வடமாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், வலிகாமம் மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய “தமிழின் பாரம்பரியம் – நம் பெருமை” எனும் தொனிப்பொருளிலான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (18.09.2026) வெள்ளிக்கிழமை யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளரும் பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி கவிதா உதயகுமார் தலைமை தாங்கினார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம அதிதியாகவும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி மாலினி கிருஸ்ணானந்தன், யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் திருமதி கணேசமூர்த்தி சுலபாமதி, தொல்புரம் மிருதங்கக் கலைஞர் கலாபூஷணம் திரு. மாரிமுத்து சிதம்பரநாதன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பிரதம விருந்தினர் உரை :
பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், அழிந்து வரும் கலைகளைப் பாதுகாத்து, எமது தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசார விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது அனைவரினதும் பொறுப்பு என தெரிவித்தார். சுழிபுரம் மேற்கு பெரிய புலோ கிராமத்தில் ஆலய வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ்விழா, கிராம மக்களின் முழுமையான பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டமை சிறப்பானதாகும் எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், ஒரு பிரதேச செயலகத்தின் நிகழ்வாக மட்டுமன்றி, கிராம மக்கள் தங்களுடைய சொந்த நிகழ்வாக இதனை முன்னெடுத்தமை பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார். மேலும், பெரிய புலோ முதல் விழா நடைபெற்ற இடம் வரையான பயணத்தின்போது வீதியின் இருமருங்கிலும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றமை, பண்பாட்டு விழா மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எனவும குறிப்பிட்டார். “ஒரு பண்பாட்டு விழா மேடைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அது மக்களிடம் சென்று, கிராமங்களின் கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்த வேண்டும்” என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
பிரதேசத்தின் இயற்கை வளங்களான பனை, தென்னை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அமைக்கப்பட்ட மேடை அலங்காரங்கள், பாரம்பரிய இசைக்கருவிகள், ஊர்திகள், ஆடல் மற்றும் இசை நிகழ்வுகள் என விழாவின் ஒவ்வொரு அம்சமும் தமிழர்களின் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தியதாக பாராட்டினார். மேலும், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு வயதினரை ஒன்றிணைத்து விழா நடத்தப்பட்டமை அதன் முக்கியமான வெற்றியாகும் எனவும் தெரிவித்தார். விழாவில் முன்னாள் பிரதி கல்விப் பணிப்பாளர் சங்கீதபூஷணம் அமரர் எஸ். கணபதிப்பிள்ளை நினைவுகூரப்பட்டமையும், பிரதேச செயலக சமூர்த்தி உத்தியோகத்தர் அமரர் தர்சன் அவர்களின் சமூக மற்றும் கலை, கலாசாரப் பணிகள் பாராட்டப்பட்டு அவரது குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டமையும் பண்பாட்டு விழுமியங்களை மதிக்கும் சிறந்த செயற்பாடுகள் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். எமது முன்னோர்களிடமிருந்து கிடைத்த கலை, கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதுடன் அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. இதற்காக இத்தகைய பண்பாட்டு விழாக்கள் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேசத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை கலை, கலாசாரத்தின் ஊடாக ஒன்றிணைத்துள்ள இவ்விழா மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பான பண்பாட்டு விழாக்களில் ஒன்றாக அமைந்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் பாராட்டுத் தெரிவித்தார்.
