கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் திரு. யசஸ் ஹேவகே (Yasas Hewage) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (14.10.2026) மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையில் கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய முதலீட்டாளர்களைக் கைத்தொழில் பேட்டையில் முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியமான வளங்கள், சந்தையில் அதிக கேள்வி காணப்படும் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் அவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பிலும் சபையின் தலைவர் அரசாங்க அதிபருக்கு விளக்கமளித்தார்.இச்சந்திப்பில், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கைத்தொழில் பேட்டை பிரிவின் பணிப்பாளர் திரு. சிறிமால் ஜெயதிலக, சபையின் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் திரு. கா. சசிகரன் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 2
உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு, வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்த 257 பயனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (14.10.2026) பி. ப. 03.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
வரவேற்புரை :
இந்நிகழ்வில் கௌரவ அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளை வரவேற்று, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
தலைமையுரை :
தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கெளரவ அமைச்சர் உள்ளிட்டவர்களை வரவேற்று, ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படைத் தேவைகளில் வீடு மிகவும் முக்கியமானது எனவும், கடந்த காலங்களில் வீடமைப்புத் திட்டங்களின் கீழ் 6 இலட்சம், 10 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ரூபா என வெவ்வேறு அளவுகளில் நிதி வழங்கப்பட்ட நிலையில், இம்முறை 20 இலட்சம் ரூபாவாக நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது மகிழ்ச்சியான விடயம் எனவும் தெரிவித்தார். அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவும், அமைச்சரவை அனுமதியின் அடிப்படையிலும் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட மக்களின் சார்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். கடந்த காலங்களில் போதிய நிதியின்மையால் வீடுகளை அமைப்பதில் பயனாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். வாடகை வீடுகளிலும் தற்காலிக குடியிருப்புகளிலும் வாழ்ந்த குடும்பங்கள், குறிப்பாகப் பிள்ளைகளின் கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சவால்களைச் சந்தித்தனர். இத்தகைய துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பயனாளிகள் தமக்கென வீடுகளை அமைத்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வாய்ப்பை இத்திட்டம் ஏற்படுத்தும் என நம்புகின்றேன். வீடமைப்புத் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்காகப் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். பயனாளிகளுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுப்பது முதல் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது வரை பல்வேறு நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டங்களிலும் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்காக உழைத்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த அண்ணளவாக 3,300 குடும்பங்களுக்கு வீடமைப்புத் தேவை காணப்படுகின்றது. இதுவரை கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையில் 2,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளன. குறிப்பாக, காணியற்ற குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியுள்ளது. இறுதியாக, இத்திட்டத்தின் மூலம் பயனடையும் அனைத்து குடும்பங்களும் தமது வீடுகளை நிறைவு செய்து, குடும்பத்தினருடனும் பிள்ளைகளுடனும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என வாழ்த்துகின்றேன் எனத் தெரிவித்தார்.
பிரதம விருந்தினர் உரை:
வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, அனைவருக்கும் கௌரவமான வாழ்க்கையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும் என கெளரவ அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தினதும் அடிப்படைத் தேவையாகும். ஒரு குடும்பம் சொந்த வீடின்றி வாழும்போது, சமூகத்தில் பல்வேறு நெருக்கடிகளையும் மனவேதனைகளையும் எதிர்கொள்கின்றது. அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் திறப்பு விழாக்களில் கலந்துகொண்டபோது, சொந்த வீட்டைப் பெற்ற மக்களின் முகங்களில் காணப்பட்ட மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் தமக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகக் குறிப்பிட்டார் கடந்த மூன்று தசாப்தங்களாக வடக்கு, கிழக்கு மக்கள் பல்வேறு நெருக்கடிகளையும் இழப்புகளையும் எதிர்கொண்டுள்ளனர். யுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வீடுகளையும் சொத்துக்களையும் உடைமைகளையும் இழந்த மக்களின் வாழ்க்கையில் மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். மீள்குடியேற்ற வீடமைப்புத் திட்டத்தின் கீழ், 13,000 இற்கும் அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் காலங்களில் அனைவருக்கும் வீடுகளை வழங்கி, மீள்குடியேற்றம் என்ற தேவை இல்லாத நிலையை உருவாக்குவதே ஜனாதிபதியின் இலக்காகும். அதேவேளை, வீட்டுத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. முன்னர் ஐந்து இலட்சம் ரூபாவாக இருந்த வீட்டுத் திட்ட நிதி பின்னர் பத்து இலட்சம் ரூபாவாகவும், அதனைத் தொடர்ந்து பதினைந்து இலட்சம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டு, தற்போது இருபது இலட்சம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தமது சொந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கான வாய்ப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இருபது இலட்சம் ரூபா வீட்டுத் திட்டத்தின் கீழ் 833 வீடுகள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் வீட்டின் நிர்மாண வேலைகளை பூர்த்தி செய்த 257 வீடுகளுக்கான சான்றிதழ்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் தமது வீடமைப்புப் பணிகளை விரைவாக நிறைவு செய்து, இவ்வாண்டின் இறுதிக்குள் வீடுகளில் குடியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் ஆண்டிலும் ஆயிரக்கணக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இருப்பினும், குறிப்பாக யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் காணிப் பற்றாக்குறை பெரும் சவாலாக உள்ளது. இதற்குத் தீர்வாக, நகர எல்லைக்குள் வாழும் மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்மாடிக் குடியிருப்புத் திட்டங்களை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் பொருளாதார நிலைமையைப் பொறுத்தவரையில், கடன் திருப்பிச் செலுத்த முடியாத நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலினால் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. வீடுகள் மற்றும் காணிகளை இழந்த மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் தலைமையில் நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், போலிப் பிரசாரங்கள், அவதூறுகள் மற்றும் இனவாத, மதவாத நடவடிக்கைகள் மூலம் இந்தப் பயணத்தைத் தடுக்க முடியாது. மக்களின் நலனையும் நாட்டின் முன்னேற்றத்தையும் இலக்காகக் கொண்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையர் திரு. அனுஜனின் தண்டனை நீக்கப்பட்டமை தொடர்பிலும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஜனாதிபதியின் நேரடித் தலையீடும் சட்டத்தரணிகள் குழுவின் நடவடிக்கைகளும் இதற்குப் பங்களித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், திரு. அனுஜன் விரைவில் நாடு திரும்ப