நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்களுக்கு குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (01.04.2025) பி.ப.03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அவர்கள், கடந்த சனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற த் தேர்தல்கள் கடமைகளில் குழுக்களின் செயற்பாடுகள் திறமையாகவும், சிறப்பாகவும் இருந்ததாகவும் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்து, எமது மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களை வரவேற்பதாகவும், இடமாற்றம் பெற்றுச் சென்ற உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களுக்கும் தங்கள் அனைவரின் சார்பிலும் தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற அனைவரது ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல்கள் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை விடவும் மேன்மேலும் வினைத்திறனாக செயற்படுவது தொடர்பாக ஒவ்வொரு குழுக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்களை முழுமையாக ஆராய்ந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக வட்டாரங்களில் வாக்களிப்பு நிலையங்கள், வாக்கொண்ணுதல் முறைமைகள் போன்றவை தொடர்பாகவும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளடங்கலாக உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
மருதங்கேணியில் இயங்கிவருகின்ற பாதுகாப்பு இல்லம் (Safe House) தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (01.04.2025) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள் உள்ளிட்ட தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு - பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (28.03.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றியஅரசாங்க அதிபர் அவர்கள், சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மகளிர் தின நிகழ்வுடன் நின்று விடாது மாவட்டச் செயலக பெண்கள் பிரிவினால் மாவட்டச் செயலக பெண் உத்தியோகத்தர்களுக்கான யோகாசன வகுப்பு, மோட்டார் சைக்கிள் திருத்தும் பயிற்சி நடைபெற்றதன் தொடர்ச்சியாக இன்று பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையும் கண்காட்சியும் இடம் பெற்றுவருவதாகவும், பாலம் நிறுவனத்தின் அனுசரனையில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 15 பெண் முயற்சியாளருக்கான வாழ்வாதார திட்டத்திற்காக மொத்தமாக ரூபா 15 இலட்சம் வழங்கப்படவுள்ளதும் சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்டார். மேலும், இன்றைய காலகட்டத்தில் அரசாங்க சேவைகளில் அதாவது நிர்வாக மட்டத்தில் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் பெண்கள் அதிகளவில் உள்ளதாகவும் இதன் மூலம் சமுதாய வளர்ச்சிக்கு பெண்கள் காத்திரமான பங்களிப்பினை வழங்கிவருவதாகவும், பெண்கள் முன்னோக்கிய நிலைமையில் வளர்ச்சி அடைந்து செல்வதாக குறிப்பிட்டதுடன், சர்வதேச ரீதியாகவும் மேம்பட்ட நிலைமையே காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், பெண்களின் வேலைச் சுமைகளுக்கு மத்தியிலும், தற்போது பிள்ளை வளர்ப்பில் குறிப்பாக பிள்ளைகளின் கல்வியின் முன்னேற்றத்தில் தயார்மார்களின் அக்கறை மற்றும் பங்களிப்பு அதிகமாக காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், எமது மாவட்டத்தின் பெண்கள் அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பிரதேச செயல ரீதியாக தெரிவு செய்யப்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத் திட்டத்திற்கான கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன், 40 ற்கு மேற்பட்ட பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் மாலை 04.00 மணி வரை நடைபெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், காரைநகர் பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உதவிப் பிரதேச செயலாளர்கள், பாலம் நிறுவனத்தின் முகாமையாளர், வேல்ட் விஷன் திட்ட முகாமையாளர், Chrysali நிறுவன சிரேஸ்ட திட்ட இணைப்பாளர்,மாவட்ட பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.03.2025) பி.ப 03.00 அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் பருத்தித்துறை, மருதங்கேணி நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர் இந்திய முதலீட்டாளர் குழுவினர் உட்பட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பால்நிலை வன்முறை மற்றும் 1938,1929 உதவித் தொலைபேசி சேவைகள் தொடர்பாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (26.03.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் தலைமையுரையாற்றியமேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், எமது சமுதாயமானது கூட்டுக் குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபட்டுக்கொண்டிருக்கிறது எனவும், கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் தாய், தந்தை, பேரன், பேர்த்தி போன்ற குடும்ப அங்கத்தவர்களின் கண்காணிப்பு, காத்திரமான பாதுகாப்பு மற்றும் அன்பான கட்டளை இருந்ததால் சிறந்த குடும்பம் இருந்தது எனவும், தற்போது கூட்டுக்குடும்பம் வாழ்க்கை முறையில்லாமலிருப்பதும், குடும்பத்தில் அமைதியின்மை மற்றும் வன்முறைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்ததுடன், இதற்கு தொழில்நுட்ப அதீத பாவனையும் கூட காரணமாக அமைந்துள்ளதாவும், எமது பண்பாடுகள் மற்றும் கலாசாரத்தினைவிட்டு நாம் விலகிச் செல்வதும் இதற்கு காரணமாக அமைவதாகவும் தெரிவித்தார். மேலும், அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான இவ் விழிப்புணர்வுச் செயற்பாட்டின் மூலம் சமுதாயத்தில் நடக்கும் பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான கருத்தினையும் அதற்கான 1938,1929 இலக்க உதவித் தொலைபேசி சேவைகளையும் அறிந்து கொள்ளவும் ஏனையவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் உதவும் எனத் தெரிவித்தார்.
இச் செயலமர்வானது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாகவும், பால்நிலை வன்முறைகள் மற்றும் பாதுகாப்பு, சிறுவர்களுக்கு எதிராக வன்முறைகள் தொடர்பாகவும் மற்றும் பால்நிலை வன்முறைகள், குடும்ப வன்முறை மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக வளவாளர்கள் கருத்துரைகள் வழங்கினார்கள். இச் செயலமர்வில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மெய்யியல் மற்றும் உளவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ரி. திலீபன், சட்டப் பீடத் தலைவர் திருமதி கோசலை மதன், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர் திரு. ரி. ஜெகானந்தன் மற்றும் மாவட்ட உளவள உத்தியோகத்தர் திரு. பி. கோபி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் திருமதி எம். ஏ. பி. மஞ்சரி, உளவளத் துணை உத்தியோகத்தர் திரு. எஸ். விஜயகுமார, அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ரி. ஜெகானந்தன் ஆகியோர் பங்குபற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






