கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (21.10.2026) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அவர்களின் தேவைகள் மற்றும் முன்மொழிவுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கும் இக்கலந்துரையாடல் சிறந்த வாய்ப்பாக அமைகின்றது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறும் விவசாயக் குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கலந்துரையாடல்களில் விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பான தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இவ்விடயங்கள் தொடர்பில் விவசாயம் சார்ந்த அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதன் அடிப்படையில், அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைவாகக் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளைப் பூர்த்தி செய்வது அவசியமாகும். கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை சட்டரீதியான ஏற்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகச் செயற்படுவதால், காப்புறுதிக் கொடுப்பனவுகளை வழங்கும்போதும் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் முன்வைத்துள்ள காப்புறுதிப் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரப்பட்டிருந்த போதிலும், எதிர்பார்க்கப்பட்ட அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளை உரிய முறையில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே, விவசாயிகள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் முன்மொழிவுகளை இக்கலந்துரையாடலில் தெளிவாக முன்வைக்க வேண்டும். இதன்மூலம் பயிர்க்காப்புறுதித் திட்டம் தொடர்பான தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதுடன், மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடைவதற்கும் வழியேற்படும் என மேலும் தெரிவித்தார். இறுதியாக, இக் கலந்துரையாடலில் பங்கேற்ற கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் அதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
விரிவாக ஆராய்வு :
யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிர்க்காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், காப்புறுதிப் பயன்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் திரு. பிறேமசிறி ஜயசிங்காராச்சி, பணிப்பாளர் நாயகம் திரு. கெழும் களுஆராச்சி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு. ரணில் விமலரத்ன, அபிவிருத்திப் பணிப்பாளர் திரு. சந்தன கொடிப்பிலி, நிதிப் பணிப்பாளர் திரு. சமன் சுபசிங்க, காப்புறுதிப் பணிப்பாளர் திரு. கித்மின், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி ரஞ்சனாதேவி, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. டி. கிரிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து அதற்கான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 7 8 10 11 12 14 15
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் வாணி விழா கழகத்தின் தலைவரும் கணக்காளருமான வ. ரதீஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (20.10.2026) மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜையினைத் தொடர்ந்து, வரவேற்பு நடனம், உத்தியோகத்தரின் மழழையின் தனிப் பாடல் மற்றும் உத்தியோகத்தர்களின் குழுப்பாட்டு, பல்லியம் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
அரசாங்க அதிபர் உரை :
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாணி விழா நிகழ்வில், நவராத்திரி விழாக்கள் உத்தியோகத்தர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதுடன், தமிழர் பண்பாட்டு மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். கடந்த ஒன்பது நாட்களாக முன்னெடுக்கப்பட்ட நவராத்திரி பூஜை நிகழ்வுகளையும், வாணி விழாவை முன்னிட்டு உத்தியோகத்தர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பல்வேறு கலை மற்றும் கலாசாரப் போட்டிகளையும் பாராட்டினார். இத்தகைய நிகழ்வுகள் வெறுமனே விழாக்களாக அமையாமல், அலுவலகங்களுக்கிடையிலான நட்புறவையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் தளங்களாகவும், தமிழர் பண்பாட்டு கலைப் களையும் மறக்காமல் வலுப்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றமை மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் சாதனை எனத் தெரிவித்த அவர், இந்த வெற்றியானது அனைத்து உத்தியோகத்தர்களினதும் கூட்டு முயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் வெளிப்பாடாகும் எனக் குறிப்பிட்டார். அத்துடன், மேலும், சுற்றாடல் விருதில் நல்லூர் பிரதேச செயலகம் தங்க விருதையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வெள்ளி விருதையும் பெற்றமைக்கும் பாராட்டுத் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர்கள் தமது அன்றாடக் கடமைகளைப் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அதிபர், நீண்டகாலமாக ஒரே பணியில் ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய சலிப்பைத் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் புதிய பொறுப்புணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்றார். அதன் மூலமே பொதுமக்களுக்குத் தரமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள அரச சேவைகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு உத்தியோகத்தரும் தமக்குரிய பொறுப்புகளை உணர்ந்து, மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் முன்னிறுத்திச் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இறுதியாக, வாணி விழாவைச் சிறப்பாக ஏற்பாடு செய்த நலன்புரிச் சங்கத்தின் தலைவர், நிர்வாகக் குழுவினர், அங்கத்தவர்கள் மற்றும் பங்கேற்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சிறப்பு சொற்பொழிவு :
சைவப் புலவர் திரு கமலநாதன் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றது. மேலும், நவராத்திரி நாட்களில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் தோரணம் பின்னுதல், மாலை கட்டுதல், சைவ வினாவிடைப் போட்டி, கோலமிடுதல், கவிதை ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன. வாணி விழாவின் இறுதியில் நலன்புரிக் கழகம் செயலாளர் கே. கருணாகரன் அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டது.
