அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டி வீர வீராங்கனைகளுக்கான நிகழ்வானது மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.09.2025) மு. ப 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், அலுவலகப் பணிக்கு மேலாக இவ் போட்டிகளில் பங்குபற்றுவது பாராட்டத்தக்க விடயம் எனவும், அதிலும் குடும்பச் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் குறிப்பாக பெண் அரச உத்தியோகத்தர்கள் பங்குபற்றியமை சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டார். மேலும், தேசியப் போட்டிகளில் பங்குபற்றுவது சவாலான விடயம் எனவும், அந்தவகையில் எமது மாவட்ட வீரர்கள் வீராங்கனை பங்குபற்றி வெற்றியீட்டி யாழ்ப்பாண மாவட்டத்தினை பெருமைப்படுத்திய உத்தியோகத்தர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இப் போட்டிகளுக்கு முன்னின்று உழைத்த வலைப்பந்தாட்ட பயிற்றுனர் செல்வி மனோன்மணி சின்னத்தம்பி அவர்களினையும் அரசாங்க அதிபர் பாராட்டினார். மேலும்,
எமது பலநாள் கனவான சர்வதேச கிரிக்கெட் மைதானம் மண்டைதீவில் அமையவிருப்பதும், உள்ளக விளையாட்டு அரங்கு அமையவிருப்பதும் பாடசாலை களுக்கான விளையாட்டு அபிவிருத்தி க்கும் அரசாங்கமானது முன்னுரிமை கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்வதாகவும், இதன் மூலம் எமது மாவட்டம் விளையாட்டு துறை மேன்மேலும் அபிவிருத்தி அடையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரால் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்குபற்றியவர்கள் தமது அனுபவப் பகிர்வினையும் வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டியானது 27.06.2025 அன்று கொழும்பு எட்வேட் ஹென்றி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் கலப்பு போட்டியில் 1 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான D பிரிவில் விலக்கல் முறையில் 1 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான B பிரிவில் விலக்கல் முறையில் 2 ஆம் இடத்தினையும், பெண்களுக்கான D பிரிவில் சுழற்சி முறையில் 3 ஆம் இடத்தினையும் பெற்று வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான போட்டிச் சான்றிதழ்களும், பதக்கமும் அணிவிக்கப்பட்டதுடன், அணிகளுக்கான வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம பொறியிலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், வடக்கு வலய பதிவாளர் நாயகம், உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 14 15 16 17 18
 
7யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா செயற்குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (09.09.2025) மு.ப 10.30. மணிக்கு அரசாங்க அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடல் மாவட்ட பண்பாட்டு் விழா இறுதித் தீர்மானங்களை எடுப்பதற்காக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. அதற்கமைவாக விழாவுக்கான மலர் வெளியீடு, மலருக்கான ஆக்கங்கள் கோரல், விழாவுக்கான குழுக்களை தீர்மானித்தல், அழைப்பிதழ் , நிகழ்ச்சி நிரல் ஒழுங்கமைப்பு,மண்டப ஒழுங்கமைப்பு , விருதுகள் வழங்கல் ,வாகன ஒழுங்கமைப்பு , போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்ட பண்பாட்டு பேரவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
 
