வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக , வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (28.04.2025) மு. ப 09.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் வைத்து Save a Life நிறுனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. இராகுலன் அவர்களால் கையளிக்கப்பட்டது.
மாவட்டச் செயலகம் அதனை அண்டிய பகுதியில் வைப்பதற்காக 03 கூடுகளும், மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் தலா ஒன்று வீதம் வைப்பதற்காக 15 கூடுகளுமாக 18 கூடுகள் கையளிக்கப்பட்டுள்ளதுடன், வெற்றுப் போத்தல்களால் கூடு நிரம்பியவுடன் அதனை குறித்த நிறுவனம் மீள சுழற்சிக்காக எடுத்துச் செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் கையளிப்பு நிகழ்வில் பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார் , உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, Save a Life நிறுவன தொழில் நுட்ப முகாமையாளர் திரு. ம. கீதானந்தன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4
அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளைமுறையிடுவதற்கு "உள்ளக அலுவல்கள் அலகு" எனும் பிரிவானது இன்றைய தினம் (28.04.2025)காலை 09.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்டது.
இவ் அலகினை திறந்துவைத்து உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாவட்ட மட்டத்தில்உள்ளக அலுவல்கள் பிரிவு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழல் செயற்பாடுகளை தடுப்பதாகவும் அதேவேளை அலுவலக செயற்பாடுகள் வெளிப்படுத்தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமையவும், அதேவேளை பொதுமக்கள் மாவட்ட செயற்பாடுகள் தொடர்பாக முழுமையான விபரங்களை அறிந்து கொள்வதற்கும், குறிப்பாக அலுவலக நடைமுறைகள் தொடர்பாகவும் அல்லது ஏதாவது விடயங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படுகின்ற போது இப் பிரிவை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதற்கு ஸ்தாபிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அதன் அடிப்படையில் நம்பகத்தன்மையான அலுவலகமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பின் இந்த அலுவலகத்தில் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும் வெளிப்படுத்தன்மை மற்றும் ஊழலற்ற இலஞ்சமற்ற பிரதேசத்தை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகத்தின் நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதுடன், பொதுமக்கள் அவர்களின் பிரச்சினைகளை அணுகக்கூடியதாகவும் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்களுக்கான தகவல்களை வெளிக்கொணர வேண்டிய கடப்பாட்டு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முன்பு அரச அலுவலகங்களில் வெளிப்படுத்தன்மை குறைவாக காணப்பட்டதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டம் வந்ததன் பின்னர் அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் வெளிக்கொணர வேண்டிய தேவை உள்ளதாகவும் 12 ஆண்டுகளுக்கு ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரச உத்தியோதர்களாகிய நாம் இதற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் அலுவலகத்தில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதற்கு மேலதிகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் சரத்துக்களை ஆராயும் ஆணை குழுவிற்கு அதன் விடயங்கள் அனுப்பப்படும் எனவும் தெரிவித்துடன், நிர்வாக நடைமுறைகளை மேலும் வலு சேர்ப்பதற்கு வினைத்திறனாக செயல்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் பிரிவின் இணைப்பாளராக திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ் அலுவலகத்தில் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பாக கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளை விசாரணை செய்து மேலதிக நடவடிக்கைக்காக பரிந்துரை செய்யப்படும்.
உள்ளக அலுவல்கள் பிரிவின் நோக்கங்கள் தொடர்பாக திட்டமிடல் பணிப்பாளர் அவர்களால் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது.
1.நிறுவனத்தில் ஊழலைத் தடுத்தலும் ஒருமைப்பாட்டு கலாச்சாரத்தை வளர்த்தலும்
2.நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதி செய்தல், மற்றும் நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அணுகுவதை உறுதி செய்தல்.
3.நிறுவனத்திற்குள் நெறிமுறை ஆளுகையை மேம்படுத்துதல்.
