தேசிய உற்பத்தித்திறன் போட்டி 2025/2026 இல் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து செயற்பட்ட உத்தியோகத்தர்களைப் பாராட்டும் நிகழ்வு, மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (05.10.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மக்கள் சேவையை வலுப்படுத்தியமைக்கான அங்கீகாரம் :
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறப்பான நிர்வாகச் செயற்பாடுகள், வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துதல், பணிச் செயல்முறைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ஊடாக மக்கள் சேவையை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது. இவ்விருதானது மாவட்டச் செயலாளர் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் கூட்டு முயற்சி, குழுப்பணி மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும்.
தலைமையுரை :
சிறந்த தலைமைத்துவம் – ஒருங்கிணைந்த குழுச் செயற்பாடு : யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலிடம்
– மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பது, அரசாங்க அதிபரின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பான செயற்பாடுகளுக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும். உற்பத்தித்திறனை உயர்த்துதல், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம், வேகம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் மாவட்டச் செயலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது எனத் தெரிவித்தார். இந்த வெற்றியை அடைவதில் உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளரான உதவி மாவட்டச் செயலாளர், உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பங்களிப்பும் ஒருங்கிணைந்த குழுச் செயற்பாடும் முக்கிய பங்காற்றியுள்ளன. எனவே, இவ் வெற்றி சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட்ட ஒட்டுமொத்த மாவட்டச் செயலகக் குழுவினரின் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் கூட்டுப்பணிக்குக் கிடைத்துள்ள கௌரவமாகும். தேசிய ரீதியில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், எதிர்காலத்தில் உற்பத்தித்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், பணிச் செயல்முறைகளைத் தொடர்ந்து நவீனமயப்படுத்துவதற்கும், மக்களுக்கு இன்னும் சிறந்த, விரைவான மற்றும் வினைத்திறன்மிக்க அரச சேவையை வழங்குவதற்கும் புதிய உத்வேகம் அளித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தெரிவித்தார்.
உற்பத்தித்திறன் விருது வெறும் போட்டி வெற்றியல்ல; மக்கள் சேவைக்கான அங்கீகாரம் – அரசாங்க அதிபர்
தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பது, மாவட்ட மக்களுக்கு வினைத்திறனானதும் தரமானதுமான சேவையை வழங்குவதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெறுவது ஒரு சாதனையாகும். ஆனால் அந்த இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது அதைவிடக் கடினமானது. எனவே, தற்போது பெற்றுள்ள இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இதற்கும் மேலான நிலையை அடைவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த வெற்றியின் உண்மையான உரிமையாளர்கள் மாவட்டச் செயலகத்தின் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுகின்ற ஒவ்வொரு உத்தியோகத்தருமே ஆவர். மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் உதவி மாவட்ட செயலாளரின் வழிகாட்டுதலுடன் உற்பத்தித்திறன் தொடர்பான உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். அதேபோன்று ஒவ்வொரு கிளையிலும் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான நல்லுறவு, திறந்த தொடர்பாடல், ஒருவருக்கொருவர் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் ஒரே நோக்குடன் செயற்படுதல் ஆகியவை எமது வெற்றியின் முக்கிய அடித்தளங்களாகும். உற்பத்தித்திறன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அது சிரமமான ஒரு பணியாகப் பார்க்கப்பட்டிருந்தாலும், தற்போது அது எமது அன்றாட அலுவலகப் பணிகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இதன் மூலம் அலுவலகத்தின் செயல்திறனை மட்டுமன்றி பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தையும் மேம்படுத்த முடிந்துள்ளது. அலுவலகப் பொறுப்புகளுடன் தங்களது தனிப்பட்ட மற்றும் குடும்பப் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்திக் கொண்டு உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பான சேவை பாராட்டுக்குரியது. இந்த முதலாம் இடம் வெறுமனே ஒரு போட்டியில் பெற்ற வெற்றியாக பார்க்கப்படக் கூடாது. மாவட்ட மக்களுக்கு நாம் வழங்கும் சேவையின் தரத்திற்கான ஒரு அங்கீகாரமாக இதனைப் பார்க்க வேண்டும். எனவே, எதிர்காலத்திலும் மக்களை மையமாகக் கொண்ட வினைத்திறனான சேவையை வழங்குவதை எமது பிரதான இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், இன்றைய நாள் மாவட்டச் செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களையும் மனதாரப் பாராட்டக்கூடிய மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், இந்த வெற்றியை ஏற்படுத்துவதற்கு பங்களித்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்காலத்திலும் அனைத்து உத்தியோகத்தர்களினதும் ஒற்றுமையானதும் அர்ப்பணிப்பானதுமான ஒத்துழைப்பு தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பாக உத்தியோகத்தர்களின் அனுபவப் பகிர்வு :
