யாழ்ப்பாணத்திற்கும் இரத்தினபுரிக்கும் இடையில் கலாசார மற்றும் மொழிப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் நோக்கில், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து வருகைதந்த உத்தியோகத்தர்கள் இன்று (10.09.2026) முற்பகல் 9.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்தனர். வருகைதந்த உத்தியோகத்தர்களுக்கான அறிமுக நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு கலாசார அறிவு மற்றும் கலாசார அம்சங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், இவ்விஜயம் கலாசார அறிவு, பாரம்பரியம் மற்றும் தமிழ் மொழியின் சிறப்புகள் தொடர்பாக அறிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும், இரத்தினபுரிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கலாசார, இன மற்றும் மத நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இது அமையும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்விஜயம் மூன்று நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இக்காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள முக்கியமான இடங்களைப் பார்வையிடுவதற்கும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருவதைக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள், வருகைதந்த உத்தியோகத்தர்கள் நல்லூர் திருவிழாவில் கலந்துகொண்டு இறையருளைப் பெற்றுக்கொள்ளுமாறும் வாழ்த்துத் தெரிவித்தார். இதன்போது, யாழ்ப்பாண மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி அவர்களால் யாழ்ப்பாண மாவட்டம் தொடர்பான பல்வேறு விடயங்கள் விளக்கக்காட்சிகள் ஊடாக முன்வைக்கப்பட்டன. தேசிய மொழிகள் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. ந. உமாநாத் அவர்களால், மூன்று நாள் விஜயத்தின்போது பார்வையிடப்படவுள்ள இடங்கள் மற்றும் நடைபெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இவ்விஜயம் மொழிப் பரிமாற்றத்தின் ஊடாக கலாசார ஒருங்கிணைப்பை வளர்ப்பதுடன், பல்வேறு மக்கள் குழுக்களிடையே பரஸ்பர புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், இரத்தினபுரி மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலாளர் B. T. G. I. கருணாரத்ன, மேலதிக மாவட்ட செயலாளர் அமிலா விஜயரத்தின, கணக்காளர் பி. ஜி. கே. நில்மியு, யாழ்ப்பாண மாவட்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், தேசிய மொழிகள் மாகாணப் பொறுப்பதிகாரி திரு. ந. உமாநாத் மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் நிதி அனுசரணையுடன், தீவகம் வடக்கு ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய பிரதேச பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி. வனஜா செல்வரட்ணம் தலைமையில் இன்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு ஊர்காவற்றுறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான உயர்திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி. தர்சினி நிதர்ஷன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் (பதில்) திருமதி. மாலினி கிருஷ்ணானந்தன் மற்றும் மூத்த கலைஞர் திரு. ஆறுமுகம் யோகராசா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வுகள்:
நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்றல், மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், தமிழ்மொழி வாழ்த்து, பிரதேச கீதம், ஆசியுரைகள் மற்றும் அரங்கத் திறப்புரை ஆகியன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து திரு. ச. அசிஸ்குமார் – கவிஞர் (மெலிஞ்சிமுனை) அவர்களின் அரங்கத் திறப்புரையும், காந்திஜீ நாடகமன்றம் (தம்பாட்டி) வழங்கிய வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. தொடர்ந்து செல்வி. துவாரகா சுந்தரலிங்கம் (உதவிப் பிரதேச செயலாளர்) அவர்களின் வரவேற்புரை நடைபெற்றது. அருணோதயா இயல், இசை நாடக மன்றம் (அனலைதீவு) வழங்கிய கிராமிய நடனமும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் தலைமையுரையும், காவலூர் கலைக்கழகம் (ஊர்காவற்றுறை) வழங்கிய இசைக்கதம்பமும் இடம்பெற்றன. தொடர்ந்து கிறிஸ்து அரசர் கலை மன்றம் (மெலிஞ்சிமுனை) வழங்கிய நாட்டுக்கூத்தும் அரங்கேற்றப்பட்டது.
மேலும், கலைமன்றங்களுக்கிடையிலான பிரதேச மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இதன்போது மகாமேரு கலைமன்றம் (புளியங்கூடல்) வழங்கிய குழு நடனம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வழங்கிய கவியரங்கம் மற்றும் காந்திஜீ நாடக மன்றம் (தம்பாட்டி) வழங்கிய அரிச்சந்திரா மயான காண்டம் ஆகியன இடம்பெற்றன. தொடர்ந்து ‘கலை விழுது’, ‘கலை முகிழ்’ எனும் கௌரவிப்புகளின் கீழ் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக கலாசார உத்தியோகத்தர் செல்வி தக்சாயினி செல்வகுமார் அவர்களால் நன்றியுரை ஆற்றப்பட்டது.


மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் இணைந்து நடாத்தும் விசேட தொழிற் சந்தை தொடர்பாக பங்குதாரர்களுடனான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.09.2026) பிற்பகல் 03.30 மணிக்கு மாவட்ட செயலக செயலமர்வு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 26ஆம் திகதி தொழில் சந்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில் தேடுவோருக்கும் தொழில் வழங்குநர்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் நோக்கில் எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் தொழில் சந்தையொன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். மாவட்ட மற்றும் பிரதேச செயலகப் பிரிவு மட்டங்களில் வருடாந்தம் தொழில் சந்தைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய தரவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2,261 பேர் இவ்வாண்டு வேலைவாய்ப்பற்றவர்களாகப் பதிவாகியுள்ள போதிலும், இந்தத் தரவுகள் வேலையற்றோரின் முழுமையான எண்ணிக்கையாக இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தொழிற்சந்தைக்காக வேலைதேடுவோரின் தற்போதைய தகவல்களைப் பெறுவதற்காக மாவட்ட செயலகத்தின் இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக Google Form அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதுவரை 570 பேர் அதில் பதிவு செய்துள்ளனர். மேலும், யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புக்கான கோரிக்கை அதிகமாக இருந்தாலும், தொழில் வழங்குநர்கள் எதிர்பார்க்கும் வகையில் பணிக்கு தொடர்ச்சியாக வருதல், பொறுப்புடன் பணியாற்றுதல் மற்றும் தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ளுதல் போன்ற விடயங்களில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக சில நிறுவனங்கள் வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்களை அழைத்து வந்து தங்குமிட வசதிகளுடன் பணியில் அமர்த்தும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் யாழ்ப்பாண மாவட்டம் தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் முன்னிலை பெற்றுள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் தொழில்திறன் மற்றும் பணியாற்றும் ஆர்வத்தை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பு தொடர்பான இடைவெளியை குறைக்க முடியும் எனவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். தொழில் தேடுவோர் மற்றும் தொழில் வழங்குநர்கள் இருதரப்பினரையும் ஒரே தளத்தில் இணைத்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இத்தொழில் சந்தையின் பிரதான நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நிறுவனங்களின் அபிப்பிராயங்கள் கேட்டறிந்து சிறப்பாக தொழில் சந்தையினை நடாத்துவதற்கும் யாழ்மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அதிகவாய்ப்பானதாக அமைய அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் இக்கலந்துரையாடலில் 30 இற்கு மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மனித வள அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் திரு. க.கருணாகரன், மாவட்ட மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்சந்தை நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ள பங்குதாரர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பெரெண்டினா நிறுவனத்தின் அனுசரணையில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, பெரெண்டினா நிறுவனத்தின் வடக்கு மாகாண வலய முகாமையாளர் திரு. ஆர். இராஜேஸ்வரன் தலைமையில் நேற்று (07.09.2026) மாலை 5.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றுகையில், நீண்டகாலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு சமூக நலச் செயற்பாடுகளில் தனது பங்களிப்பை வழங்கிவரும் பெரெண்டினா நிறுவனம், பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் உதவ முன்வந்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்தார். அந்த வகையில், தெல்லிப்பழை மற்றும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு, அவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாதாந்தம் 1,500 ரூபாய் வீதம் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கு பெரெண்டினா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில், தெரிவுசெய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிதியுதவி மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றது. எனவே, இதனை பாடசாலை உபகரணங்கள், கற்றல் தேவைகள் உள்ளிட்ட கல்வியுடன் தொடர்புடைய செலவுகளுக்காகப் பொறுப்புடனும் முறையாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். மேலும், தங்களுடைய பிள்ளைகளை கல்வியில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக பெற்றோர் பல்வேறு சிரமங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பையும் எதிர்பார்ப்புகளையும் மாணவர்கள் உணர்ந்துகொண்டு, கல்வியில் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், பாடசாலைப் பருவம் என்பது வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காத முக்கியமான காலப்பகுதியாகும். இந்தக் காலத்தில் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, எதிர்கால இலக்குகளை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும். மாதாந்தம் வழங்கப்படும் 1,500 ரூபாய் ஒரு பெரிய தொகையாக