மாற்றுத்திறன் நபர்களுக்கான தேசிய தடகள விளையாட்டுப் போட்டியின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (11.04.2025) மு.ப 10.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
இவ் கெளரவிப்பு நிகழ்வில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அவர்கள் தமது உரையில், மாற்றுத்திறனாளிகளுக்கிடையிலான தேசிய விளையாட்டுப் போட்டியானது
03.04.2025 ஆம் திகதி கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது எனவும், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 450 போட்டியாளர்கள் பங்குபற்றியதாகவும், எமது மாவட்டத்திலிருந்து 16 போட்டியாளர்கள் பங்குபற்றி 02 தங்கப் பதக்கங்களையும் 03 வெற்றி சான்றிதழ்களையும் யாழ்ப்பாண மாவட்டம் பெற்றுள்ளது மகிழ்வான பெருமையான விடயம் எனவும். அந்தவகையில் வெற்றிபெற்ற சாதனையாளர்களை கெளரவிப்பதன் மூலம் எம்மை மகிழ்விப்பதாகவே அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், போட்டியில் வெற்றி தோல்வி என்பதற்குப் அப்பால் பங்குபற்றுவதே மிக முக்கியமானது எனவும் குறிப்பிட்டதுடன், அரசாங்க அதிபர் அவர்களுடன் இணைந்தவகையில் நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு துணைநிற்போம் எனக் குறிப்பிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
இந் நிகழ்வில் வரவேற்புரையானது உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி அவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன், வாழ்த்துரைகளை பிரதம கணக்காளர் திரு. செ. கிருபாகரன் அவர்களாலும், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் அவர்களாலும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் தேசியப் போட்டியில் குண்டெறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற திரு.தர்மலிங்கம் சிறிகாந் அவர்களும் தட்டெறிதலில் தங்கப் பதக்கம் பெற்ற செல்வி பாலசந்திரன் கிருசிகா அவர்களும் பொன்னாடை போர்த்தியும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும் கெளரவிக்கப்பட்டதுடன், ஏனைய வெற்றிச் சான்றிதழ் பெற்ற 03 போட்டியாளர்களும் மற்றும் போட்டியில் பங்குபற்றிய வீரர் வீராங்கனைகளும் கெளரவிக்கப்பட்டார்கள்.
நிகழ்வில் பங்குபற்றிய வீரர் வீராங்கனைகளின் அனுபவப்பகிர்வும் இடம்பெற்றது.
இறுதியாக நன்றியுரையினை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு. தி. உமாசங்கர் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

"நேர்மையான தேசத்தை நோக்கி" ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டனர்.
ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஆரம்பிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்றைய தினம் (09.04.2025) காலை 09.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது.
ஊழலிற்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அதிமேதகு சனாதிபதி அவர்களினால் ஆற்றப்பட்ட உரை காணொளி மூலம் காண்பிக்கப்பட்டது.
ஊழல் எதிர்ப்பு விழிப்பூட்டல் காணொளியும், ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை தயாரித்தல் மற்றும் அதன் முக்கிய பிரிவுகளை சுருக்கமாக விபரிக்கும் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டதுடன், ஊழலுக்கு எதிரான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை (2025 - 2029) உத்தியோகபூர்வமாக அதிமேதகு சனாதிபதி அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் நேரடியாக சகல மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் பங்குபற்றினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி 2025.03.26 ஆம் திகதி அன்று ஓய்வு பெற்ற திரு. எஸ், ஆர். சர்வேந்திரன் அவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (05.04.2025) மு.ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இவ் கெளரவிப்பு நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் தமது உரையில், ஓய்வு பெற்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. சர்வேந்திரன் அவர்கள் தன் கடமைகளை பொறுமையுடன் சிறப்பாக கையாண்ட உத்தியோகத்தர் எனவும், உத்தியோகத்தர்களுடன் பண்பாக பழகியவர் எனவும், மாவட்டச் செயலகத்தில் கடமையாற்றிய பின்னர் நெடுந்தீவு, வேலணை மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகங்களில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியவர் எனவும், குறிப்பாக தீவகப் பகுதியான நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேசங்களில் கடமையாற்றியமையானது சிறப்பான சேவை எனவும் குறிப்பிட்டார். மேலும் யுத்த காலங்களில் தன் கடமைகளிலிருந்து தவறாமல் பொறுப்புடன் சேவையாற்றிய உத்தியோகத்தர் எனவும் குறிப்பிட்டு புகழாரம் செய்தார். மேலும், அவரின் ஓய்வுக்காலம் குடும்பத்துடன் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இவ் கெளரவிப்பு நிகழ்வில் பிரதம கணக்காளர், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களால் வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தார். அதன் பின்னர் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்களாலும் திரு. சர்வேந்திரன் தம்பதிகள் கெளரவிக்கப்பட்டார்கள்.
