யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (29.05.2025) காலை 9.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும், சென்ற கூட்டத்தில் இளம் விவசாயிகளை அடுத்து கூட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என எமது வேண்டுகோளுக்கு அமைய, இன்றைய கூட்டத்தில் இளம் விவசாயிகள் வருகை தந்துள்ளமையானது வரவேற்க்கதக்கது விடயம் எனவும் தெரிவித்தார். மேலும்,
தற்போது அதிகரித்து வரும் தென்னை மரத்தை பாதிக்கும் வெண் ஈ தாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்தும் சிறந்த பொறிமுறைகளை கண்டறிய வேண்டும் எனவும், விவசாயத்துறையினை வளர்ப்பதற்கு
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்ததுடன், இன்றைய கூட்டத்தில் முதலில் விவசாயிகளின் கருத்துக்களை முன்வைக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். விவசாயிகளின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைக்கு அமைய, அரசாங்க அதிபரால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1.வேலணயில் வீதி புனரமைப்பு செய்யப்பட்ட போது உரிய வடிகாலமைப்பு மேற்கொள்ளாத காரணத்தினால் வெள்ளத்தினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய - வாய்க்கால்கள் அமைப்பது தொடர்பான பூர்வாங்க அறிக்கையினை பிரதேச செயலாளர் விரைவில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
2.தீவகப்பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் தொடர்பாக பிரதேச சபையினரும், கமநல சேவைகள் திணைக்களமும் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
3.வேலணையில் மிளகாய் இலைகளின் மீதான நோய் தாக்கத்தினால் (பூச்சி மற்றும் வைரஸ் தாக்கம்) இலைகள் சுறுளடைவதாகவும், இதற்கான தீர்வு தேவை எனவும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, வெப்ப நிலை அதிகரிப்பும் திடீர் மழையும் காரணம் எனவும், Green colour lable கிருமிநாசினி களை பயன்படுத்தலாம் எனவும் எல்லைப் பயிர் மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தும் மிளகாய் உற்பத்தியினை பாதுகாக்கலாம் எனவும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட உடுவில் பிரதேச விவசாயி ஒருவர் மிளகாய் உற்பத்தியில் வெற்றியடைந்துள்ளதால் அவரின் விவசாய இடத்தினை பிரதி விவசாயப் பணிப்பாளர் அவர்கள், வேலணை பிரதேச விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டு அனுபவப் பகிர்வை பகிர்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4.உசன், கரம்பகம் எழுதுமட்டுவாழ் விவசாய நிலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதால் வாய்க்கால் அமைத்து நீரோட்டத்தினை பாய்ச்சுவதற்கான மதிப்பீட்டினை மாவட்டச் செயலாளர் அவர்களுக்கு அனுப்பி வைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
5.மேட்டுக் காணிப் பயிர்களுக்கான உர மானியம் வழங்குமாறு விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய, அண்ணளவாக 2000 ஹெக்டேயர் மேட்டுக்காணிக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15000.00 வீதம் வழங்க வேண்டிய விவசாயிகள் கோரிக்கையினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைப்பது எனத் தெரிவிக்கப்பட்டது.
6.குடத்தனை வலி கண்டியில் குப்பைகளை எதிர்காலத்தில் இடுவதனை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டதுடன், இதனை பருத்தித்துறை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச, நகர சபை செயலாளர்கள் உறுதிப்படுத்துமாறும் தீர்மானிக்கப்பட்டது.
7.இந்திய அரசினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள உழவு இயந்திரங்கள் மற்றும் பழுதடைந்துள்ள உழவு இயந்திரங்களின் முழுமையான விவரங்களுடன் யூன் மாதம் 30 ஆம் திகதி கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
8.விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தில்உள்வாங்கப்பட்ட பயனாளிகளின் முழுமையான விவரங்களை பெற்று அதனை பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைப்பது எனவும், இதன் மூலம் இத் திட்டத்தில் வெற்றியடைந்த மற்றும் தோல்வி அடைந்தவர்களை இனங்கான முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
9.தென்னை மரங்களை பாதிப்புக்குள்ளாக்கும் வெண் ஈ தொடர்பாக, தென்னை மரங்களுக்கு தென்னை அபிவிருத்திச் சபையின் 15 தெளிகருவிகள் மூலம் வேப்பெண்ணெய் தெளித்து கட்டுப்படுத்த - முதற்கட்டமாக சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுகளில் யூன் மாதம் 09 ஆம் திகதி யிலிருந்து 14 ஆம் திகதி வரையும், கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவுகளில் 23 ஆம் திகதியும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்கள் ஒருங்கினைப்பில் தென்னை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
10.பாதீனித்தியத்தை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் ஒருங்கினைந்து செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டது.
11.அடுத்த கூட்டத்தினை யூலை மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவது எனவும், அக் கூட்டத்தில் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்களை ஆராய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வங்கி மற்றும் காப்புறுதி சேவை பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6
 