 
 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 17 21 23 24 25 25 26 28 29 27 30 31 29 32 33 34
யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிநீர் விநியோகம், வெள்ளநீர் தேங்கும் வீதிகள், வீடுகள் மற்றும் காணிகளற்ற குடும்பங்களின் நிலைமை உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய மாவட்ட திட்டமிடல் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் இன்று (16.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வரவேற்புரை :
இக் கூட்டத்தில் வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், கெளரவ அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களைத் துறைசார் ரீதியில் ஒருங்கிணைத்து, அவற்றின் சாதக, பாதக அம்சங்களை முன்கூட்டியே ஆராய்ந்து, நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொள்வதில் மாவட்ட மட்டத் திட்டமிடல் கூட்டம் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், ஒவ்வொரு துறையினதும் விடயங்களை விரிவாக ஆராய்வதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாவட்டத் திட்டமிடல் கூட்டத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் முன்கூட்டியே கலந்துரையாடி, திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், வீதி அபிவிருத்தித் திட்டங்களைத் தனித்தனியாக அணுகாமல், அவற்றுடன் தொடர்புடைய ஏனைய உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தித் தேவைகளையும் கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்த திட்டமிடலை மேற்கொள்வது அவசியம் எனவும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை அடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைத்து, அவற்றைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
குடிநீர், வெள்ளநீர் தேக்கம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆராய்வு :
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் குடிநீர்த் தேவைகள், வெள்ளநீர் தேங்கும் வீதிகள், மலசலகூட வசதிகள் இல்லாத குடும்பங்களின் எண்ணிக்கை, வீடுகள் மற்றும் காணிகளற்ற குடும்பங்களின் விபரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் சமூக சக்தி வேலைத்திட்டங்கள், கல்விச் சீர்திருத்தங்கள், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் 31.08.2026 வரை 6.28 வீதமான வீடுகளுக்கே குடிநீர் விநியோகம் – 2030 ஆம் ஆண்டில் 90.66 இலக்கை அடையத் திட்டம் :
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டபோது, இதுவரை 6.28 வீதமான வீடுகளுக்கே குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டில் திட்டம் நிறைவடையும் போது 90.66 வீதமான வீடுகளுக்குக் குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்தும் நோக்கில், குடிநீர் வழங்கப்பட்டுள்ள பகுதிகள், எதிர்காலத்தில் குடிநீர் வழங்கப்படவுள்ள பகுதிகள் மற்றும் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான வரைபடங்களுடன் கூடிய விரிவான தகவல்களை அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்டச் செயலகத்திற்கும் அனுப்பி வைக்குமாறு கௌரவ அமைச்சர் அவர்கள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கினார். மேலும், வீதிகளின் இரு பகுதிக்கும் குடிநீர் விநியோகக் குழாய்களைப் பொருத்துவதன் மூலமே அனைத்து வீடுகளுக்கும் குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, குடிநீர் விநியோகத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம், குழாய் வலையமைப்பின் விபரங்கள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைப் பிரதேச ரீதியாகப் பகிர்ந்து, திட்டத்தைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் கெளரவ அமைச்சரால் வலியுறுத்தப்பட்டது. வாழ்வாதார மேம்பாடு மற்றும் வீடமைப்புத் தேவைகள் தொடர்பான துல்லியமான தரவுகளைத் திரட்டுமாறு அமைச்சர் அறிவுறுத்தல்! யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான குடும்பங்களின் எண்ணிக்கையையும், காணியற்ற குடும்பங்களின் விபரங்களையும் துல்லியமாகத் தொகுத்துப் பட்டியலிட்டு அனுப்புமாறு பிரதேச செயலாளர்களுக்கு கெளரவ அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
அனர்த்த இடர் குறைப்புத் திட்டங்களுக்கு 38.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு :
2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டபோது, அனர்த்த இடர் குறைப்புக்காக 30 திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கு இதுவரை 38.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 334 திட்டங்கள் :