2 3 4 5 6 7 
35 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம் - தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்டச் செயலணி ஸ்தாபித்தல் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.09.2025) பிற்பகல் 03.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
மேலும் இக் கூட்டத்தில்
தொற்றாய் நோய்களான நீரழிவு, உயர்குருதி அழுத்தம், கொலஸ்ரோல், புற்றுநோய் போன்றவற்றால் இலங்கையில் 83% இறப்பு ஏற்படுவதாக
டாக்டர் கே. இலங்கோகனிகர் அவர்களினால் விபரமாக எடுத்துக் கூறப்பட்டதுடன், ஆரோக்கியமான சுகாதார முறையிலான உணவின் அவசியம், உடற்பயிற்சி, பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு, பாடசாலைகளில் ஆரோக்கிய சிற்றுண்டிச் சாலையின் அவசியம், விபத்துக்களைத் தடுத்தல், போன்றவை தொடர்பாக விபரிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்பட்டது.
1.பாடசாலை களிலும், அலுவலகங்களிலும் ஆரோக்கியமானமேம்பாட்டு அறை (Healthy Promostion Room) இருத்தல் வேண்டும்.
2.வயது 35 இனைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். பொதுமக்கள் அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அல்லது சுகாதார நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு தமக்குரிய தனிப்பட்ட மருந்துவப் புத்தகத்தினை பேண முடியும்.
3.அலுவலகங்கள், நிறுவனங்கள் கேட்க்கும் பட்சத்தில் இலவச மருத்துவ பரிசோதனைகள் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் மேற்கொள்ளப்படும்.
4.அலுவலகங்களில் புகைத்தல் தடைசெய்யப்பட்ட பிரதேசம் என காட்சிப்படுத்தப்பட்ட பலகை இருத்தல் வேண்டும் என்பதுடன் அலுவலகங்களுக்கு வருபவர்கள் வெற்றிலையுடன் (வெற்றிலையினை சாப்பிட்டுகொண்டு) வருவதனையும் அனுமதிக்கக் கூடாது.
5.வீதி விபத்துக்களை தடுத்தல் வேண்டும் என்பதுடன், பாதுகாப்பற்ற கிணறுகளால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி இறப்பது அதிகரித்துள்ளதால் அது தொடர்பில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் எனவும் - ஆபத்தானது என்று அடையாளப்படுத்தல்கள் அல்லது தடுப்புக்கள் அவசியமானது.
6.கடந்த ஆண்டில் விசர்நாய் கடியினால் ஒருவருக்கு இறப்பு ஏற்பட்டது என்றும் பொதுமக்களுக்கு இது தொடர்பிலான விழிப்புணர்வு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன அவர்கள், பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் காட்டும் அக்கறையினை பிள்ளைகளின் சுகாதாரத்திலும் செலுத்த வேண்டும் எனவும், பிள்ளைகளின் உடல், உள ஆரோக்கியம் அவசியம் எனவும் தெரிவித்தார்.
மாவட்டச் செயலணியின் தலைவர்களாக அரசாங்க அதிபரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் செயற்படுவார்கள்.
இக் கூட்டத்தில் செயலணியின் உறுப்பினர்களான திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விளையாட்டுத் துறை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
 
1 2 3 4 5 6 7 8 9 11
 
10 பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.09.2025) பி.ப 03.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் இந்திய துணைத் தூதரக அதிகாரி திரு. சங்கரன் இராஜகோபாலன், இந்திய நிறுவன அதிகாரிகளான திரு. என். ரவிசங்கர், திரு. எம். பி. பெலியப்பா உள்ளிட்டவர்கள் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் அவர்களினால் துறைமுக அபிவிருத்தியின் அவசியம், தேவைப்பாடுகள் அதனால் ஏற்படும் சாதகங்கள், மீனவர்களுக்கான நன்மைகள், தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்து, அபிவிருத்தி தொடர்பாக இந்தியத் தூதரக அதிகரிகளுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்தரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பருத்தித்துறை பிரதேச செயலாளர், கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத் திணைக்கள பொறியியலாளர், கடற்றொழி்ல் நீரியல் வளத் திணைக்கள உத்தியோகத்தர்கள், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக முகாமையாளர் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.09.2025) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்கள், கூட்டத்திற்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்பாடு ஓரளவு சீரகவுள்ளதாகவும், தொடர்ச்சியான கட்டுப்பாட்டு கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவித்து, அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் வி. பி. எஸ். டி. பத்திரன மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோர் பங்குபற்றியதுடன் முன்னேச்சரிக்கை மற்றும் தடுக்கும் வழிவகைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார் கள்.
மேலும் இக் கூட்டத்தில்
முன்னெச்சரிக்கையாக டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.இம் மாதம் - செப்டம்பர் 08 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதிக்கிடையில் பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு கூட்டத்தினையும், கிராம அலுவலர் தலைமையில் கிராம மட்ட டெங்கு நோய் கட்டுப்பாட்டு கூட்டத்தினையும் நடாத்துதல்.
2 டெங்கு விழிப்புணர்வு வாரத்தினைஇம் மாதம் - செப்டம்பர் 14 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடாத்துவது எனவும், அந்தவகையில் 14 ஆம் திகதி வணக்கஸ்தலங்களிலும், 15 ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பாடசாலை களிலும் சம்பந்தப்பட்ட சுகாதாரம் வைத்திய அதிகாரி ஒருங்கிணைப்பில் விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.விசேட நுளம்பு கட்டுப்பாட்டு தினங்களான இம் மாதம் - செப்டம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதிகளில் - சுத்திகரிப்பு சிரமதான வேலைகளை வீடுகள், பாடசாலைகள், அரச தனியார் நிறுவனங்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களில் மேற்கொள்ளுதல். இலங்கையில் மலேரியா நோய் கட்டுப்பாட்டில் உள்ளது எனினும் குறிப்பாக தென் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகின்றவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பது தொடர்பில் விழிப்புணர்வின் அவசியம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
4.திண்மக் கழிவகற்றலில் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவதை உறுதிப்படுத்தல்.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், பொலிஸ் கடற்படை மற்றும் இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 56