யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலாத்துறை, கழிவகற்றல் முகாமைத்துவம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக விரிவான கலந்துரையாடலானது உலக வங்கி குழுவினருடன்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (26.05.2025) பி.ப 03.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .
வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார அபிவிருத்தி உட்டுகட்டுமாணம் மற்றும் சுற்றுலா துறைகளை விருத்தி செய்வது தொடர்பில் தற்போதய அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் உலக வங்கி கடந்த இரண்டு மாதங்களாக பொருத்தமான திட்டங்கள் தொடர்பில் களத்தரிசிப்புக்கள் செய்து ஆராய்து அடிப்படைத்தரவுகளை பெற்றிருந்தது. இதன் இறுதி அங்கமாக துறைசார்ந்து காணப்படும் அபிவிருத்தி தேவைப்பாடுகள், தடைகள், அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள் மற்றும் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்து திட்டங்களை நிச்சியப்படுத்தும் வகையில் கடந்த மூன்று தினங்களாக வடக்கு மாகாணத்தின் உள்ள மாவட்ட செயலாளர்களை சந்தித்து வருகின்றனர், அவ்வகையில் இன்றைய தினம் உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் திரு. அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் மற்றும் உலக வங்கியின் ஏனைய பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆறு பேர் யாழ்பாண மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியதுடன், அதனைத் தொடர்ந்து துறைசார் திணைக்களங்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபரால் மாவட்டத்தின் விவசாயம், மீன்பிடி அபிவிருத்திக்கான தேவைகள், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை கைத்தொழில் வலயத்திற்கான புதிய முதலீடுகள், யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்றவற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல், சரசாலை மற்றும் மண்டைதீவு சிறுதீவுப் பகுதிகளை சூழல்சார் சுற்றுலா மையங்களாக மாற்றுதல், நெடுந்தீவினை சுற்றுலா நோக்கில் முழுமையான அபிவிருத்தி கொண்ட தீவாக மாற்றுதல் போன்ற விடயங்களுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச ரீதியாக டிஜிற்றல் அடிப்படையிலான வானிலை அவதானிப்பு நிலையங்களை நிறுவுதல் போன்றவற்றுக்கான நிதி தேவைப்பாடு குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மேலும், மீன்பிடி படகுத்தள அபிவிருத்தி ,போதைவஸ்து பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான புனர்வாழ்வு நிலையம், உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாகாண ரீதியான காப்பகம், மற்றும் யாழ்ப்பாண நகர அபிவிருத்தி வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி, கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம், கழிவகற்றல் முகாமைத்துவம் போன்ற விடயங்களுக்கான அவசியப்பாடு குறித்து உலகவங்கி பிரதிநிதிகளிடம் அரசாங்க அதிபர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் செயற்றிட்டங்கள் முன்னுரிமையாகவுள்ளதாக உலக வங்கி குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது.
1.யாழ்ப்பாண நகர வெள்ள வடிகாலமைப்பு அபிவிருத்தி
2.கழிவு நீர் சுத்திகரிக்கும் செயற்றிட்டம்
3.மாவட்டத்திலுள்ள குளங்களை புனரமைக்கும் செயற்றிட்டம்
4.யாழ் நகர திண்மக்கழவு முகாமைத்துவம்
5.யாழ்ப்பாண கோட்டை மற்றும் யாழ்ப்பாண பழைய கச்சேரி போன்ற வற்றை மரபுசார் சுற்றுலா நோக்கில் விருத்தி செய்தல்
6.யாழ்ப்பாண மாவட்டத்தில் மீன்பிடி படகுத்களம் மற்றும் மீன்பிடி துறைமுக அபிவிருத்தி
7.அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கான புதிய முதலீடுகள்
8.உள்ளுராட்சி சபைகளின் திண்மக்கழவு முகாமைத்துவம்
இக் கலந்துரையாடலின் போது, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமையாளர் மற்றும் செயற்றிட்ட தலைவர் ஆகியோர் அரசாங்க அதிபரால் முன்னுரிமைப்படுத்தி முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்களை கருத்தில் கொள்வதாகவும், இச் செயற்றிட்டங்கள் தொடர்பிலான திட்டங்கள், செயற்றிட்ட முன்மொழிவுகள் மற்றும் சாத்தியப்பாட்டு அறிக்கைகள் போன்றவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கோரியிருந்தனர்.