சமூக சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் 334 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றுக்காக 651.96 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பாக அதன் முன்னேற்றம் தொடர்பிலும் அமைச்சரால் ஆராயப்பட்டது.இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்! யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகள் இதுவரை குறைந்தளவிலேயே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியைத் துரிதப்படுத்தும் வகையில், நடைமுறைப்படுத்தக்கூடிய பாரிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளை விரைவாகத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், இத்தகைய திட்ட முன்மொழிவுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில், அவற்றை 2027 மற்றும் 2028ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத் திட்டங்களில் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கௌரவ அமைச்சர் தெரிவித்தார். காணியற்ற மற்றும் வீடற்ற மக்களுக்காகத் தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் வலியுறுத்தல்! காணி மற்றும் வீடு இல்லாத மக்களின் வீடமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தென்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுவது போன்ற தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை யாழ்ப்பாண மாவட்டத்திலும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் காணியற்ற மற்றும் வீடற்ற மக்களுக்கான வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வாறான மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூட்டத்தில் குறிப்பிட்டார். மேலும், இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான அரச காணிகள் உள்ளனவா எனவும் அவர் வினவினார். இதன்போது, சாவகச்சேரி பகுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை க்கு சொந்தமான காணி இருப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சாவகச்சேரி உள்ளிட்ட பொருத்தமான பகுதிகளில் காணியற்ற மற்றும் வீடற்ற மக்களின் தேவைகளுக்கு ஏற்ப தொடர் மாடி வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாநாதன் இளங்குமரன் வலியுறுத்தினார்.
கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி :
தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தத் திட்டங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தரம் 2 மற்றும் தரம் 6 வகுப்புகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மாவட்டத்திலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டது. அதேவேளை, தற்போதைய காலப்பகுதியில் அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்களைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் பாடசாலை மட்டத்தில் உளவியல் கல்வி மற்றும் ஆலோசனைச் சேவைகளின் அவசியம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பங்கு பற்றிய வர்கள் விபரங்கள் :
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணநாதன் இளங்குமரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் நிரஞ்சன், மேலதிக மாவட்டச் செயலாளர் (காணி) பா. ஜெயகரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ். கபிலன், மாவட்ட மட்டப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர், சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள், விவசாயத் துறை உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
1 2 4 5 6 7 8 8 11 13 16 17 18 19
விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள யாழ்ப்பாண மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் (2026) தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (20.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதுவரை நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்று வந்த இச்சுற்றுத் தொடர், இவ்வாண்டு விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போட்டித் தொடரை இவ்வாண்டுக்குள் நடத்தி முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் துரிதமாக முன்னெடுப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வடமராட்சி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வலிகாமம், மருதங்கேணி மற்றும் தீவகம் ஆகிய ஆறு உதைபந்தாட்டச் சங்கங்களின் ஊடாக, நொக்-அவுட் முறையிலான போட்டிகளின் மூலம் தலா எட்டு கழகங்கள் தெரிவுசெய்யப்பட்டு, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இச் சுற்றுத் தொடரைச் சிறப்பாகவும் ஒழுங்குமுறையுடனும் நடத்துவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள், மைதான ஒழுங்குபடுத்தல்கள், போட்டிகளில் பங்கேற்கும் அணிகளின் தெரிவு, போட்டி முறைமைகள், நடுவர் மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. மேலும், போட்டித் தொடரின் ஏற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக விளையாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டு பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ப. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் உதைபந்தாட்டச் சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 1 2 3 5 6 7 8
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணங்கள், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேர்ணல் W.M.A.M. நிசங்க (Col. WMAM Nissanka) அவர்களினால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்று (16.10.2026) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன. இதற்கமைய, வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 1.29 ஏக்கர் காணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 5.06 ஏக்கர் காணிகளும், வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 4.88 ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ தர்சினி மற்றும் மேஜர் BHDS கருணாரட்ன (Major BHDS Karunarathna) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
1 2 3