தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 06.04.2022 பிற்பகல் மூன்று மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பணிப்பாளர் (யாழ்.போதனா வைத்தியசாலை), உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் (யாழ்ப்பாணம்), பிரதி ஆணையாளர் (கமநல அபிவிருத்தி திணைக்களம்), உதவிப் பணிப்பாளர் ( கடற்தொழில் நீரியல் வளங்கள் திணைக்களம்), மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், தொகைச்சாலை அதிகாரி ( இ.பெ.ச), பிராந்திய முகாமையாளர்( இ.பெ.ச), தலைவர்( வணிகர் கழகம்), பிரதம பிராந்திய முகாமையாளர் ( இ.பொ.ச), சாலை முகாமையாளர்கள் ( இ.பொ.ச) முகாமையாளர் ( எஸ்.வி.எம்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்

யாழ்ப்பாண மாவட்ட செயலக தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து சிறுவர் மற்றும் இளையோர்களை பாதுகாப்பதில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய தடுப்பு முயற்சிகள் தொடர்பான கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (06.04.2022) காலை 10 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
மேலும், இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதோடு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட பயிற்சி பட்டறையில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கிவைத்துள்ளார். அத்தோடு அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கும் போது "எமது சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சனையாக போதைப்பொருள் பாவனை காணப்படுவதோடு, பல சவால்களுக்கு மத்தியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தடுப்புமுயற்சிகளில் ஈடுபடவேண்டியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் லங்கா சதொசா மொத்த விற்பனை பரிமாறும் நிலையம் திறப்பு விழா லங்கா சதொசா சிரேஷ்ட முகாமையாளர் திரு.சஞ்சீவ வீர கொற்றகொட அவர்களின் தலைமையில் 04.04.2022 காலை பத்துமணிக்கு நாவற்குழியில் திறந்துவைக்கப்பட்டது .
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டதோடு, இவ் விற்பனை நிலையத்தின் மூலம் விரைவாக பொருட்களை பெற்றுக்கொள்ள முடிவதோடு, உள்ளூர் உற்பத்திகளையும் விற்பனை செய்யமுடியும். அத்தோடு மருந்துப் பொருட்களையும் களஞ்சியப்படுத்தி பரிமாற முடியுமெனவும் தெரிவித்தார்.

சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (05.04.2022) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் சிறுவர்களைப் பயன்படுத்தி யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதோடு, பதிவில்லாத விடுதிகளை கண்காணித்து சட்டநடவடிக்கையெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பாடசாலை மாணவர்களின் ஒழுக்கநெறிகள் மற்றும் இருபத்தொரு வயதிற்கு குறைந்தவர்களிற்கு சிகரெட் விற்றல், மருந்துச் சிட்டையில்லாது மருந்து வழங்குதல் மற்றும் பொது இடங்களில் நிகழும் சமூகசீர்கேடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளிற்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு (30.03.2022 )மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை , க.பொ.த.சாதாரணதர பரீட்சை, க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்த புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், இந் நிகழ்வில் புலமைப்பரிசிலின் நோக்கம், மேற்குலக நாடுகளின் தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.