தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பழைய பூங்காவை பசுமைக்காடாக்கல் செயற்றிட்டம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.06.2025) காலை 09.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது அரசாங்க அதிபர் அமரர் சேர் பேர்சிவல் அக்லான்ட் டைக் அவர்களினால் 27 ஏக்கர் காணி கொள்வனவு செய்யப்பட்டு ஆரோக்கியமாகவாழ மரங்களை நாட்டினார். தற்போது அதனை மேலும் பேணுவதற்காக முதற்கட்டமாக 500 மரங்கள் நடுகை செய்யும் திட்டத்தில் இன்றைய தினம் 250 மரங்களை நாட்டி சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக பேணுவோம் எனவும், நாம் வாழும் காலத்தில் சமூகத்திற்கு நல்ல விடயங்களைச் செய்வோம் எனவும் குறிப்பிட்டு, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆளுக்கொரு மரத்தினை நாட்டி குறிப்பிட்ட காலத்திற்கு சீராக நீர் ஊற்றி பேணுவோம் எனவும் குறிப்பிட்டு, அனைவரின் ஒத்துழைப்பினையும் நல்குமாறு கேட்டுக் கொண்டார்.
இவ் பசுமைக்காடாக்கல் செயற்றிட்டத்தில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆளுக்கொரு மரத்தினை நாட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய சுற்றாடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தினைமுன்னிட்டு - "பிளாஸ்ரிக் மூலம் ஏற்படும் மாசுபாட்டிற்கு இறுதி தீர்வு பெற்றுக்கொள்ளல்" எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு கருத்தரங்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.06.2025) மு. ப 10.15 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பது அனைவரின் தார்மீகப் பொறுப்பு எனவும், சரியான முறையில் பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்புக் கூட்டத்தில் சகல திணைக்களங்களும் யூலை மாதம் 1 ஆம் திகதி முதல் திண்மக்கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவது எனத் தீர்மானிக்கப்பட்டதற்கமைய, அதற்கு முன்மாதிரியாக மாவட்டச் செயலகம் யூன் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து சரியான பொறிமுறை ஊடாக செயற்படுவது என தெரிவிக்கப்பட்டது. அதற்கமைய தற்போது மாவட்டச் செயலகத்தால் திண்மக்கழிவுகள் சரியாக தரம் பிரிக்கப்பட்டு வருகின்றமைக்காக ஒத்துழைப்பு நல்கிவரும் உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும் சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நாளை தினம் பழைய பூங்காவில் முதற்கட்டமாக 500 மரங்கள் நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும், மரங்களுக்கான நீரை ஊற்றிப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்வம் உள்ள உத்தியோகத்தர்கள் எம்முடன் இணைந்து பொதுச் சேவையில் ஈடுபட லாம் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இவ் விழிப்புணர்வில் பிளாஸ்டிக் பாவனைகள், அதனை எரிவூட்டுவதனால் எழும் மாசினால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை யின் உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். பி. தவகிருபா அவர்களால் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்களை யாராவது எரியூட்டினால் 1981 தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (30.05.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்பு ரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், மாவட்டச் செயலகத்தினால் - பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா, மின்சார இணைப்பு செயற்றிட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா, கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபா உள்ளடங்களாக 1113.78 மில்லியன் ரூபா வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்படவுள்ளதாகவும் தெரிவித்துடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் சரியான முறையில் பயன்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனத் தெரிவித்தார். மேலும், அதிமேதகு சனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிமேதகு சனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கடவுச் சீட்டு அலுவலகத்தினை ஆரம்பிப்பதற்கான வேலைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியதற்கமைய விரைவில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும், உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி, வலையமைப்பு வசதி மற்றும் பொது மக்கள் காத்திருக்கும் கொட்டகை போன்ற வேலைத் திட்டங்களே உள்ளன எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் தமது தொடக்கவுரையில், அதிமேதகு சனாதிபதி அவர்கள் 09 மாகாண ஆளுநர்களுடான கலந்துரையாடலில் இவ்வாண்டு சென்ற ஆண்டைவிட மாகாணங்களுக்கு 03 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் பயன்படுத்த ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், சனாதிபதி அவர்கள் இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் பார்க்க கூடுதலான நிதி ஒதுக்கீட்டினை அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு சவால்கள் பிரச்சனைகளை பொறுப்புவாய்ந்த திணைக்கள ங்கள் வினைத்திறனாக கையாண்டு, அபிவிருத்தித் திட்டங்களைவிரைவாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளதாகவும், அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மணல் அகழ்வு, தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திசாலை, தாளையடி குடிநீர் திட்டம், காங்கேசன்துறையில் அமைந்துள்ள சனாதிபதி மாளிகை உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வரவில் சிறந்த உத்தியோகத்தர்கள் மற்றும் வரைவை ஒழுங்காக கடைப்பிடிக்கும் கிளைகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் இன்றைய தினம் (04.05.2025) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

பாதுகாப்பும் சமூகங்களின் நலன் மேம்படுத்தும் செயற்றிட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (29.05.2025) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சமுதாயங்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் இடையே எல்லோரையும் உள்ளடக்கும் ஆட்சி மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தலை நோக்கமாகக் கொண்டு முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகங்களிலிருந்து 20 கிராம அலுவலர் பிரிவுகளில் இத் செயற்றிட்டம் SOND (அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு ) நிறுவனத்தின் அனுசரனையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில்
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் எனவும், அவ் மக்களை சரியான முறையில் ஆற்றுப்படுத்தும் பொறிமுறையை எவ்வாறு முன்னெடுக்கலாம் எனவும் தெரிவித்துடன், இக் கலந்துரையாடலில் ஆராயப்படும் விடயங்கள் நலிவுற்ற சமுதாயத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிவகைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சமூக மட்ட அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் இவ் விடயங்களில் ஈடுபடுத்துமாறும் தெரிவித்தார்.
மேலும், இத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலை யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேச செயலகங்களில் யூன் 16ம் திகதி 2.00 மணிக்கு சமூக மட்ட செயற்பாடுகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களையும் இணைத்து கூட்டத்தை நடாத்துமாறு கேட்டுக்கொண்டாா்.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்களை SOND நிறுவன மாவட்ட இணைப்பாளர் திரு.செந்தூர்ராஜா அவர்கள் தெளிவுபடுத்தினார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ,மாவட்ட சமுர்த்திப் ணிப்பாளர், சாவகச்சேரி பிரதேச செயலாளர்,யாழ்ப்பாண உதவி பிரதேச செயலாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர்,பிரதேச செயலக பெண்கள், சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், SOND நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.