இறுதியாக ஓய்வு பெற்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். ஆர். சர்வேந்திரன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
ஓய்வு பெற்ற திரு. எஸ். ஆர் சர்வேந்திரன் அவர்கள் அரசாங்க சேவையில் 1994 ஆம் ஆண்டிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தராக மாவட்டச் செயலகம் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலகத்திலும், பின்னர் 2009 ஆம் ஆண்டு பதவியுயர்வு பெற்று உதவித் திட்டமிடல் பணிப்பாளராக நெடுந்தீவு, வேலணை மற்றும் மாவட்டச் செயலகத்திலும், இறுதியாக 2021 ஆம் ஆண்டிலிருந்து சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகவும் கடமையாற்றி 26.03.2025 இல் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதம கணக்காளர், கணக்காளர், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
அஞ்சல் வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வு
உள்ளூர் அதிகார சபைத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (08.04.2025) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், கடந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கடமைகளை சிறப்பாக கடமையாற்றியதாகவும் அதற்கான நன்றியினைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு, இம் முறை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கடமைகளிலும் எம்முடன் இணைந்து ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் அஞ்சல் மூல வாக்களிப்பு நிலைமைகளில் பருத்தித்துறை நகர சபைக்கான 463 வாக்குச்சீட்டுப் பொதிகள் மற்றும் வேலணை பிரதேச சபைக்கான 305 வாக்குச்சீட்டுப் பொதிகளும் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், ஏனைய உள்ளூர் அதிகார சபைக்கான வாக்குச் சீட்டுப் பொதிகள் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய எதிர்காலத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஏப்பரல் மாதம் 22 ஆம் திகதி பொலிஸ், மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும் ஏப்ரல் 23,24ஆம் திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் ஏப்ரல் 28,29ஆம் திகதிகளில் தவறவிட்ட வாக்காளர்களுக்கான மீள அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துடன், தேர்தல் கடமைகளில் ஒருவரின் கவனயீனமான விடயங்களால்ஒருவரின் வாக்குரிமை பாதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்து தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது உள்ளூராட்சி தேர்தலில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான
கடமைகள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயமலர்வில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தட்சிப்படுத்தம் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையினைச் சேர்ந்த இரண்டாம் ஆம் வருட கலைபீட மாணவர்கள் இன்றைய தினம் (05.04.2025) மு.ப 10.00 மணிக்கு மாவட்டச் செயலகத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் தலைமையில் களவிஜயம் செய்தார்கள்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களைச் சந்தித்தார்கள். இதன் போது மாணவர்களை வரவேற்று உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள்,
அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல் வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக்குறிப்பிட்டார். மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக நிர்வாக் கட்டமைப்புகள், இலங்கை நிர்வாக சேவைகள் மற்றும் ஏனைய பதவிகளின் விபரங்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுவரும் கொடுப்பனவுகள், சமுர்த்தி வேலைத்திட்டம் மற்றும் மீளக்குடியமர் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, பட்டம் பெற்றவுடன் தனியே அரசாங்க வேலைகளை மட்டும் தங்கியிருக்காமல் தனியார் துறைகளிலும் தொழில் முயற்சிகளிலும் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் தெரிவித்து வாழ்த்தினார்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் போராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை அவர்களை அரசாங்க அதிபர் பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.






