாக தெரிவு செய்யப்பட்ட அங்கவீனர்கள் ,தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி செயற்திட்டத்தின் (UNDP) அனுசரனையின்கீழ் வடக்கு மாகாண பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை 01.02.2024 ஆம் திகதி முதல் 02.02.2024 ஆம் திகதி வரை யாழ் மாவட்ட நோர்த் கேட் (North Gate)தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இப் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் அவர்களும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம் அவர்களும் கலந்து கொண்டதோடு ஊடகவியலாளர்களுக்கு பயனுறுதிமிக்க ஊடகம்சார் விழுமியக் கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்கள்.
அத்தோடு அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், வெளிநாட்டு செய்தி பகுப்பாய்வாளருமான மோகான் சமரநாயக்க, தகவல் அறியும் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின்
ஆணையாளர் சட்டத்தரணி ஜகத் லியனாரச்சி, இலங்கை பத்திரிகை சபையின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான மஹிந்த பத்திரன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி நயனா சுரவி, வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் கே.பி ஜயந்த், வெகுசன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) திருமதி.செவ்வந்தி, வெகுசன ஊடக அமைச்சின் சட்ட அதிகாரி திருமதி. யுரேகா வேலாரத்ன, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடகப் பகுப்பாய்வாளர் சதுரங்க ஹபு ஆராய்ச்சி ஆகியோரின் வழிகாட்டலில் இப் பயிற்சிப்பட்டறை திறம்பட முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும், குற்றம் தொடர்பான அறிக்கையிடல், நிகழ்நிலை காப்பு பற்றிய சட்டமூலம், போலித்தகவல்களை பிரசுரித்தல் மற்றும் தொடர்புடைய சட்டங்கள், வெறுப்பு பேச்சு பற்றிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஊடக செயற்பாட்டின் போது கவனம் செலுத்த வேண்டிய தனியுரிமை பற்றிய சட்டப்பார்வை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இப் பயிற்சிப்பட்டறை யில் வடமாகாண ஊடகவியலாளர்களும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களும் பங்குபற்றியதோடு, அவர்களுக்கு குறித்த பயிற்சிநெறிக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.






