யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16.10.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இலங்கை நீர்வளச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள நீர்வளச் சபையின் காணியில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் கௌரவ அந்தோன் ஜயகொடி ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். புதிதாக நிறுவப்படவுள்ள இந்த நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு, வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களைப் பாதுகாத்தல், அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நீர்வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்தல் போன்ற பணிகளில் முக்கிய பங்காற்றவுள்ளது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், இலங்கை நீர்வளச் சபையின் அதிகாரிகள், தொடர்புடைய துறைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான ‘ஜனரிதம்’ தொடர்பான அறிமுக செயலமர்வு, மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிர்வாக மறுசீரமைப்புப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் டபிள்யூ. எம். ஏ. எஸ். விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (15.10.2026) மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் ஊடாகப் பொதுமக்கள் பெற்றுக்கொண்ட சேவைகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வதற்கும், அதன் மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொள்கைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்குமான நோக்கில் இச்செயலமர்வு நடைபெற்றது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி ந. யாழினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2026ஆம் ஆண்டுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (15.10.2026) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபர் உரை !
இந் நிகழ்வில் அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், 2026ஆம் ஆண்டுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், ஆண்கள் பிரிவு, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவு மற்றும் கலப்புப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் பட்டங்களை வென்றமை வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை எனத் தெரிவித்தார். பல்வேறு திணைக்களங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அணிகள் சிறந்த பயிற்சிகளுடனும் வசதிகளுடனும் போட்டிகளில் பங்கேற்ற நிலையில், அலுவலகக் கடமைகள், குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பாராட்டத்தக்கவை எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றமை, கலப்புப் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தமை மற்றும் ஆண்கள் பிரிவில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சம்பியன் பட்டத்தைப் பெற்றமை ஆகியன மாவட்டத்தின் விளையாட்டுத்துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு முறையான பயிற்சிகள், தேவையான வசதிகள் மற்றும் நிதி ஆதரவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், எதிர்காலப் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகளை முன்கூட்டியே ஆரம்பித்து, அதற்கான செலவுகளில் ஒரு பகுதியையாவது மாவட்ட மட்ட நிதியிலிருந்து வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். அதேவேளை, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அதிகாரிகள் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உரிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதுடன், அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டிகளில் பங்கேற்கும் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம் எதிர்காலப் போட்டிகளிலும் மாவட்டம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இறுதியாக, இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்ற வீர, வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் போட்டிகளின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
போட்டியின் விபரங்கள் :
செப்டெம்பர் 16ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டித் தொடரில், இலங்கை அரச சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு அரச திணைக்களங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்புப் பிரிவுகளில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இம்முறை முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தேசிய மட்டத்திலான அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டித் தொடரில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது. ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பிரிவில் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான பிரிவில் (Over 40) யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியது. கலப்புப் பிரிவில் (Mixed) ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்ற போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் பட்டத்தை வென்றதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. மேலும், B பிரிவு பெண்களுக்கான லீக் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அதே பிரிவின் நாக்-அவுட் சுற்றில் மூன்றாம் இடத்தையும் பெற்றது. C பிரிவு பெண்களுக்கான போட்டியிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களால் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் பங்கு பற்றியவர்கள் விபரங்கள் : இந் நிகழ்வில் பிரதம பொறியியலாளர் கே. திருக்குமரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமார், உள்ளகக் கணக்காய்வாளர் எஸ். ரமேஷ்குமார், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. சிறிவர்ணன், நிர்வாக உத்தியோகத்தர் கே.பி. தனபால, , காணி மேலதிக மாவட்டப் பதிவாளர் மற்றும் பிரதி பதிவாளர், மாவட்டச் செயலகக் கணக்காளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விருதுகளைப் பெற்றுக்கொள்ள வருகைதந்த வீர, வீராங்கனைகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பார்வையற்றோருக்கான தேசியப் பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் இரண்டாம் மற்றும் ஐந்தாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில், இன்றைய தினம் (15.10.2026) பத்தரமுல்லை, சுஹுருபாயா கட்டடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இப்போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இறுதிப் போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்ட மூவின 10 போட்டியாளர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றிருந்தனர். இதன்போது, யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த செல்வி றெஜிரொபின்சன் கீர்த்தனா இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த திரு. குலேந்திரன் ஜெகதீசன் ஐந்தாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டாம் இடத்தைப் பெற்ற செல்வி றெஜிரொபின்சன் கீர்த்தனாவுக்கு