நிகழ்வுகள் :
இந் நிகழ்வு சுழிபுரம் மேற்கு பெரிய புலோ கிராமத்திலிருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று, இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் முறைப்படி ஆரம்பமானது. பெரியோர்களின் ஆசியுரையைத் தொடர்ந்து, யா/வட்டு இந்துக் கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அரங்கம் தெய்வீகமாகியது. பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பேரவை கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செயற்குழு உறுப்பினர் திருமதி நாகராணி சீதரன் அவர்கள் அரங்குத் திறப்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து யா/விக்ரோரியாக் கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து செயற்குழு உறுப்பினர் திருமதி சிறிதேவி கண்ணதாசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அடுத்ததாக யா/வட்டு இந்துக் கல்லூரி மாணவர்களால் கிராமிய பாடல் பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவை தலைவருமான திருமதி கவிதா உதயகுமார் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். நிகழ்வின் சிறப்பு அம்சமாக பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவர்களின் 'முரளீதர கௌரத்துவம்' எனும் பரத நாட்டிய நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உரை இடம்பெற்றதுடன், கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் 'கலை வாரிதி' விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பதஞ்சலி கேத்திரா மாணவர்களின் 'சண்முகார்ப்பணம்' நாட்டிய நிகழ்வு அரங்கேற்றப்பட்டது. தொடர்ந்து இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 'இளம் கலைஞர் விருது' வழங்கல் இடம்பெற்றது. இதனையடுத்து பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதி அம்சமாக முத்தமிழ் கலை மன்ற கலைஞர்களால் 'இனாவணேஸ்வரன் கூத்து' மிகவும் சிறப்பாக ஆடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது. இறுதியாக நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. தமிழ் கலாசாரம் – நம் அடையாளம் என்ற உணர்வை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இப்பண்பாட்டுப் பெருவிழா, தமிழர்களின் பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் மரபுகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. இந் நிகழ்வில் கலைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் கலா ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20
அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் திருமதி மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் திருமதி A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் திருமதி Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார். மேலும், தற்போது பல அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவற்றுடன் பழைய கையேடு நடைமுறைகளும் தொடர்கின்றன. டிஜிட்டல் மயமாக்கலை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை கொண்டு, தேவையற்ற பழைய நடைமுறைகளை படிப்படியாகக் கைவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு சேவை, காணி சேவைகள், வாகன வரி செலுத்துதல் மற்றும் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் ஏற்கனவே மக்களுக்கு பயனளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அரச நிறுவனங்களின் இலத்திரனியல் உபகரணங்கள், பணியாளர்களின் டிஜிட்டல் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் காலத்திற்கேற்ப மேம்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரச உத்தியோகத்தர்கள் புரிந்துகொண்டு, அவற்றை அரச சேவையின் வினைத்திறனை அதிகரிக்கப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை தமது அலுவலகங்களிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுடனும் பகிர்ந்து, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையை நிறுவன மட்டத்தில் வலுப்படுத்த வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
பயிற்சி பட்டறை :
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டனர். அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, சுமார் 80% அரச சேவைகளை மக்கள் கைபேசி ஊடாக வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இதற்கமைவாக, அரச சேவையின் நவீனமயமாக்கல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் அரச சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது. பயிற்சிப் பட்டறையில் “நல்லாட்சிக்கான செயற்கை நுண்ணறிவு (AI)” உள்ளிட்ட மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களின் பயன்பாடு தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், டிஜிட்டல் ஊடகம் தொடர்பான பொதுக் கணினி விழிப்புணர்வு, மும்மொழி Google Forms உருவாக்குதல், மொழிபெயர்ப்பு கருவிகளின் பயன்பாடு, Mail Merge உள்ளிட்ட நடைமுறைப் பயன்பாடுகள் தொடர்பிலும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப் பயிற்சிகளை திரு. சமிச அபேசிங்க, நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO), Idasara Digital (Pvt) Ltd மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் AI தொழில்நுட்பத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர், அத்துடன் திரு. தங்கராஜ் தவரூபன், பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO), Speed IT Net (Pvt) Ltd மற்றும் Govtech Sri Lanka வளவாளர் ஆகியோர் வழங்கினர். இறுதியில் கேள்வி–பதில் மற்றும் கருத்துப் பரிமாற்ற அமர்வு இடம்பெற்றதுடன், அரச நிறுவனங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வலுப்படுத்துவதற்கான நடைமுறை அணுகுமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
