யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (06.03.2025) காலை 10.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சுற்றாடல் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மிக அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தில் சுற்றாடல் தூய்மையும் உள்ளடங்குவதால் கழிவகற்றல் பொறிமுறை சிறப்பாக இருத்தல் வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதற்கு முதற்கட்டமாக திண்மக்கழிவகற்றல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு கழிவு சேகரிப்பின் போது தரம் பிரிக்கப்படாத கழிவுகள் உள்ளூராட்சி அமைப்புக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதையும் அறிவித்து தரம்பிரித்து கழிவுகளை வழங்குவதற்குரிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு வழங்கி குறித்த கால அவகாசத்துடன் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு இந்த திட்டத்தினை இறுக்கமாக பின்பற்றுமாறும் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு அரசாங்க அதிபரினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் விழாக்களின் போது ஒலிபெருக்கி மூலமான ஒலி வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் வழிபாட்டுத்தலங்களிலும் ஏனைய நிகழ்வுகளிலும் ஒலிபெருக்கிகள் குறித்த எல்லைக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இதனை மீறும் பட்சத்தில் பொதுமக்களிடம் இருந்து வரும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொலிஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. மேலும் அதிக சத்தத்துடன் ஒலி எழுப்பும் போது பொதுமக்கள் அது தொடர்பாக கிராம அலுவலர்கள் ,பிரதேச செயலாளர்களுக்கு தொலைபேசி மூலமாக தெரியப்படுத்த வேண்டுமெனவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரதேச செயலாளர்கள் நேரடியாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு தெரிவிப்பதோடு அவர்கள் அழைப்பதற்கான தொலைபேசி இலக்கங்களை கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் வழங்கியதோடு இதற்கு மேலதிகமாக பொதுமக்கள் தங்களுடைய முறைப்பாடுகளை 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ்அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக் கூட்டத்தில் நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், வளி மாசு மற்றும் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகர் சார்பான பிரதிநிதிகள், யாழ் மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ,அலுவலக உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப் பணிப்பாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர், அறிவியல் நகர் வனப்பரிபாலன திணைக்கள உதவிப்பணிப்பாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1  2 3 4 5 6 7
யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்று (06.03.2025) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்காணல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும் இளம் விவசாயிகளை பிரதேச மற்றும் மாவட்ட குழுக்கூட்டத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் இளைய சமுதாயத்தை நவீன விவசாயத்தை நோக்கி உள்ளீர்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் பயன்படுத்தப்படாமல் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் வெளிநாடுகளில் வசிப்பின் அவர்களின் பயன்படுத்தப்படாத விவசாய நிலங்கள் ஆகியவற்றை தற்காலிகமாக விவசாயத்தேவைகளுக்கு பயன்படுத்த சரியான பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதனூடாக விவசாய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தாா். மேலும் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட
திட்டங்களின் முன்னேற்றம், பிரதேச செயலகங்கங்களின் கலந்துரையாடலில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,
தற்போது அதிகரித்து வரும் தென்னை மரத்தை பாதிக்கும் வெண் ஈ தாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்து மக்களுக்கு சரியான விழிப்புணர்வு மேற்கொள்ளுமாறும் தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அதுமட்டுமன்றி மாவட்டத்தில் புதிதாக பன்றி வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு பிரதேச சபை , சுகாதார வைத்திய அதிகாரி , மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் சிபார்சு வழங்கப்பட்டதன் பின்னர் அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாவும் வீதி அபிவிருத்திஅதிகாரசபை ,வீதி அபிவிருத்தி திணைக்களம் , உள்ளூராட்சி அமைப்புக்கள் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளும் போதும் மதகுகள், பாலங்கள் அமைக்கப்படவேண்டிய சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்ட அந்தந்த திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்குமாறும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ,மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாகாண விவசாயப்பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி உதவிஆணையாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்,கூட்டுறவு உதவி ஆணையாளர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வங்கி மற்றும் காப்புறுதி சேவை பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 7
சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.03.2025) மு.ப 09.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்திய முதலீட்டாளர்கள் இந்தியாவுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாத் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் முதலீட்டு பிரிவின் பணிப்பாளர், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியக தலைவர், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள் (காணி), இந்திய முதலீட்டாளர் குழு, காணி ஆணையாளர் அலுவலக பிரதிநிதி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் , பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் உட்பட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய விடய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4  5 6
மாவட்டச் செயலகத்தில் 08.03.2025 நடைபெறவுள்ள தொழிற்சந்தை நிகழ்வுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.03.2025) பி.ப 3.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களால் தொழிற்சந்தை நிகழ்வுக்கான விடயங்கள் விளக்கமளிக்கப்பட்டதுடன், தொழிற்சந்தை நிறுவனங்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். மேலும் இத் தொழிற் சந்தையில் 500 வரையான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் ஆயிரம் வரையான தொழில் தேடுனர்கள் பங்குபற்றவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், நிறுவனங்களின் அபிப்பிராயங்கள் கேட்டறிந்து சிறப்பாக தொழில் சந்தையினை நடாத்துவதற்கும் யாழ்மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அதிகவாய்ப்பானதாக அமைய அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
இக்கலந்துரையாடலில் 30 வரையான நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவன பிரதிநிதிகளும் மனிதவள மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.02.2025) பி.ப 3.15 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் அனர்த்தம் ஏற்படக்கூடிய பனைமரங்கள் காணப்படுமாயின் அவற்றினை ஐந்துபேர் கொண்ட குழுவொன்றினை அமைத்து அவர்கள் நேரில் சென்று பாா்வையிட்டு தறிப்பதற்கான அனுமதி வழங்குதற்கும் , அரச வீட்டுத்திட்டம், அரசசாா்பற்ற வீட்டுத்திட்டம் என்பவற்றினால் பிரதேச செயலகங்களினூடாக வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் பனை மரம் தறிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் பனை அபிவிருத்தி சபைக்கு ஆலோசனை வழங்கியதுடன் , பனை அபிவிருத்தி சபையினால் யாழ் மாவட்டத்தில் பனம் விதை நடுவதற்கான இடங்கள் காணப்படுமாயின் அதற்கான இடஅமைவு தொடர்பான விடயத்தினை பிரதேச செயலாளர்களை அறிக்கையிடுமாறும் தெரிவித்தாா்.
பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாக பிரதேச செயலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான உடனடித் தீர்வுகள் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு வி. சகாதேவன் அவர்களும் கலந்து கொண்டார்.
மேலும் இக்கலந்துரையாலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி .உ.தர்சினி ,பிரதேச செயலாளர்கள், பனைஅபிவிருத்தி சபையின் முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
 
 
1 2 3 4 5