விருது, சான்றிதழ், 75,000 ரூபா பெறுமதியான காசோலை மற்றும் ஐந்து வருடங்களுக்கு துறைசார் கற்கையைத் தொடர்வதற்கான அனுசரணைப் பத்திரம் வழங்கப்பட்டது. ஐந்தாம் இடத்தைப் பெற்ற திரு. குலேந்திரன் ஜெகதீசனுக்கு விருது , சான்றிதழுடன் 10,000 ரூபா பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது. இருவரும் பாராளுமன்ற உறுப்பினரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவருமான கௌரவ சுகத் வசந்த டி சில்வா அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். தேசிய மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் சிறப்பிடங்களைப் பெற்றமை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், சாதனை படைத்த இருவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டமும் இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம்(15.10.2026) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கடந்த கூட்டத்தின் தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், மாவட்டத்தின் சுற்றாடல் பாதுகாப்பு, கழிவு முகாமைத்துவம், டெங்கு ஒழிப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, பின்வரும் அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டதுடன், பின்வரும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
01.யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு அகற்றுவதற்கு துரித நடவடிக்கை.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள ஆபத்தான மரங்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தவிசாளர்கள், செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு, ஆபத்தான மரங்கள் காணப்படும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்ற வேண்டியதன் அவசியத்தை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஆபத்தான மரங்களை அகற்றுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களிடமிருந்து தேவையான வழிகாட்டல்களையும் அறிவுறுத்தல்களையும் பெற்று, நடைமுறைகளுக்கு அமைவாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்நடவடிக்கைகளின்போது பொதுமக்கள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொது இடங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன், ஆபத்தான மரங்களை அகற்றுதல் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் பிரதேச செயலாளர்களும் உள்ளூராட்சி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பான பிரச்சினைகளைத் காலதாமதமின்றி ஆராய்ந்து, அவற்றை அகற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
02.சுற்றாடல் அதிகாரசபையின் வழிகாட்டல்:
மின்னணுக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி, நடைமுறைச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
03.திணைக்களங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு: மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் சுற்றுச்சூழல் மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.
04.தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகள்: ஒக்டோபர், நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எதிர்கொள்ளக்கூடிய சமூக மற்றும் பிராந்தியப் பிரச்சினைகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவற்றுக்கான தீர்வுகளை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
05.பிரதேச செயலாளர் மட்டத்தில் ஒலி அமைப்புகளின் உரிமையாளர்களுடன், பிரதேச சபைத் தவிசாளர்களின் பங்கேற்புடன் ஒரு மாத காலத்திற்குள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி, ஒலி அமைப்புகளின் பயன்பாடு தொடர்பான பொதுவான நடைமுறைகளை உருவாக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
06.மேலும், மாவட்டத்தில் அனைத்துத் தரப்பினரினதும் ஒத்துழைப்புடன் டெங்கு பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், மழைக்காலம் நெருங்கி வருவதால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
07 சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை உரிய முறையில் அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் நோக்கில் பிரதேச செயலாளர் மட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுற்றாடல் குழுக் கூட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
08.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் புவிசார் வளங்களை அகழ்வது தொடர்பான மாவட்டக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள் குறித்து வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலத்திரனியல் கழிவுகளைத் திறம்படக் கையாளுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம்!
இலத்திரனியல் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளைச் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வது தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இக்கழிவுகளைத் திறம்படக் கையாள்வதற்கான நடவடிக்கைகளில் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சுற்றாடல் அதிகாரசபை Dialog Axiata PLC நிறுவனத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் லோ.கி. ஆனந்த் வரவேற்புரையாற்றியதுடன், நிகழ்ச்சியின் நோக்கம், சுற்றாடல் முகாமைத்துவத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வகிபாகம் மற்றும் அண்மையில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய சுற்றாடல் சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். தொடர்ந்து, இலத்திரனியல் கழிவுகளை விசேடமாகக் கருத்திற்கொண்டு கழிவு முகாமைத்துவ ஒழுங்குமுறைகள் தொடர்பில் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி செங்கமலச்செல்வி செந்துரன் உரையாற்றினார். இலத்திரனியல் கழிவு முகாமைத்துவத்தைச் சுழற்சிப் பொருளாதாரத்தின் ஊடாக ஊக்குவித்தல் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஸ்ரீ. அசோகரத்தினம் விளக்கமளித்தார். திண்மக் கழிவுகளைத் திறம்பட முகாமைத்துவம் செய்வது தொடர்பான விடய ஆய்வினைப் பருத்தித்துறை நகரசபைச் செயலாளர் திரு. C. பிரசாத் முன்வைத்தார். மேலும், E-Kunu திட்டத்தின் ஊடாக இலத்திரனியல் கழிவுகளைச் சேகரித்து முகாமைத்துவம் செய்வது தொடர்பில் Dialog Axiata PLC நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. தி. சிவகுகன் விளக்கமளித்தார். இந்நிகழ்ச்சித் திட்டமானது இலத்திரனியல் கழிவுகளைப் பொறுப்புடன் அகற்றுதல், அவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல் மற்றும் சுற்றாடல் மாசுபாட்டைக் குறைத்தல் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், சுற்றாடல் பாதுகாப்பில் அனைத்துத் தரப்பினரினதும் பங்களிப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விபரங்கள் :
இக்கூட்டத்தில் பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பொலிஸ் அதிகாரிகள், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அகழ்வுப் பொறியியலாளர், கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் துறைசார் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.







