இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்படது.
01.சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை பிரதேச செயலக மட்டத்தில் ஆராயப்பட்டு தீர்க்கப்படுவதுடன், தீர்க்க முடியாத பிரச்சனைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைந்து தீர்ப்பதற்காகவே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
02.அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல் வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்ததுடன், சிறுவர் நலன்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
03.மாணவர் இடைவிலகல் தொடர்பாக இடைவிலகிய மாணவர்களின் குடும்பச் சூழல் பொருளாதார சூழல் காரணிகளை கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
04.இளவயது திருமணத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் போதைப் பொருள் பாவனை போன்ற சமூகப் புரழ்வான விடயங்கள் - அதிகமாக அடையாளம் காணப்பட்ட கிராமங்களில் அல்லது இடங்களில் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பினைப் பெற்று விழிப்புணர்வு வீதி நாடகத்தினை நடாத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
05.பிள்ளைகளின் பதிவு செய்யப்படாத பிறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவையினை நடாத்துமாறும், அந்தவகையில் உடுவில், சண்டிலிப்பாய், சங்கானை, காரைநகர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரிவிற்குரிய நடமாடும் சேவையினை உடுவில் பிரதேச செயலகத்தில் ஆவணி மாதம் 06 ஆம் திகதியும், சாவகச்சேரியில் ஆவணி 13 ஆம் திகதியும், வேலணை, ஊர்காவற்றுதறை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரிவிற்குரிய நடமாடும் சேவையினை வேலணை பிரதேச செயலகத்தில் ஆவணி மாதம் 21 ஆம் திகதியும், யாழ்ப்பாணம், நல்லூர் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த பிரிவிற்குரிய நடமாடும் சேவையினை நல்லூர் பிரதேச செயலகத்தில் ஆவணி மாதம் 27 ஆம் திகதியும் நடாத்த ஒழுங்கமைப்பினைச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட வர்களுக்கு அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இவை தொடர்பான அறிவுறுத்தல்களை பாடசாலை அதிபர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்குமாறும் அதிபர்களுக்கான கூட்டத் திகதியினை அறியத் தந்தால் எமது உத்தியோகத்தர்கள் மூலம் விபரமாக தெளிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
06.மாணவர்கள் தொடர்பான நலன்பேணுவதற்கும் விழிப்புணர்வு செயற்றிட்டங்களை நடாத்துவதற்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் தேவையான உத்தியோகத்தர்கள் இருப்பதனால், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
07.நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு மற்றும் எழுவைதீவிலுள்ள - சகல பாடசாலை களிலும் ஆவணி மாதத்தில் பொருத்தமான திகதிகளில் தொழில்கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வு செயற்றிட்டத்தினை நாடத்துமாறு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டதுடன், கூட்டத்தில் மேற்படி செயற்றிட்டத்தினை மேற்கொள்ள விருப்பத்துடன் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மேலும், அவர்களுக்கான போக்குவரத்து ஒழங்குகள் தம்மால் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
08.பாடசாலைகள் மற்றும் கிராமத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 06 மாத கால (யூலை - டிசெம்பர்) வேலைத் திட்டத்தினை (Work Plan) பிரதேச செயலகங்கள் தயாரித்து மாவட்டச் செயலகத்திற்கும் பிரதியினை வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தினார்.
09.பிரதேச செயலகங்களில் நடைபெறும் சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் அதிகாரியினை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாகாண சிறுவர் நன்னடத்தை உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டார். அரசாங்க அதிபர் அவர்கள் தமது பிரதம விருந்தினருரையில், தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் இந் நிகழ்வானதுதேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு எனவும், ஒருவருடைய வாழ்க்கைக்கு பிறப்புச் சான்றிதழ் மிகவும் முக்கியமானது எனவும் அந்தவகையில் 2021.01.01 இலிருந்து பிறந்த பிள்ளைகளுக்கு - சர்வதேச தரத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்படானது 08 ஆவது மாவட்டமாகவும், வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது மாவட்டமாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று விநியோகிக்கப்படுவது சிறப்பான விடயம் எனவும் தெரிவித்தார். மேலும், QR கோட்டினை உள்ளடக்கியதன் மூலம் இலகுவில் பிறப்புச் சான்றிதழை எடுக்ககூடிய வகையில் அமைந்துள்ளதுடன், ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து "எனது இலக்கம்" என்பது தேசிய அடையாள அட்டை இலக்கமாக வருவதன் மூலம் பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை தெரிந்து கொள்வதும் சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டார். மேலும், இச் சான்றிதழ் தமிழுடன் ஆங்கில மொழியும் சேர்த்து வழங்கப்படுவது சிறப்புக்குரியது எனவும் இதன் மூலம் மொழிபெயர்ப்பின் தேவைப்பாடு அவசியமற்றதாகின்றது எனவும் தெரிவித்தார். ஆதலால் பெற்றோர்கள் இவ் பிறப்புச் சான்றிதழ் பேணிப் பாதுகாக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய பிறப்புச் சான்றிதழை அரசாங்க அதிபர் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கினார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்ட விவாக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் சங்கத்தினால் அரசாங்க அதிபர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டமைக்காக அரசாங்க அதிபருக்குபொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி பதிவாளர் நாயகம், காணிப் பதிவாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பதிவாளர்கள், கிராமிய பிரதேச பதிவாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.

இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்ற திரு கே. சிவகரன் அவர்கள் முன்னர் வேலணை பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறைகளை தீர்ப்பதில் கிராம அலுவலர் பிரிவு மட்டக்குழுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு தரவுத்தளத்தில் தகவல்களை புதுப்பித்தல் குறித்த பயிற்சியாளர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (01.07.2025) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நலன்புரி நன்மைகள் "அஸ்வெசும" திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளும் தெரிவு செய்யப்படாமலிருப்பதாக பல முறைப்பாடுகள் வருகின்றன எனவும், அதனை நாம் தெரிவு பொறிமுறையில் (System) பிழை என தட்டிக்கழிக்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும், இத் திட்டத்தில் சரியான பயனாளிகளை உள்வாங்க வேண்டும் எனவும், அதற்கு பயனாளிகளின் மனக்குறைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் இப் பயிற்சி செயலமர்வினை உத்தியோகத்தர்கள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ் பயிற்சி செயலமர்வின் மூலம் கிராம மட்டத்தில் மனக்குறைகளை எவ்வாறு தீர்த்து தீர்வை காண்பது தொடர்பான விளக்கமளிக்கப்பட்டது. மேலும் கிராம மட்டத்திலும் தீர்க்கும் குழு நியமிக்கப்பட்டு பொறிமுறைகள் உருவாக்கப்படு தீர்வு காணப்படும் என்பதுடன், பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலும் தீர்க்கும் குழுவும் நியமிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கை. சிவகரன், நிபுணர் திரு. அமல் பிரியந்த, உதவி ஆணையாளர் எந்திரி இராஜசுரேஷ், உதவிமாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, வடக்கு மாகாணங்களின் மாவட்ட இணைப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேசங்களில் இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


வலுசக்தி அமைச்சிற்கு மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்லும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (30.06.2025) பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய
அரசாங்க அதிபர் அவர்கள்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் 02 வருடங்களாக மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பதவியினை சிறப்புற கடமையாற்றி இலங்கை நிர்வாக சேவைகள் விசேட தரத்திற்கு பதவியுர்வு பெற்றுச் செல்லும் திரு ஸ்ரீமோகனன் அவர்கள், ஊர்காவற்றுறையின் உதவி அரசாங்க அதிபராகவும் தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி பிரதேசங்களின் பிரதேச செயலாளராகவும் பணியாற்றி பின்னர், வடக்கு மாகாண கைத்தொழில் திணைக்கள த்தின் மாகாணப் பணிப்பாளராகவும் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் பணியாற்றியவர் எனத் தெரிவித்தார். மேலும், தன்னுடன் சமகாலத்தில் இலங்கை நிர்வாக சேவை கடமையில் இணைந்து கடமையாற்றிவருகின்றார் என தெரிவித்ததுடன், உத்தியோகத்தர்கள் தென்பகுதிக்கு கடமைமைக்கு செல்வது மிகவும் குறைவான நிலையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சிற்கு மேலதிகச் செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் செல்வது தொடர்பில் வாழ்த்து தெரிவித்ததுடன், மீள்குடியேற்ற பிரதேசங்களில் குறிப்பாக தெல்லிப்பளை பிரதேசத்தில் ஆற்றிய பணி காத்திரமானது எனவும், காணி விடுவிப்பு மற்றும் அபிவிருத்தி வேலைகளில் சிறப்புற கடமையாற்றியதன் அடிப்படையில் மேலதிக அரசாங்க அதிபர் காணிக்கான பொறுப்பினை சிறப்பாக கடமையாற்றியவர் எனவும் தெரிவித்து தனது வாழ்த்துக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர், கணக்காளர் (பெறுகை), பிரதித் தேர்தல் ஆணையாளர், சமுர்த்திப் பணிப்பாளர், சமுர்த்தி கணக்காளர், பிரதி பதிவாளர் நாயகம், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், காணிப் பயன்பாட்டு திட்டமிடலின் உதவிப் பணிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், மேலதிக மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் அவர்களினால் பொன்னாடை அணிவித்து
கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள்.
இறுதியாக மேலதிக அரசாங்க அதிபர் தனது ஏற்புரையில், இவ் விழாவினை ஏற்பாடு செய்த அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினருக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், அரச சேவையில் மாற்றம் என்பது மாறாதாது என்றவகையில் வகையில் என்னுடன் கடமையாற்றி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உத்தியோகத்தர்களும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.