4.தவறான நடத்தைகளை புகாரளிப்பதற்கும் விசாரணையாளர்களை பாதுகாப்பதற்கும் மற்றும் இரகசியத் தன்மையை பேணுவதற்கும் ஒரு பாதுகாப்பான மற்றும் அணுகக் கூடிய அமைப்பை உருவாக்குதல்
5 சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆதரவளித்தல்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
1 2 3 4 5 6 7
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் கெளரவ ரி. பி. சரத் ஆகியோா் இன்றைய தினம் (25.04.2025)ஆம் திகதி காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களைச் சந்தித்து மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, அமைச்சின் செயலாளர் திரு. ரஞ்சித் ஆரியரட்ண, மேலதிகச் செயலாளர் திரு. எம். எம். நயமுதீன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன் ஆகியோரும் உடனிருந்தார்கள்.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கெளரவ அமைச்சர் மற்றும் கெளரவ பிரதி அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை வரவேற்று, யாழ்ப்பாண மாவட்டத்தின் மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்காக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக இவ்வாண்டு 1258 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு அதற்கான தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன், மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முன்னேற்றங்களை விபரித்தார். மேலும்
வீட்டுத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் ரூபா 1 மில்லியன் நிதி போதாமையாகவுள்ளதாகவும் அதனை ரூபா 1.5 மில்லியனாக அதிகரிக்க ஆவன செய்யுமாறு கோரிக்கை முன்வைத்ததுடன், இதுவரை விடுவிக்கப்பட்ட காணி மற்றும் விடுவிக்க வேண்டிய காணியின் விபரங்கள்,தெல்லிப்பளை பிரதேச உள்ளக வீதி அபிவிருத்தி, குடிநீர் வசதிகள், மின்சார இணைப்பு வசதிகள் தொடர்பாகவும் விளக்கமளித்து அது தொடர்பான கோரிக்கைகளும் அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக அவர்கள் தமது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றிலொரு பங்கு மீள்குடியேற்றம் உட்பட ஏனைய திட்டங்களுக்காக யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக்கே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தேவைப்பாடுகளை சாதகமாக பரிசீலிப்பதாகவும் குறிப்பிட்டு அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடிய நிதி ஒதுக்கீடு செய்ய திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டதுடன், உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் இணைந்து கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஒதுக்கப்படும் நிதிகளை இவ்வாண்டுக்குள் உரிய திட்டங்களுக்கு செலவு செய்து முன்னேற்ற அறிக்கைகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர், நகர அபிவிருத்தி அதிகாரசபை யின் பணிப்பாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7
வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (25.04.2025) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தொடர்பாக தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வேறுபட்டதாக அமையும் எனவும், குறிப்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வட்டார நிலையங்களில் வாக்கெண்ணல் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாகவும், வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், பெறுபேறுகளை வெளியிடும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்குரிய கடமைகளை சரியான அறிவுறுத்தல்களை பின்பற்றி வினைத்திறனாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைச் சார்ந்திருப்பதால் சரியான முறையில் அறிவுறுத்தல்களை தெளிவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டதுடன், தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களுக்குரிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெரிவித்து, நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் பிரதம வாக்கெண்ணும் அலுவலராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான கடமைகள் தொடர்பாகவும் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணல் நிலையங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளரும் போக்குவரத்து ஒழுங்குகளுக்கு பொறுப் பாகவுள்ள உதவித்தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. F.C . சத்தியசோதி அவர்களால தெளிவுபடுத்தப்பட்டதுடன் தேர்தல் கட்டுபாட்டுப்பிரிவின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளரும் கட்டுபாட்டுப் பிரிவின் உதவித்தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. எஸ். ரமேஷ்குமார் அவர்களாலும் விளக்கமளிக்ப்பட்டது.
இக்கலந்துரையாடலில் வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலில் 2024 ஆம் ஆண்டு தேசிய ரீதியில் பண சேகரிப்பு அடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பருத்தித்தறை, நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்கள் பெற்றிருந்ததுடன், அங்கத்தவர்கள் இணைப்பு அடிப்படையில் தேசிய விருதிற்கு நல்லூர், பருத்தித்துறை, கோப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
மேலும் இம் முறை ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தலை சிறப்பாக மேற்கொண்ட உத்தியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்குவிப்பு கொடுப்பனவுக்கான காசோலைகள்
மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (24.04.2025) பி.ப 5.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து பிரதேச செயலாளர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர் திரு. த.சங்கர் கலந்து கொண்டார்.
 
 
 
1 2 3 4 5