வேண்டும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இறுதியாக, வீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் தமது வீடமைப்புப் பணிகளைத் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து, தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பானதும் கௌரவமானதுமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,114 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முன்னெடுப்பு : வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் நிதியுதவியுடன், இடம்பெயர்ந்து மீள்குடியமர்ந்த மக்களுக்காக 2026ஆம் ஆண்டில் தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியில் 833 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தற்போது வீடமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், குறித்த அமைச்சின் நிதியுதவியுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 281 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டங்களில், தமது வீடமைப்புப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்த பயனாளிகளில் முதற்கட்டமாக 257 பேருக்கு, உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு இன்றைய நிகழ்வில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் :
இந் நிகழ்வில், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன், பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வீட்டுத்திட்டப் பயனாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 9 10 11 13
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிப் போட்டி நாளை (15.10.2026) பத்தரமுல்லை, சுஹுருபாயா கட்டடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது. சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 போட்டியாளர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த திரு. குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக பிரினவ சேர்ந்த செல்வி றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகியோர் அடங்குகின்றனர். இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லவுள்ள இருவரும் இன்றைய தினம் (14.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றபோது, இப்போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிபெறுவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என அரசாங்க அதிபர் வாழ்த்துத் தெரிவித்தார். இச் சந்திப்பின் போது பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி மற்றும் மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. தி. உமாசங்கர் யாழ்ப்பாண பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ற .தர்மினி ஆகியோர் உடனிருந்தனர்.
 
1 2
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.10.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை :
வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகம், கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்கள் ஊடாக இதுவரை ரூ.4,525 மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக மத்திய அரசாங்க மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக சக்தி திட்டத்தின் கீழ் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக ரூ.651. 96 மில்லியனும், வீதி அபிவிருத்திக்காக ரூ.441.22 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 833 வீடுகளை அமைப்பதற்காக ரூ.1,666 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கைத்தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகக் கைத்தொழில் முதலீட்டு வலயத்துடன் தொடர்புடைய திட்டங்களுக்கு இவ்வாண்டு ரூ.425.71மில்லியனும், கடந்த ஆண்டு ரூ.71 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்குப் பங்களிப்புச் செய்த கெளரவ அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
இணைத் தலைவர் உரை :
அதிகரித்துள்ள அபிவிருத்தி நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் – வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் இம்முறை அதிகளவிலான அபிவிருத்தி நிதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதனைத் திட்டமிட்ட வகையில் பயன்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் முன்மொழியப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உரிய முறையில் ஆராய்ந்து, அவற்றுக்கான மதிப்பீடுகளைத் துல்லியமாகத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதுடன், ஒதுக்கப்படும் நிதியை உரிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி, அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் எனவும் கெளரவ ஆளுநர் தெரிவித்தார்.
பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வு :
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள், திணைக்களங்களினால் முன்வைக்கப்பட்ட சவால்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இதன்போது, அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஆராயப்பட்டதுடன், இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலகம், மத்திய அரச திணைக்களங்கள் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன. மேலும், சுழலும் உயிரியல் சுத்திகரிப்பு ஆலையை (RBC Plant) உள்ளூராட்சி மன்றத்திடம் கையளித்தல், நெடுந்தீவில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குத் தேவையான எரிபொருளைக் கடற்படையினரின் பங்களிப்புடன் எடுத்துச் செல்லுதல் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் Life City திட்டத்தின் முன்னேற்றம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கௌரவ வடக்கு மாகாண அவைத் தலைவர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, தீர்வு காணப்படாத நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் அபிவிருத்தித் திட்டங்களை உரிய முறையில் முன்னெடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களின் விபரங்கள் :
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ கருணநாதன் இளங்குமரன், கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வைத்தியர் கெளரவ சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, வைத்தியர் கெளரவ இராமநாதன் அர்ச்சுனா, வட மாகாண அவைத் தலைவர் கெளரவ சி. வீ. கே. சிவஞானம், வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 18 19 20
வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடனும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்றைய தினம் (13.10.2026) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி தனுஜா லுக்சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி எழிலரசி அன்ரன் யோகநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் திருமதி உமாகாந்தன் சிவகாமி, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் திரு. D.C. அரவிந்தராஜ் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர். நிகழ்வுக்கு வருகைதந்த விருந்தினர்கள், மாற்றுத்திறனாளிகளின் இசைக்குழுவினரின் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடி, வடக்கு மாகாணக் கொடி மற்றும் மாவட்டக் கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது. பின்னர் உத்தியோகபூர்வ மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. கடந்த 9ஆம் திகதியும் இன்றைய தினமும் இணைந்து மொத்தம் 157 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடத்தையும், கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடத்தையும், முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. இன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கான பரிசில்களை வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் வழங்கிக் கௌரவித்தனர். இந் நிகழ்வில் அரச அதிகாரிகள், திணைக்கள உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 10 9 11 12 14 15 17 18 20