யாழ்ப்பாணம் மாவட்ட மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு 2026.09.29 ஆம் திகதி கிடைக்கப்பெற்றுள்ள வாகன இலக்கத் தகடுகளின் விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய வாகன உரிமையாளர்கள், https://dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக அல்லது 021 211 7116 என்ற தன்னியக்க தொலைபேசி இலக்கத்தை அழைப்பதன் மூலம் தமக்கான திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்துகொள்ள வேண்டும். முற்பதிவு செய்த பின்னர், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் தங்களது கைத்தொலைபேசிக்கு அனுப்பப்படும் குறுந்தகவலுடன், புதிதாக வாகனங்களைப் பதிவு செய்த உரிமையாளர்கள், வாகனப் பதிவுச் சான்றிதழ் / பதிவுப் புத்தகம் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றைச் சமர்ப்பித்து, தங்களது வாகனத்திற்குரிய இலக்கத் தகட்டை குறித்த நேரத்தில் அலுவலகத்திற்கு வருகைதந்து பெற்றுக்கொள்ள முடியும். வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனங்கள் வாகனம் வாடகை அல்லது குத்தகை உடன்படிக்கையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால், உரிமையாளர் தனது தேசிய அடையாள அட்டையுடன், குறித்த நிறுவனத்தினால் வழங்கப்படும் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்து இலக்கத் தகட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். வாகனப் பதிவுச் சான்றிதழின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி. உரிமையாளருக்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என்பதைத் தெரிவிக்கும் வகையில், குறித்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் வழங்கப்பட்ட கடிதம். எனவே, உரிய ஆவணங்களுடன் முற்பதிவு செய்யப்பட்ட திகதி மற்றும் நேரத்திற்கு வருகைதந்து, தங்களுக்குரிய வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வாகன உரிமையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் இன்றைய தினம் (30.09.2026) காலை 10.30 மணிக்கு வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தமதுரையில், இன்றைய நிகழ்வு எமக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கின்ற ஒரு நிகழ்வாகும். குறிப்பாக, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் வடக்கு மாகாணமும், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டமும் முன்னிலை வகித்திருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் அதிகளவான மக்களை இணைத்துக்கொள்வதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் சார்பிலும், எமது சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தேசிய ரீதியாக சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாவது இடத்தைப் பெற்றிருப்பதுடன், உற்பத்தித்திறன் போட்டியிலும் யாழ்ப்பாண மாவட்டம் முதலாவது இடத்தைப் பெற்றிருப்பது எமக்கு பெருமை அளிக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பணியாற்றுகின்ற அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் பெருமையையும் கௌரவத்தையும் அளிக்கின்ற ஒரு சாதனையாகும். அதேவேளை, ஏனைய மாவட்டங்களின் பங்களிப்பையும் நாம் மதிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தனித்துவமான சமூக, பொருளாதார மற்றும் மக்கள் தொகைச் சூழ்நிலைகள் உள்ளன. எனவே, இந்தப் போட்டியை வெற்றிக்கான ஒரு அளவுகோலாக மட்டும் பார்க்காமல், அனைத்து மாவட்டங்களும் ஒன்றுக்கொன்று சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் திட்டம் :
சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் பிரதான நோக்கம் மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய எதிர்பாராத சவால்கள் தொடர்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பாதுகாப்பு உணர்வும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையும் ஏற்படுத்துவதே இதன் முக்கியத்துவமாகும். குறிப்பாக வறுமையில் வாழ்கின்ற குடும்பங்கள், நிரந்தரமான தொழில் வாய்ப்பின்றி வாழ்கின்றவர்கள், சிறு தொழில்களில் பணியாற்றுகின்றவர்கள் மற்றும் எதிர்காலத்தில் சமூக அல்லது பொருளாதாரப் பாதுகாப்பு தேவைப்படக்கூடிய பல்வேறு தரப்பினருக்கும் இத்திட்டம் முக்கியமானதாக அமைகின்றது. பிள்ளைகள் இல்லாத முதியவர்கள், பிள்ளைகளை இழந்தவர்கள், விதவைகள் உள்ளிட்ட சமூகத்தில் பாதுகாப்பு தேவைப்படுகின்ற பல்வேறு தரப்பினரையும் இத்திட்டத்தின் பயனாளர்களாக அடையாளம் கண்டு அவர்களிடம் இந்தத் திட்டத்தை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் சுமார் 11 முதல் 12 இலட்சம் வரையான மக்கள் வாழ்கின்ற நிலையில், இவர்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இன்னும் இணைக்கப்பட வேண்டிய பெருமளவான மக்கள் உள்ளனர். எனவே, இந்தத் திட்டத்தின் பயன்கள் தொடர்பில் கிராம மட்டம் வரை விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகும். வறுமையின் உண்மையான நிலையை அடையாளம் காண வேண்டும் வடக்கு மாகாணத்தின் பொருளாதார நிலைமையை நாம் மேலோட்டமாக மட்டும் மதிப்பிடக்கூடாது. யாழ்ப்பாண நகரத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் பார்க்கும்போது பெரிய கட்டடடங்கள், வர்த்தக நிலையங்கள், நவீன சேவைகள் என பொருளாதார முன்னேற்றம் காணப்படுவது உண்மை. ஆனால் கிராம மட்டத்திற்குச் சென்று, பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் நிலைமையைப் பார்க்கும்போது, இன்னும் பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. காலணி வாங்க முடியாத மாணவர்கள், பாடசாலைப் பையைப் பெற்றுக்கொள்ள முடியாத குடும்பங்கள், கல்வியைத் தொடர்வதற்கு பொருளாதார ரீதியாக சிரமப்படுகின்ற பிள்ளைகள் இன்னும் இருக்கின்றனர். எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்கள் மேல்மட்டத்தில் மட்டும் நின்றுவிடாமல், உண்மையாக உதவி தேவைப்படுகின்ற மக்களை அடையாளம் கண்டு கீழ்மட்டம் வரை சென்றடைய வேண்டும்.
அரச அதிகாரிகளின் பொறுப்பு மிகவும் முக்கியமானது :
அரசாங்கம் என்ற வகையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை நாம் வழங்கி வருகின்றோம். எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பு தொடரும். அதேவேளை, பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு முக்கியமான பொறுப்பும் கடமையும் உள்ளது. மக்களின் பிரச்சினைகளை உரிய அதிகார மட்டத்திலேயே தீர்ப்பதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி, தேவையற்ற காலதாமதங்களைத் தவிர்த்து மக்களுக்கு விரைவான சேவையை வழங்க வேண்டும். மக்களின் முறைப்பாடுகள் தொடர்ச்சியாக மேல்மட்டத்திற்கு வரக்கூடிய நிலை ஏற்படாமல், பிரதேச மட்டத்திலேயே பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான செயற்பாட்டு அணுகுமுறை அவசியமாகும்.
ஒருங்கிணைந்த செயற்பாடே எமது பலம் :
அரசியல்வாதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒருமுகமாக இணைந்து செயற்பட வேண்டும். எமது மக்களின் நலன் மற்றும் எமது பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்துவது எமக்கு முன்னுள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். மக்கள் தொகை குறைதல், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் வெளிநாடுகளுக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடம்பெயர்வது போன்ற சவால்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எமது இளைஞர்களுக்கு இங்கேயே கல்வி, தொழில், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையை உருவாக்கக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகவே மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இந்த அபிவிருத்திப் பணிகள் வெறும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியாக மட்டும் இருக்காமல், இளைஞர்களின் எதிர்கால நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையிலும் அமைய வேண்டும்.