இக் கலந்துயாடலின் இறுதியில் யாழ்ப்பாண பழைய கச்சேரி வளாகத்திற்கு உலக வங்கிக் குழுவினரை அரசாங்க அதிபரால் அழைத்துச் செல்லப்பட்டு புனரமைப்பின் அவசியம் தொடர்பில் நேரடியாக விளக்கமளிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர், மாநகரசபை பிரதம பொறியிலாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி மற்றும் உதவிப் பணிப்பாளர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அதிகாரசபையின் மாகாணப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் சுற்றுலா துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ( 25.05.2025 ) மு. ப 11.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ நா. வேதநாயகன், ஆளுநர் வடமாகானம் அவர்களும், சிறப்பு விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சமூகப் பாதுகாப்புச் சபையின் ஊடக ஓய்வூதியத் திட்டத்தில் அதிகளவு பயனாளிகளை உள்வாங்கி யாழ் மாவட்டம் 11 தடவைகள் தேசிய விருதிற்கு தெரிவாகியுள்ளது எனவும் இதற்கு பிரதேச செயலர்களின் பங்களிப்பு முக்கியமான காரணம் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இன்றைய பிரதம விருந்தினரான கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய போது அவர் எமது மாவட்டத்திற்கு மேற்கொண்டிருந்த அர்ப்பணிப்பான பணிகளில் சமூக பாதுகாப்பு சபையின். ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டதுடன் இவ்வாறான ஒருவர் இன்றைய நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருப்பது சிறப்பானது எனவும் குறிப்பிட்டார்.மேலும்,
இன்று தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 138 மாணவர்களிற்கு புலமைபரிசில் வழங்கப்படுகின்றது சிறப்பானது எனவும், இதனுள் 4 மாணவர்களிற்கு 50,000 ரூபாவும், 3 மாணவர்களிற்கு 25,000 ரூபாவும், ஏனையோரிற்கு 5,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
பிரதம விருந்தினரான கௌரவ ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போது, மாணவர்களிற்கு கல்வியே உயர்ச்சியை வழங்கும் எனவும் அதனூடாகவே சிறந்த தலைமைத்துவம், பண்புகள், கீழ்படிவுள்ள சமுதாயத்தை தோற்றுவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டதுடன், இன்று புலமைபரிசில் பெறும் மாணவர்களிற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சீரான வினைத்திறன் மிக்க செயற்பாட்டிற்கு தனது பாராட்டினையும் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உரையாற்றும் போது, மாணவர்கள் எதிர் காலத்நில் நற் பிரஜைகளாக உருவாக வேண்டும் எனவும், மாணவப் பருவத்திலேயே ஓய்வூதிய உரித்தை வழங்கும் சமூக பாதுகாப்பு சபையின் செயற்பாட்டையும் மிகவும் பாராட்டினார்.
இந் நிகழ்வில் சமூக பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்ட இணைப்பாளர் திரு. பா.பிரதீபன், வட மாகாண கல்வி அமைசின் மாகாண பணிப்பாளர் திரு. பிறட்லி ஜெராட், வலய கல்வி பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக பிரமுகர்கள், தேசிய அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர், பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தலில் வினைத்திறனான செயற்பட்டு வரும் சுகாதார த்துறையினர், உள்ளூராட்சி துறையினர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தற்போது மழை பொய்துவருவதால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பொது மக்களுக்கான போதிய விழிப்புணர்வின் அவசியத்தினையும் எடுத்துக்கூறினார். மேலும், விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு கிராம மட்ட உத்தியோகத்தர்களை வழிப்படுத்துமாறும் பிரதேச செயலாளர்களை கேட்டுக்கொண்டதுடன், கழிவகற்றல் தொடர்பாகவும் சரியான பொறிமுறையின் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.
