2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடங்கப்பட்டுள்ள காங்கேசன்துறை கடற்கரைப் பூங்காவிற்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.05.2025) பி.ப 01.30 மணிக்கு களவிஜயம் செய்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 131.20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு அமைய, அத் திட்டங்களில் உள்ளடங்கியுள்ள காங்கேசன்துறை கடற்கரையில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா வின் பகுதி கடுமையான கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு சிறுவர் பூங்காவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் அவ் விடத்திற்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைதருவதனாலும் அதனை விரைவாக புனரமைப்புச் செய்வது தொடர்பாக 30.04.2025 ஆம் திகதி மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய அரசாங்க அதிபர் மேற்படி நிலமைகளை நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
இவ் அரசாங்க அதிபரின் கள விஜயத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. வீ. சிவகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணியானது 01.05.2025 ஆம் திகதி அன்று விடுவிக்கப்பட்டதற்கமைய, தெல்லிப்பளை பிரதேசத்திற்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (03.05.2025) மு.ப. 11.30 மணிக்கு நேரடியாக விஜயம் செய்தார்.
அந்த வகையில் வசாவிளான் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஒட்டகப்புலம் புனித அமலோற்பவ மாதா தேவாலயத்தில் பங்குத்தந்தை ஜே. ஏ. அருள்தாஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற பிராத்தனையில் பங்குகொண்டு, அங்கு கூடியிருந்த மக்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணியினை பொதுமக்களுடன் சென்று பார்வையிட்டார்.
இதன் போது அப் பிரதேசத்தில் கண்ணிவெடி தொடர்பான பரிசீலனையில் ஈடுபட்டு வரும் Hallo Trust நிறுவனத்துடன் கலந்துரையாடிய அரசாங்க அதிபர், கண்ணிவெடி பரிசீலணையானது எதிர்வரும் 07.05.2025 ஆம் திகதியே நிறைவடைவதாக Hallo Trust நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும், அதனை அடுத்து 08.05.2025 ஆம் திகதி அன்று தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டதன் பின்னர் 09.05.2025 ஆம் திகதி பொதுமக்கள் தமது காணிகளுக்கச் சென்று காணிகளை அடையாளப்படுத்தி தொடர் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள மாங்கொல்லை கிராமத்திற்கு (15.13 ஏக்கர் காணி) அரசாங்க அதிபர் விஜயம் செய்தார்.
இவ் அரசாங்க அதிபர் விஜயத்தின் போது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி. சி. சுதீஸ்னர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. வீ. சிவகுமார், பாதுகாப்பு படை அதிகாரி, கிராம அலுவலர்கள், Hallo Trust நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அப் பிரிவுகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக யாழ்ப்பாண அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள், சுயேச்சைக்குழுத் தலைவர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.05.2025 ) காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளுக்குமாக 243 வட்டாரங்களுக்காக 3519 போட்டியாளர்கள் போட்டியிடுவதாகவும், வேட்பாளர்கள் சட்டங்கள் மற்றும் சுற்றுநிருபத்திற்கு அமைய சனநாயக ரீதியில் பிரச்சார நடவடிக்கைகளை எதுவிதமான முரண்பாடுகளுமின்றி ஆரோக்கியமாக மேற்கொள்வதனை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 517 வாக்களிப்பு நிலையங்களுக்கும், வட்டாரங்களில் நடைபெறும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கும் மற்றும் மாவட்டச் செயலகத்தில் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் பெற்றுக்கொண்ட இறுதி ஆசனங்களின் எண்ணிக்கை யினை வெளியிடும் நிலையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்களை சரியான பொறிமுறையூடாக சட்டத்தின் மூலம் நியமித்து நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட சிறப்பான ஒத்துழைப்பினை நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்கள் தெளிவூட்டல்களை முன்வைத்தார்.
இக் கலந்துரையாடலில் தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் திரு. ப. பிரபாகர், அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் சுயேச்சைக்குழுத் தலைவர்கள் பங்குபற்றினார்கள்.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுடனான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.05.2025) மு. ப 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன் போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து 05.05.2025 ந் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுடன் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து ஒழுங்குகள், முறைப்பாடுகளுக்கான உடனடி நடவடிக்கைகள், வட்டாரங்களில் இடம் பெறும் வாக்கெண்ணலின் போதான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாவட்டச் செயலகத்தில் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற ஆசனங்களை அறிவிக்கும் நிலையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளடங்கலாக பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மேலும், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் சுதந்தரமாகவும், சுமூகமாக நடைபெற்றதாகவும் இதற்கு வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய ஒத்துழைப்பு காத்திரமானது எனவும், அதற்காக தமது நன்றியினை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன், தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் திரு. ப. பிரபாகர், யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, இணைப்பு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (02.05.2025) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் இம் முறை 517 வாக்களிப்பு நிலையங்களில் 243 வட்டாரங்கள் உள்ளடக்கியவகையில் - 1 மாநகரசபையிலும், 3 நகர சபைகளிலும், 13 பிரதேச சபைகளிலும் மொத்ததமாக 17 உள்ளூர் அதிகார சபைகளிலும், 498,140 வாக்காளர்கள் வாக்களிப்பில் ஈடுபடவுள்ளதாகவும், 6320 அரச உத்தியோகத்தர்களும், 1048 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தாா்.
மேலும், தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வட்டார நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், நியமிக்கப்பட்டுள்ள்ளதாகவும், தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைச் சார்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டு, வட்டாரங்களுக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கும் இணைத் தொடர்பை ஏற்படுத்தும் பொறுப்பும் இணைப்பு உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்குரிய செயற்பாடாகவும் உள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களுக்குரிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரிவித்து, நடைபெறவுள்ள தேர்தலில் தங்களுக்கு வழங்கப்பட்ட கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக, பொறுப்பாக நியமிக்கப்பட்ட இணைப்பு தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் கடமைகள் பொறுப்புக்கள் தொடர்பாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு. பொ. தயானந்தன் அவர்களும் கலந்து கொண்டனர்.