கிராமம் மட்டத்தில்விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் :
இலங்கையில் சுமார் 2 கோடியே 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற நிலையில், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. வடக்கு மாகாணத்திலும் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட வேண்டிய பெருமளவான மக்கள் உள்ளனர். எனவே, சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை கிராமம் கிராமமாகவும், குடும்பம் குடும்பமாகவும் கொண்டு சென்று, தகுதியுடைய அனைவரையும் இத்திட்டத்தின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்தப் பணியை நடைமுறைப்படுத்துவதில் இங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இன்றைய தினம் விருதுகளைப் பெறுகின்ற முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்ற மாவட்டங்களுக்கும், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விருதுகளைப் பெறுகின்ற அனைத்து மாவட்டங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்களுடைய அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் பொறுப்புணர்வு இல்லாமல் இந்தச் சாதனைகளை அடைய முடியாது. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான மக்களை சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குள் இணைத்து, எமது மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் ஏற்படுத்துவதற்காக அனைவரும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அமைச்சர் தெரிவித்தார். இறுதியாக, இன்றைய விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் தமது நன்றியைத் கெளரவ அமைச்சர் தெரிவித்துக்கொண்டார்.

காங்கேசன்துறை இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணி உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம் பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் WMAM நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (30.09.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயத்திற்கு அரச காணி 351.23 ஏக்கர் வழங்குவதற்கு அதிமேதகு சனாதிபதி அவர்களின் அங்கீகாரத்துடன் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு முதலீட்டு வலயத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 351.23 ஏக்கர் காணிப் பரப்பிற்குள், இன்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட 187.56 ஏக்கர் காணியும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் மற்றும் மேஜர் WMKK. வீரக்கோன் (Major WMKK.Weerakoon) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமூகப் பாதுகாப்புக்கான தேசிய விருது விழா இன்றைய தினம் (30.09.2026) காலை 10.30 மணிக்கு வவுனியாவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் இயக்குநர் சபை உறுப்பினர் திரு. திசன் கோனகல தலைமை தாங்கினார். நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார். வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் சிறப்பு அதிதியாகவும், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. மருதலிங்கம் பிரதீபன், வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி.ஏ. சரத்சந்திர, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. ஏ. உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர் திரு. கே. கனகேஸ்வரன், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் (சந்தைப்படுத்தல்) திரு. டி. எஸ். லக்மல் ஆகியோரும் பங்குபற்றினார்கள் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரைகள் மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் உரை :
தேசிய ரீதியில் 12 ஆவது தடவையாகவும் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் - உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் – அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்டம் சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ந்து 12ஆவது தடவையாகவும் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ளமை மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பணிக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்தச் சாதனை தனிநபர் ஒருவருக்கான வெற்றி அல்ல என்றும், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களினதும் கூட்டு முயற்சியின் பெறுபேறாகும் என்றும் தெரிவித்தார். கடந்த 12 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிய அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் விடயம் சார் அனைத்து உத்தியோகத்தர்களின் தொடர்ச்சியான பங்களிப்பும் இந்த வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமூக பாதுகாப்புச் சபையின் திட்டங்கள் எதிர்கால தலைமுறைகளின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான நீண்டகால சேமிப்புத் திட்டங்களாகும் எனத் தெரிவித்த அவர், குழந்தை பிறந்தது முதல் எதிர்காலத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் சேமிப்பின் மூலம், அந்த நபர் 60 வயதை அடையும் போது ஓய்வூதியப் பயனைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார். மேலும், புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் சமூக பாதுகாப்புச் சபையின் திட்டங்கள் பயனளிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கான சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட அலுவலர் பதவி தொடர்ச்சியாக நிரப்பப்படாத நிலையிலும் மாவட்டம் தனது சாதனையைத் தொடர்ந்துள்ளமை, குறிப்பாக சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட பிரதேச உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களினதும் நிறுவன ரீதியான அர்ப்பணிப்பையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார். அதேவேளை, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும் தமது சனத்தொகை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சமூக பாதுகாப்புச் சபையின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன எனவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். இத்தகைய விருது வழங்கும் நிகழ்வுகள் மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், தேசிய மட்டத்திலும் நடத்தப்பட்டு வடமாகாண அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பணியும் சாதனைகளும் நாடளாவிய ரீதியில் கௌரவிக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்தார். மேலும், சமூக பாதுகாப்புச் சபையின் நோக்கமும் இத்தகைய விருது வழங்கும் நிகழ்வுகளின் நோக்கமும், மக்களுக்கான சேவை சரியான முறையில் வழங்கப்படுகின்றது என்பதையும், மக்கள் நலனை முன்னிறுத்தி அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றார்கள் என்பதையும் வெளிப்படுத்துவதாகும் எனவும் தெரிவித்தார். எமக்குக் கிடைக்கும் விருதுகளும் கௌரவங்களும் எமது உத்தியோகத்தர்களுக்கும், இந்தத் திட்டங்களின் பயனாளிகளான பொதுமக்களுக்கும் உரித்தானவை. விருதுகளைப் பெறுவது எமது இலக்காக இல்லாமல், அதன் மூலம் மக்களுக்கு அர்ப்பணிப்புடனும் நியாயத்துடனும் தேவையான சேவையை வழங்குவதே எமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார் .