1 2 3 4
5 6 7 8 9 10 12 13
 
வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம், புடவைக் கைத்தொழில் திணைக்களம் மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்து நடத்தும் கைவினைஞர்களுக்கான போட்டியும் கண்காட்சியும் இன்றைய தினம் (16.09.2026) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு. ச. கிருஷ்னேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கை. சிவகரன், பிரதிப் பிரதம செயலாளர் – நிதி திரு. என். எஸ். ஆர். சிவரூபன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி செ. வனஜா, வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சோபிகா றோய் றொபின்சன் உள்ளிட்ட தலைமைப் பீட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பாரம்பரியமும் படைப்பாற்றலும் சங்கமிக்கும் கண்காட்சி வடமாகாணத்தைச் சேர்ந்த கைப்பணியாளர்கள் மற்றும் நெசவாளர்களினால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான கைத்தறி நெசவு உற்பத்திகள், களிமண் உற்பத்திகள், தும்பு, ஓலை மற்றும் புல் சார்ந்த உற்பத்திகள், பிரம்பு மற்றும் மூங்கில் சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப் பொருட்கள், ஆபரணங்கள், சங்கீத உபகரணங்கள், துணிகளினாலான கைப்பணிப் பொருட்கள், சிரட்டை மற்றும் சிப்பியிலான கைப்பணிப் பொருட்கள், பற்றிக்ரேந்தை உற்பத்திகள், மர உற்பத்திப் பொருட்கள், தோல் பொருட்கள், கல்லாலான கைப்பணிப் பொருட்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், தென்னை மற்றும் பனை சார்ந்த உற்பத்திகள், நானாவித கைப்பணிப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் எனப் பல்வேறு சிறந்த படைப்புகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன், காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கைவினைப் பொருட்களை பொதுமக்கள் நேரடியாகப் பார்வையிட்டு கொள்வனவு செய்யும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கண்காட்சி நாளைய தினமும் (17.09.2026) தொடர்ந்து நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்காட்சிக்கு வருகை தந்து, எமது வடமாகாண கைவினைஞர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் பார்வையிட்டு அவர்களை ஊக்குவிப்பதுடன், தங்களுக்குத் தேவையான பாரம்பரிய மற்றும் கைவினைப் பொருட்களையும் கொள்வனவு செய்து பயன்பெறுமாறு வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
1 2 3 5 6 7 8 9 10 13 14 17 16 20 21
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் ஆகிய அரச அலுவலகங்களில் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பான விடயங்கள் குறித்து இன்று முதல் (17.09.2026) அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை
076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் பி. ப. 5.30 மணி முதல் பி. ப. 6.30 மணி வரை நேரடி அழைப்பு ஊடாகவும் WhatsApp அழைப்பு ஊடாகவும் தொடர்புகொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகளை விரைவாகப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
1
அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான 2026 ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட போட்டி தொடர் இன்றைய தினம் (17.09.2026) காலை 8:30 மணிக்கு சாவகச்சேரி வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த போட்டித் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றபட்டு தேசியக்கொடி, அரச உத்தியோகத்தர் சங்க கொடி, யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க கொடி ஆகியன ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்வுடன் குறித்த போட்டி தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரச உத்தியோகத்தர்களிடையே நல்லிணக்கம், குழு உணர்வு, உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F. C. சத்தியசோதி, யூகே பாடசாலைகள் சங்க உறுப்பினர் திருமதி மளிக் அமரசேகர, அரச உத்தியோகத்தர் வலைப்பந்தாட்ட சங்கத் தலைவர் திரு. றிக்ஷ் நாணயக்கார, யாழ் வலைப்பந்தாட்ட சங்கத் தலைவர், வளர்மதி விளையாட்டுக் கழக தலைவர், வலைப்பந்தாட்ட பயிற்றுனர்கள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், நடுவர்கள், வளர்மதி விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள், மற்றும் வீரர்கள் பார்வையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
1 2 3 4 5 7 9 10 13 17 18 19