நிகழ்வின் ஒரு பகுதியாக, மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் தமது உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பான பணியனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பான அனுபவப் பகிர்வுகளை வழங்கினர். இன்றைய நிகழ்வில் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை ஒருங்கிணைத்த உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களான திரு. செ. பிரசாத், திரு. அ. அ. வினிஸ்ரன், திருமதி ந. லதாங்கி, திருமதி சி. சசிதா மற்றும் திருமதி யோ.கிருஷாந்தினி ஆகியோர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 11 12 15 16 18 19
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு (ஐப்பசி 05), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் “சொந்தமாக இருக்க இடம் – அழகான ஒரு வாழ்க்கை” என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 5,000 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் தேசிய வேலைத்திட்டம் இன்று (05.10.2026) காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 170 வீடுகள் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அரியாலை தென்கிழக்கு (உதயபுரம்) மற்றும் அரியாலை கிழக்கு ஆகிய பகுதிகளில் பயனாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளித்தார். இந் நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்ப்பாண மாவட்ட முகாமையாளர் திரு. யோகேஸ்வரன் தனுஷன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கௌரவ சிவகுமார் உள்ளிட்ட கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 22 வீடுகளும், கோப்பாயில் 18 வீடுகளும், நல்லூரில் 17 வீடுகளும், கரவெட்டி மற்றும் பருத்தித்துறையில் தலா 14 வீடுகளும், உடுவில் மற்றும் தெல்லிப்பழையில் தலா 12 வீடுகளும், சண்டிலிப்பாயில் 11 வீடுகளும் யாழ்ப்பாணம், சங்கானை மற்றும் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 10 வீடுகளும், வேலணையில் 9 வீடுகளும், ஊர்காவற்றுறையில் 8 வீடுகளும், காரைநகரில் 2 வீடுகளும், நெடுந்தீவில் ஒரு வீடும் என மொத்தம் 170 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் அதிதிகளால் கையளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வீடற்ற மற்றும் போதிய வீட்டு வசதிகளற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்விடத்தை வழங்கி, அவர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வீடமைப்புத் திட்டம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகிறது.
1 2 3 4 5 6 7 8 9 10 12
11
பிரதேச செயல உள்ளக அலுவலர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபரின் கருத்துரை :
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், அரச நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதில் உள்ளக அலுவல்கள் பிரிவுகள் முக்கிய பங்காற்ற வேண்டுமெனத் தெரிவித்தார். மேலும், தேசிய நேர்மை விருது போட்டித் தொடரை ஒரு போட்டியாக மாத்திரம் கருதாமல், அரச சேவையில் நேர்மை மற்றும் ஊழல் தடுப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுப்பதுடன், மக்களுக்கு நியாயமானதும் வெளிப்படையானதுமான அரசாங்க நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதில் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உள்விவகார அலகுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் அல்லது பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் உள்விவகார அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுடன் இணைந்து செயற்படுவதற்காக உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அலகுகளுக்குக் கிடைக்கப்பெறும் தகவல்கள் மற்றும் முறைப்பாடுகளை முறையாகப் பதிவு செய்து, அவற்றை இற்றைப்படுத்துவதுடன், தேவையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது உள்விவகார அலகுகளின் முக்கிய பொறுப்பாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இலஞ்சம் பெறுதல், இலஞ்சம் வழங்குதல் மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் தொடர்பில் பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இவ்வலகுகளின் முக்கிய பணிகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை எவ்வித பக்கச்சார்புமின்றி ஆராய்ந்து, அவற்றின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். இதேவேளை, மாவட்ட மட்டத்திலும் அரசாங்க அதிபர் தலைமையில் உள்விவகார அலகு செயற்பட்டு வருவதுடன், அதற்கென உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உள்விவகார அலகுகளுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் உரிய தலைமைத்துவப் பண்புகளுடன் செயற்பட்டு, தங்களுடன் இணைந்து பணியாற்றும் உத்தியோகத்தர்களை முறையாக வழிநடத்த வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பான பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களிலும் மேலதிக பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் நலனை முன்னிறுத்திய, நீதியான, பொறுப்புக்கூறல் மிக்க மற்றும் வெளிப்படையான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு உள்விவகார அலகுகளின் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
போட்டித் தொடர் தொடர்பான விளக்கங்களும் தெளிவுபடுத்தல்களும் :