இல்லாவிட்டாலும், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு வழங்கப்படும் சிறியதொரு ஊக்கமாகும். அதனைச் சரியான முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்குவதுடன், குடும்பத்தின் பொருளாதாரச் சுமையையும் ஓரளவு குறைக்கக்கூடியவர்களாக மாணவர்கள் வளர வேண்டும் என தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலக் கனவுகளையும், அவர்களுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்து வரும் பெற்றோரின் கனவுகளையும் நனவாக்குவதற்கு கல்வியே முக்கியமான அடித்தளமாகும். எனவே, வழங்கப்படும் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, கல்வியில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். மாணவர்களின் கல்விப் பயணத்தில் பெரெண்டினா நிறுவனமும் மாவட்டச் செயலகமும் தொடர்ந்து துணைநிற்கும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், மாணவர்கள் கல்வியில் உயர்ந்த நிலைகளை அடைந்து, தமது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், பெரெண்டினா நிறுவனத்தின் வடமாகாண சுன்னாகம் கிளை முகாமையாளர் திரு. தரிசிக ரூபன், சாவகச்சேரி கிளை முகாமையாளர் திரு. ரு. ருசாந் மற்றும் உதவி முகாமையாளர் திரு. கெ. சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில், சமாசப் பிரதிநிதிகளுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (07.09.2026) காலை 9.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சமாசத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தருதல், யாழ். மாவட்ட கால்நடை வளர்ப்போருக்கு நல்லினப் பசுக்கள் மற்றும் கன்றுகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் சமாசத்தினால் அரசாங்க அதிபரிடம் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இதன்போது, சமாசத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நடைமுறையில் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் மக்களின் வாழ்வாதாரத்திலும் மாவட்டப் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இத்துறைகளின் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளையும் ஆதரவையும் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் எனத் தெரிவித்தார்.
சமாசத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துக் கொள்வதற்கான கோரிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், சமாசம் நீண்டகாலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார். இதன்போது, சமாசத்திற்குச் சொந்தமான காணி இருப்பதாகவும், அக்காணியில் நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்கான விருப்பம் காணப்படுவதாகவும் சமாசத் தலைவர் தெரிவித்தார். எனினும், கட்டட நிர்மாணத்திற்குத் தேவையான போதிய நிதி வளம் தற்போது இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்தில் தற்போது பயன்பாட்டில் இல்லாத பல கட்டடங்கள் காணப்படும் நிலையில், புதிதாக பாரிய கட்டடம் அமைப்பதற்கு முன்னர், ஏற்கனவே உள்ள அரச வளங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். அதன்படி, பயன்பாட்டில் இல்லாத பொருத்தமான அரச கட்டடங்கள் ஏதேனும் உள்ளனவா, அவற்றை சமாசத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்த முடியுமா அல்லது பொருத்தமான இடத்தில் செயற்படுத்த முடியுமா என்பன தொடர்பில் ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும், சமாசத்திடம் காணப்படும் நிதி வளம், அரசாங்க நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி உள்ளிட்ட சாத்தியமான நிதி மூலங்களை ஒருங்கிணைத்து, பொருளாதார ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமான தீர்வொன்றை உருவாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். கோரிக்கைகளை முன்வைப்பது மாத்திரமன்றி, அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும் என்பதை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து ஆராய்வதே முக்கியம் எனவும், கால்நடை வளர்ப்போரின் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் நாம் செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். இதேவேளை, அனுராதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பரிசங்கஸ்வெவ கால்நடை விவசாயப் பண்ணையிலிருந்து, வடமாகாணத்தின் காலநிலைக்கு ஏற்ற வகையில் உயிர்வாழக்கூடிய பசுக்கள் மற்றும் கன்றுகளை உயிர் எடை அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர், தேவையான பசுக்கள் மற்றும் கன்றுகளின் எண்ணிக்கையைத் தெளிவாகக் குறிப்பிட்டு கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்குமாறு தெரிவித்தார். குறித்த கோரிக்கை கிடைக்கப்பெற்றதும், தமது சிபார்சுடன் கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவரிடம் முன்வைத்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
சமாசத்தினால் முன்வைக்கப்பட்ட ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆராய்ந்து, நடைமுறையில் சாத்தியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மாவட்ட செயலகம் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், கால்நடை வளர்ப்புத் துறையின் மேம்பாடு தொடர்பில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆக்கபூர்வமான முறையில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் வடமாகாணப் பிரதிப் பணிப்பாளர், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சமாசத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