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டமானது அரசாங்க அதிபரும் பண்பாட்டு பேரவையின் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.05.2025)காலை 09.45 மணிக்கு கேட்போர் கூடத்தில் மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கலைஞர் கெளரவிக்கப்பட வேண்டும் எனவும், மாதாந்தம் ஒரு கலை நிகழ்ச்சி யாவது நடைபெறுவதற்கு ஒழுங்கமைப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டத்தினை எதிர்வரும் யூன் மாதம் 28 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் அப் பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகளவான கலைஞர்கள் பங்குபற்றுவதனை கலாசார உத்தியோகத்தர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், யாழ்ப்பாண பண்பாட்டு விழாவினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்றைய தினம் (27.05.2025) மாலை 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சகிதம் பார்வையிட்டார்.
இதன் போது இதுவரை நடைபெற்ற வேலைகளின் முன்னேற்றத்தினை அரசாங்க அதிபரிடம் கெளரவ அமைச்சர் கேட்டறிந்து கொண்டார். மேலும், கடவுச்சீட்டு பெற வரும் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் அமைக்கப்படவுள்ள கொட்டகை மற்றும் கடவுச்சீட்டு அலுவலகத்தில் கடமையாற்றவுள்ள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி விபரங்களை கெளரவ அமைச்சரின் கவனத்திற்கு அரசாங்க அதிபர் கொண்டுவந்தார்.
 
 
1 2 3 4 5

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு E - Personal File தொடர்பான பயிற்சி நெறி உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தர்சினி தலைமையில் இன்றைய தினம் (28.05.2025) மு.ப. 9.00 மணிக்கு மாநாட்டு நடைபெற்றது .
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்து கருத்து தெரிவிக்கும் போது, E - Personal File முறைமை ஊடாக தனிநபர் கோவையினை கணினி முறையில் பேணுவதனால் உத்தியோகத்தர்களின் வேலைப்பழு குறைவடைவதுடன் வினைத்திறனான சேவையினை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் இம்முறைமையினை யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இப் பயிற்சி நெறியில் பங்குபற்றியுள்ள உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியினை பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இம் முறைமை நல்லூர் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரால் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், இப்பயிற்சி நெறியின் வளவாளராக வும் கலந்து கொண்டார்.
இப் பயிற்சி நெறியில் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட கோவையினை பேணும் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பொது ஆலோசனை கேட்கும் கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2025)காலை 09.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் போராசிரியர் கே. பி. எல். சந்திரலால், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. தமித குமாரசிங்ஹமற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலந்த சபுமனகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவதுகாலாண்டுக்கான கூட்டம் இதுவெனவும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினானது மாவட்டச் செயலகத்துடன் நெருக்கமாக செயற்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டு, ஆணைக்குழுவிற்கு நன்றியினைத் தெரிவித்ததுடன், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 18.3% மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான பங்குதார்கள் கூட்டத்தில் பங்குபற்றியுள்ள சமூக ஆர்வலர்கள் தேவையான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், மின்சார கட்டண முறைமை அதாவது விலைச் சூத்திரத்திற்கு அமைய, பொது ஆலோசனைக் கேட்டலை ஆணைக்குழு நடத்துவதால் இக் கூட்டத்தில் ஜனநாயக முறையில் மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு அதனூடாக தீர்வுகளை முன்வைப்பது ஆரோக்கியமானது எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் முன்னறிவிக்கப்பட்ட உற்பத்தி கலவை மற்றும் செலவுகள், எரிபொருள் செலவுகள், பரிமாற்றம் மற்றும் விநியோகச் செலவுகள், நிதிச் செலவுகள், 2024 ஆம் ஆண்டு ஜீன் மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையிலான வருமான உபரி, 2025 ஆம் ஆண்டு முதல் காலாண்டின் நிதி இழப்பு, முன்மொழியப்பட்ட கட்டண அமைப்பு முறை, கட்டண சமர்ப்பிப்பு குறித்த ஆணைக்குழிவின்ஆராய்வு மற்றும் முன்னேற்றத்திற்கான பங்குதாரர் திட்டங்கள் தொடர்பாக 09 தலைப்புக்களின் கீழ் சமர்ப்பிப்புக்கள் முன்வைக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வேலணை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், வர்த்தக பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்
உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர் (நிர்வாகம்), கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7  8 9