இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.பா. முகுந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் விளையாட்டு விழாவில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வருடாந்த விளையாட்டு விழாவானது பெரு விழாவாக முன்னைய காலங்களில் நடைபெற்றது எனவும், இவ் இறுதி நிகழ்வில் வீர வீராங்கனைகளின் எண்ணிக்கை குறைவாகவிருப்பதாகவும், பிரதேச மட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று பின்னர் மாவட்ட மட்டத்தில் நடைபெற்று மாகாண மற்றும் தேசிய போட்டிகளுக்கு வீர வீராங்கனைகள் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். விளையாட்டின் முக்கியத்துவம் கட்டாயத் தேவை எனவும் குறிப்பிட்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் தமதுரையில், பிரதேச செயலகங்களுக்கிடையிலான இன்றைய இப் போட்டியில் பங்குபற்றிய வீர வீராங்கனைகளின் எண்ணிக்கையினை பார்க்கும் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டுத் துறை வீழ்ச்சியடைந்துவிடுமோ என்ற ஐயம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் இது தொடர்பில் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள போட்டிகளில் கூடியளவு வீர வீராங்கனைகள் பங்குபற்றுவதை விளையாட்டு உத்தியோகத்தர்கள் உறுதிப்படுத்தி செயற்படுமாறு அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டு, யாழ்ப்பாண விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியில் பதக்கங்களின் அடிப்படையில் முதலாம் இடத்தினை தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும், இரண்டாம் இடத்தினை நல்லூர் பிரதேச செயலக அணியும், மூன்றாவது இடத்தினை சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.


இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்திற்கு பெருந்திரளாக கலைஞர் வருகை தந்தமையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு குறைந்தளவான கலைஞர்களே வருகை தந்தமையினால், இப் பொதுக் கூட்டத்திற்கு கூடியளவு கலைஞர்கள் வருகை தருவதனை கலாசார உத்தியோகத்தர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என தாம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் எமது யாழ்ப்பாண மாவட்டம் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணும் மாவட்டம் எனவும், கலைஞர் கெளரவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், அடுத்த சந்ததிக்கு எமது கலைகள் கலாசாரங்கள் எடுத்தச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனவும் தெரிவித்தார். மேலும், புலம்பெயர் தேசங்களில் எம்மவரால் கலைகள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட்டு வருவதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததுடன், அவர்களுடன் இணைந்து நிதி உதவிகளைப் பெற்று கிராமிய ரீதியாக கலை நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆண்டுக்கு ஒரு தடவை நடக்கும் பண்பாட்டுப் பெரு விழாவுடன் எமது செயற்பாடுகள் நின்றுவிடாது கலைகளை வளர்ப்பதற்கு உரிய ஆரோக்கியமான ஆலோசனை களை எமக்கு கலைஞர்கள் வழங்கி எம்மையும் ஊக்கப்படுத்தி எமது கலை கலாச்சார பண்பாடுகளை பேணவதற்கும் மேன்மேலும் வளர்ப்பதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
இப் பொதுக் கூட்டத்தில் ஆண்டுப் பொதுக்கூட்ட அறிக்கை மற்றும் கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டு அங்கத்தவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபையானது தெரிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையின் தலைவராக பதவி வழியாக அரசாங்க அதிபரும், செயலாளராக மாவட்ட கலாசார உத்தியோகத்தரும் மற்றும் நிர்வாக சபையில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் கலாசார உத்தியோகத்தர்களும் செயற்படுவார்கள். ஏனைய பதிவிகளுக்கானதெரிவுகள் நடைபெற்றது. அந்த வகையில், உப தலைவராக பேராசிரியர் என். சண்முகலிங்கன், உப செயலாளராக திரு. கே. தேவானந், பொருளாராக திரு. செ. மகேஷ் மற்றும் 15 நிர்வாக சபை உறுப்பினர்களாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக ஒரு கலைஞர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இப் பொதுக் கூட்டத்தில் 35 பேரைக்கொண்ட புதிய நிர்வாக சபையானது யாப்பின் பிரகாரம் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக செயலாளரும், மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தருமான திருமதி சுகுணாளினி விஜயரட்ணம் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது.
இப் பொதுக் கூட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட இளங் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு முன்மொழியப்பட்ட பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை இன்றைய தினம் (27.06.2025 ) பி.ப 4.00 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த வாரம் இடம்பெற்ற அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டில் குறித்த பிரச்சினை தொடர்பாக கோரிக்கை முன்வைத்ததாகவும், ஒருவார காலத்திற்குள் அமைச்சின் அதிகாரிகள் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அரசாங்க ஓய்வு விடுதிகள் (Circuit Bungalows) மாவட்ட மற்றும் பிரதேச செயலக முன்மொழியப்பட்ட மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்கு நன்றிகளை தெரிவித்தார்.
மேலும், அரசாங்க ஓய்வு விடுதிகளில் மேலதிகமாக தங்குமிட வசதிகள் மற்றும் குடிதண்ணீர் தாங்கி வசதி மற்றும் பிற தேவைகளுக்கான நீர் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துடன், அல்லைப்பிட்டியில் உள்ள பொது நிர்வாக அமைச்சிற்குரிய ஓய்வு விடுதி நீண்ட காலமாக செயற்படாமல் உள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அதனை வழங்கலாம் எனவும் ஆதலால் அவ் அல்லைப்பிட்டி ஓய்வு விடுதியினை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபரால் வலியுறுத்திக் கேட்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பொறியியற் பிரிவு பணிப்பாளர் நாயகம் (தொழில்நுட்பம்) பொறியியலாளர் திரு. யூ.எல்.ஏ. நசார் அவர்கள் தெரிவிக்கையில், இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சின் செயலாளர் அவர்களுடன் கலந்துரையாடி விரைவாக தீர்வினை பெற்றுக் கொள்ள வழிவகை செய்வதாக தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் பொறியியற் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (தொழில்நுட்பம்) பொறியியலாளர் ஆர்.டபிள்யூ. எல்.சந்திரசிறி, அமைச்சின் பொறியியற்பிரிவு கட்டட கலைஞர்கள், உயரதிகாரிகள்,
மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர்,
பிரதம கணக்காளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மாவட்ட செயலக பொறியியற்பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இலங்கை பொலிஸ் தலைமையகத்திற்கு உதவிப் பொலிஸ்மா அதிபராக (சட்டம்) பதவியுயர்வு பெற்றுச் செல்லும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஹாலிங்க ஜெயசிங்க அவர்கள்
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்றைய தினம் (27.06.2025) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க.ஸ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஹாலிங்க ஜெயசிங்க அவர்கள், கடந்த 1 1/2 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலத்துடன் ஒருங்கிணைந்து கடமையாற்றியதுடன், நடைபெற்று முடிந்த மூன்று தேர்தல்களும் வன்முறைகள் அற்ற ரீதியில் - நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றதற்கு பாதுகாப்பு கடமைகளை சிறப்பான முறையில் வழங்கினார் என்பதுடன், மாவட்டத்தில் நடைபெற்றுவரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







