யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (17.07.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்பு ரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி தேர்தல் பின்னராக இன்றைய கூட்டத்திற்கு வருகைதந்துள்ள கெளரவ தவிசாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், மாவட்டச் செயலகத்தினால் - மீள்குடியேற்றம் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 1258 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதிமேதகு சனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை க் கூட்டத்தில் 6 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 9 இலட்சம் ரூபாவாகவும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டிற்கான நிதி 15 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, அந்தவகையில் 9 இலட்சம் பெறுமதியான 53 வீடுகளுக்கும், 10 இலட்சம் பெறுமதியான 563 வீடுகளுக்குமான நிதியுமாக மொத்தமாக மாவட்டத்திற்கு 891 மில்லியன் ரூபா நிதி கிடைக்கவுள்ளதாகவும், மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா, மின்சார இணைப்பு செயற்றிட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா, கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000 மில்லியன் வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்படவுள்ளதாகவும் தெரிவித்துடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் சரியான முறையில் பயன்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் தமது தொடக்கவுரையில், எல்லாப் பிரதேச செயலக பிரிவுகளிலும்சமச்சீரான அபிவிருத்தி தேவை எனவும், அபிவிருத்தியினால் மக்களுக்கு ஏற்படும் பயன்களையும் ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், வடக்கு மாகாணத்திற்கு தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார திணைக்கள த்திற்கும் ஆளனிகளை நியமிப்பதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அபிவிருத்தி இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் பயன்படுத்த ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், சனாதிபதி அவர்களின் நோக்கமானது அனைவரும் ஒன்றிணைந்து துரிதமான அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதேயாகும் எனத் தெரிவித்தார். மேலும், உள்ளூராட்சி மன்றங்களின்தவிசாளர்களையும் வரவேற்ற ஒருங்கிணைப்புக் குழுவின் கெளரவத் தலைவர், அபிவிருத்தி க்கு தவிசாளர்களின் ஆலோசனை களையும் முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார் என்பதுடன், விசேடமாக வீட்டுத் திட்டத்தின் நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, இவ்வாண்டுக்குரிய அபிவிருத்தித் திட்டங்களைஇவ்வாண்டுஇறுதிக்குள் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்பதே சனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பு என்றும், அனைவரினதும் ஒத்துழைப்பினையும் நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களின்முன்னேற்றங்களும் ஆராயப்பட்டது. மேலும், திண்மக்கழிவகற்றல், வீட்டுத் திட்டத்திற்கான மணல் விநியோகம், பாதீனித்தியத்தைக் கட்டுப்படுத்தல், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திசாலை, தாளையடி குடிநீர் திட்டம், காங்கேசன்துறையில் அமைந்துள்ள சனாதிபதி மாளிகை உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா.ஜெயகரன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்த தேசிய விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.07.2025) மு. ப. 11.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், ஜனாதிபதி செயலகம் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரமாக யூலை 14 தொடக்கம் 18 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் . மேலும், இவ் தேசிய விழிப்புணர்வு வாரத்தில் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து பிரமிட் திட்டங்களில் ஈடுபடுவதனால் ஏற்படும் பாதகமான பொருளாதார விளைவுகள் மற்றும் பிரமிட் திட்டங்களின் பரவலைத் தடுக்க அத்தகைய திட்டங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார் .
இவ் விழிப்புணர்வு நிகழ்வின் வளவாளராக இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலக சிரேஷ்ட முகாமையாளர் திரு. கே. தர்மேந்திரா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு எஸ். சிவகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன்,
உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் உடுவில் பிரதேச செயலகம் கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (15.07.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் மருதனார்மடம் வட இலங்கை சங்கீத சபை மண்டபத்தில் நடைபெற்றது.
உடுவில் பிரதேச செயலாளர் திரு. பா. ஜெயகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அமரர் வேலையா அவர்களின் ஞாபகார்த்த அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யா/ இராமநாதன் மகளிர் கல்லூரி யிலிருந்து பண்பாட்டுப் பேரணியுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம், இசைச்சங்கமம், வில்லிசை, "வள்ளி திருமணம்" இசை நாடகம் என்பன சிறப்பாக நடைபெற்றது.
மூத்த கலைஞர்களுக்கான "ஞான ஏந்தல்" மற்றும் இளங்கலைஞர்களுக்கான இளங்கலைஞர் விருதுகள் என்பன அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.


சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்க அதிபர் வேண்டுகோள்"பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுறுத்துவோம்" எனும் தொனிப் பொருளில் - உலக சுற்றாடல் தினத்தின் மாவட்ட நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். பி. தவகிருபா அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.07.2025) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் திரு எஸ். சிவகரன் அவர்களும், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் அவர்களும், மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. கே. ஜே. பிரட்லீ அவர்களும், மத்திய சுற்றாடல் அதிகாரசபை யின் வட மாகாண பணிப்பாளர் திரு. ஆர். மகேஷ் யல்ரொட்டா அவர்களும், வேல்ட் விஷன் திட்ட முகாமையாளர் திரு. இ. பிரகாஷ் குமார் அவர்களும், வேல்ட் விஷன் தொழில்நுட்ப நிபுணர் திரு. நிமால் பிரேமதிலக அவர்களும் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் தமதுரையில், சுற்றாடல் பாதுகாப்புத் தினம் போன்ற தினங்களை கொண்டாடுவதன் நோக்கம் நாம் அதனை பின்பற்றுவதில்லை என்பதனை நினைவுபடுத்தவேயாகும் எனவும், நவீன உலகில் அபரிதமான பொலித்தீன் பாவனையானது எமது சுற்றுச்சூழலை பாதித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பாடசாலைகளில் மாணவர்களுக்கு திண்மக்கழிவு முறைமையினை பழக்கப்படுத்த வேண்டும் எனவும், விழிப்புணர்வு செயற்பாடுகளை பாடசாலைகளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்து, சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டியதுடன், சுற்றாடலைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் மரக்கன்றுகளும் அரசாங்க அதிபர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.மேலும், விழிப்புணர்வு நாடகம், மாணவர்களின் பேச்சு மற்றும் மாணவர்களின் விவாத நிகழ்வும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சமுர்த்திப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் (2025/26) - பாடசாலைப் பிரிவுப் போட்டிக்கான விண்ணப்பம் மற்றும் அளவுகோல்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (15.07.2025) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், உற்பத்தித்திறன் சார்ந்த போட்டி மற்றும் செயற்பாடுகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது எனவும், பாடசாலைகளில் உற்பத்தித் திறன் செயற்பாட்டின் மூலம் அடைவு மட்டங்களை அறிந்துகொள்வதுடன், முன்னேற்றமான பாதையில் செல்ல முடியும் எனவும் குறிப்பிட்டதுடன், இச் செயலமர்வுக்கு ஆர்வத்துடன் பங்கேற்றமைக்காக தமது பாராட்டுக்களை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவித்து பின்வரும் கருத்துக்களையும் முன்வைத்தார்.
1.பாடசாலைகளின் கட்டமைப்பில் முன்னரைவிட மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், உற்பத்தித் திறன் செயற்பாட்டிற்கு தலைமைத்துவத்தின் பங்கும் அனைவரும் ஒன்றிணைந்த அர்ப்பணிப்பும் அவசியம் எனத் தெரிவித்து, பாடசாலை களில் அவர் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கடமைக்கூறுகளை நேர்த்தியாக செய்வதன் ஊடாக இலக்குகளை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.
2.சில பாடசாலைகளில் மாணவர்கள் விபரங்கள் கணினி மயப்படுத்தியதன் மூலம் விபரங்கள் இலகுபடுத்தியுள்ளமை தம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டதுடன், ஆசிரியர்களின் நேரசூசி கூட கணினி மயப்படுத்தி நிர்வாக நடைமுறைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
3.பாடசாலைகளில் திண்மக் கழிவு முகாமைத்துவம் அவசியம் எனவும் மாணவர்களுக்கு அதனை முறையாக பழக்கப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
4.பாடசாலைகளில் ரம்மியமான - இயற்கையான சூழல் இருத்தல் வேண்டும் என்பதுடன் வகுப்பறைகள், அலுவலகங்களின் சூழலும் மற்றும் வெளிச்சூழலும் அழகாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதனால் மாணவர்களின் அகச் சூழலில் நல்ல முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
5.நேரமுகாமைத்துவத்தின் அவசியத்தினை அனைவரும் பின்பற்ற வேண்டும் இதனால் பல முன்னேற்றகரமான மாற்றங்களை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
6.உற்பத்தித் திறன் செயற்பாட்டை மாணவர்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தி வழிப்படுத்த வேண்டும் எனவும், இதன் ஊடாக மாணவர்கள் சமூகத்திலும் உற்பத்தித் திறன் செயற்பாட்டை எடுத்துச் செல்வார்கள் எனவும், இதனால் சமூகமும் நாடும் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவித்து அனைவரினதும் அர்ப்பணிப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டு கொண்டார்.
இச் செயலமர்வில் தேசிய உற்பத்தி செயலகத்தின்பிரதிப் பணிப்பாளர் திருமதி திலானி சுகந்திகா லியனகே அவர்களால் உற்பத்தித் திறன் செயற்பாடுகள் தொடர்பான அறிமுகவுரை நிகழ்த்தப்பட்டது.
இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட உற்பத்தித் திறன் இணைப்பாளர் திருமதி உ. சி. அனுஷியா, தேசிய உற்பத்தித் திறன் செயலக அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உற்பத்தித் திறன் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