இலங்கை அரசின் தேசிய நோக்கத்திற்கேற்ப “ஊழலற்ற, நேர்மையான அரச சேவையை வழங்குதல்” என்ற நோக்குடன் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) ஏற்பாடு செய்யப்படும் தேசிய நேர்மை விருது போட்டித் தொடர் – 2026, எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களுக்கிடையே தேசிய நேர்மை விருது போட்டி நடத்தப்படவுள்ளதுடன், போட்டிக்கான வினாக்கொத்துக்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 1,000 புள்ளிகளின் அடிப்படையில் நிறுவனங்களின் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன. மதிப்பீட்டின் அடிப்படையில் சிறந்த நிறுவனமாகத் தெரிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு தேசிய நேர்மை விருதுகள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பதவி நிலை உத்தியோகத்தர் ஒருவரும், உள்ளக அலுவல்கள் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் இச் செயலமர்வில் பங்கேற்றனர். இச் செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபரால் தேசிய நேர்மை விருது போட்டித் தொடருடன் தொடர்புடைய விடயங்கள், போட்டியின் நிபந்தனைகள் மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன், பிரதேச செயலகங்களில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள உள்ளக அலுவல்கள் பிரிவின் கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் அப்பிரிவினால் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும், இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி மாவட்ட உள்ளக அலுவல்கள் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான திருமதி. மேகலா மற்றும் திருமதி. டினோசாமலின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
 
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழகங்களின் கலாசார மற்றும் இலக்கிய மாவட்ட மட்டப் போட்டிகள் சமுர்த்தி மாவட்டப் பணிப்பாளர் பொ. ஸ்ரீவர்ணன் அவர்களின் தலைமையில் இன்று (04.10.2026) ஞாயிற்றுக்கிழமை யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில்சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அரசாங்க அதிபர் உரை :
சிறுவர்களின் கலைத் திறமைகளை வளர்க்க தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் – அரசாங்க அதிபர் சிறுவர்களின் கலை, கலாசார மற்றும் பண்பாட்டு திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதற்கு சமூக மட்டத்திலிருந்து மாவட்ட மட்டம் வரையான போட்டி வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மாவட்ட மட்டப் போட்டிகளில் தெரிவாகும் சிறுவர்களுக்கு தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கலை மற்றும் கலாசார நிகழ்வுகளில் சிறுவர்கள் பங்கேற்பது அவர்களின் மனநிலையில் நல்ல மாற்றத்தையும் நேர்மறையான எண்ணங்களையும் உருவாக்குவதுடன், அவர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கும் துணைபுரியும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். பாரம்பரிய கலைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டிய நிலையில், அவற்றில் சிறுவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கலை, பண்பாட்டு விழாக்கள் மற்றும் போட்டி நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிகழ்வுகள் சிறுவர்கள் தங்களது தனித்திறமைகளையும் குழுத் திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்றார். மேலும், தங்களது விடுமுறை நாளிலும் நடுவர்களாகப் பங்கேற்று ஒத்துழைத்தவர்களுக்கும், சிறுவர்களை முறையாக வழிநடத்தி போட்டிகளில் பங்கேற்கச் செய்த பெற்றோர்கள், சிறுவர் கழகங்கள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளுக்கும் அரசாங்க அதிபர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். சிறுவர்கள் புத்தகக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல், கலை, கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களுடன் இணைந்த முழுமையான ஆளுமையுடையவர்களாக வளர வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அதிபர், எதிர்காலத்திலும் இத்தகைய போட்டிகளை சிறப்பாக முன்னெடுத்து சிறுவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். நடைபெற்ற போட்டிகளின் விபரங்கள் :
வயதுப் பிரிவுகள்:
07 – 10 வயது
11 – 14 வயது
15 – 18 வயது
போட்டி வகைகள்:
பாடல் – (சாதாரண பாடல்)
நாட்டார் பாடல் – (தனிநபர்)
கிராமிய நடனம் – (கூட்டு / கலவன்
அம்மன் கூத்து
குறவர்
காவடி
கோலாட்டம்)
அறிவிப்பாளர்
பேச்சு
உரையுள்
செய்யுள்
ஓவியம்
சிறுவர்களின் கலை, இலக்கிய மற்றும் கலாசாரத் திறமைகளை இனங்கண்டு, அவற்றை மேலும் வளர்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இம்மாவட்ட மட்டப் போட்டிகள் அமைந்துள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் சிறுவர் கழகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்ற இந்த மாவட்ட மட்டப் போட்டிகளில், சமுர்த்தி சிறுவர் கழகங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்களது கலை, கலாசார மற்றும் இலக்கியத் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் சமூர்த்தி கணக்காளர் திரு. இ. முருகதாஸ், யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 10 11 13 15 16
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட தொழிற்சந்தை, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (03.10.2026) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டார். இத் தொழிற்சந்தையின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு துறைகளில் காணப்படும் தொழில் வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் தொடர்பில் நேரடியாக அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இன்றைய தொழிற்சந்தையில் 1600 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டதுடன், 50 தொழில் வழங்கும் நிறுவனங்களும் 12 தொழிற்பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்றன. இதன்மூலம் தொழில் தேடும் இளைஞர்களையும் தொழில் வழங்கும் நிறுவனங்களையும் நேரடியாக இணைக்கும் முக்கிய தளமாக இந் நிகழ்வு அமைந்தது. நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. பொ. சிறிவர்ணன், கணக்காளர் திரு. இ. முருகதாஸ், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. கே. கருணாகரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 17 18 19 20 21 22 22 23 26 27 28 29 31 32 33 34