விருதுகள்:
சமூகப் பாதுகாப்புத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கான தேசிய விருதுகள் பல்வேறு அமர்வுகளில் வழங்கப்பட்டன. பணச்சேகரிப்பில் யாழ்ப்பாண மாவட்டம் தேசிய ரீதியில் முதலிடம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணச்சேகரிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில், தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணச்சேகரிப்பில் சாவகச்சேரி பிரதேச செயலகம் முதலாம் இடத்தையும், கோப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. மேலும், நல்லூர், பருத்தித்துறை, உடுவில், வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், கரவெட்டி, தெல்லிப்பழை, சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகங்கள் தேசிய விருதுக்கான தகுதியைப் பெற்று, இக்கௌரவிப்பு நிகழ்வில் கௌரவிக்கப்பட்டன. அத்துடன், தனிநபர் ரீதியிலான பணச்சேகரிப்பிலும் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மட்டத்தில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். அதற்கமைய, கோப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த திரு. கே. வர்ணதாஸ் முதலாம் இடத்தையும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த திரு. ஆர். சுபேந்திரன் இரண்டாம் இடத்தையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த திருமதி. கே. டர்ஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இச்சாதனையானது யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்கள் பங்களிப்புடன் மேற்கொண்ட பணச்சேகரிப்பு நடவடிக்கைகளின் சிறப்பான பெறுபேறாகக் குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு. பா. பிரதீபன், மேலதிக அரசங்க அதிபர்கள் ,சமுர்த்திப்பணிப்பாளர்கள், திட்டமிடல்பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,உள்ளிட்டவர்கள் பங்குபற்றி சிறப்பித்தனர்.

2026.03.29 ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு 2025(2026) செய்வதற்கான எழுத்துப் போட்டிப் பரீட்சை மற்றும் 2026.09.04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் உள்நாட்டலுவல்கள் பிரிவினால் நடத்தப்பட்ட தகுதி மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், காலாண்டுப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்ட தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியல் அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை :
யாழ்ப்பாண மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் மொத்தம் 58 விண்ணப்பதாரிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் சங்கானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் மற்றும் வேலணை பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தலா 5 பேரும், கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தலா 6 பேரும், மருதங்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தலா 4 பேரும், கோப்பாய், நல்லூர் மற்றும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து தலா 3 பேரும், ஊர்காவற்றுறை பிரதேச செயலகப் பிரிவிலிருந்து 2 பேரும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து ஒருவருமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
பயிற்சி நியமனக் கடிதங்கள் :
தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கான கிராம உத்தியோகத்தர் பயிற்சி நியமனக் கடிதங்கள் 2026.10.08 ஆம் திகதி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ள விழாவில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுசெய்யப்பட்ட பயிற்சி நியமனதாரர்களுக்கான மூன்று மாத காலாண்டுப் பயிற்சியானது 2026.10.12 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிகச் செயலாளர் (உள்நாட்டு அலுவல்கள்) திருமதி ஓமாலி விமலரத்ன அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