மேலும் இக் கூட்டத்தில்
முன்னெச்சரிக்கையாக டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2.2025 ஆம் ஆண்டு டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர் தமது பிரதேச செயலகங்களில் ஜீன் மாதம் முதல் 3வது புதன்கிழமை 2.30 மணிக்கு டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுக்கூட்டம் நடாத்துவதுடன் அதன் கூட்டக்குறிப்பு மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடுமாறும் கோரப்பட்டது.
3.கிராம மட்ட டெங்குக் குழுக்கூட்டத்தினை ஜீன் மாதம் முதல் 1வது, 2வது செவ்வாய்க்கிழமைகளில் நடாத்துவதற்கும் அது தொடர்பான கூட்டக்குறிப்பு பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடுமாறும் கோரப்பட்டது.
4.ஜீன் 1ஆம் திகதி முதல் முன்மாதிரியாக மாவட்ட செயலகம் மற்றும் பாடசாலைகளில் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனவும், அவ்வாறு தரம் பிரிக்காமல் காணப்படுமாயின் அதற்குரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய திணைக்களங்கள் கால அவகாசத்திற்கு அமைய, ஜீலை 1ஆம் திகதி முதல் இந் நடைமுறையை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டது.
5.பிளாஸ்டிக், பொலித்தீனை கட்டுப்படுத்தல் தொடர்பான நடைமுறைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் பொதுமக்களுக்கு அது தொடர்பான சரியான அறிவுறுத்தல்களை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
6.கழிவுகளை வீதிளில் கொட்டுவதை குறைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபையினாலும், கோப்பாய் பிரதேச சபையினாலும் கண்காணிப்பு கமரா (CC TV) பொருத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.05.2025) பி. ப 04.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இன்றைய கூட்டத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டம், வீட்டுத் திட்டம், குடிநீர், போன்ற திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் தலைமையில் ஆராயப்பட்டு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம், வீதி அபிவிருத்தி திட்டங்கள் போன்ற
அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை இவ்வாண்டு நவம்பர் மாத இறுதிக்குள் சரியான முறையில் பயன்படுத்துமாறு பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபர் அவர்களினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு ஊராட்சி முற்றக்கூட்டம், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன்
இன்றைய தினம் (22.05.2025) மு. ப. 11.45 மணியளவில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பொ. வாகீசன் ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தொடக்கவுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கிராம மட்டத்தில் அடையாளம் காணப்படும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இக் கலந்துரையாடல்கள் அமைவதாகவும், பிரதேச செயலக ரீதியாகவும் நடைபெறவேண்டும் எனவும் அல்லது குறைந்தது கொத்தணி அடிப்படையில் பிரதேச செயலகங்களை இணைத்தாவது நடைபெற ஒழுங்கு செய்வது ஆரோக்கியமானது எனவும் குறிப்பிட்டார். மேலும், அரசியலில் பெண்களின் பங்கு காத்திரமானது எனவும், குடிசார் அமைப்புகளின் பிரதிநிதிகளில் 07 பெண்கள் நடைபெற்ற உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றியீட்டியமையானது வரவேற்க்கத்தக்க விடயம் எனவும், இதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களில்பெண்களின் குரல் காத்திரமாக ஒலிக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சிறுவர், பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, கல்வி, விவசாயம், பெண்களின் சிறு கைத்தொழில் உற்பத்தி, கட்டாக்காலி நாய்களின் தொல்லைகள் உள்ளிட்ட பல காத்திரமான விடயத் தலைப்புகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன் மாவட்ட ரீதியில் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. மேலும், ஊராட்சி முற்ற அஞ்சல் பெட்டியின் நோக்கம் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இக் கலந்துரையாடலில் - வடமாகாண GBV. தகவல் திரட்டும் வெளியீடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், தொடர்புடைய அரச அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட குடிசார் அமைப்புகளின் சம்மேளன உறுப்பினர்கள், மற்றும் கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட மற்றும் பிராந்திய முகாமையாளர் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.






