மாணவ தூதுவர் செயற்திட்டத்தில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருதுகள். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாணவ தூதுவர் செயற்திட்டத்தின் கீழ், இன்று (29.09.2026) கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாணவ தூதுவர் – தேசிய மாநாட்டில், சங்கானை பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் முக்கியமான சாதனைகளைப் பெற்றுள்ளது. இதன்போது, மாணவ தூதுவர் செயற்திட்டத்திற்கான சிறந்த வளவாளர் விருதும், குறித்த செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறந்த அலுவலருக்கான விருதும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. ர. ரவிராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், மாணவ தூதுவர் செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்திய சிறந்த பிரதேச செயலகத்திற்கான தேசிய விருதையும் சங்கானை பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டுள்ளது. மேலும், இச் செயற்திட்டத்தில், சங்கானை பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளமைக்காக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், சங்கானை பிரதேச செயலாளர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோருக்கு தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
 
1 2
பதவியுயர்வுடன் இடமாற்றலாகிச் செல்லும் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு வன்னிக்கான பாதுகாப்புப் படைகளின் பிரதி கட்டளைத் தளபதியாக பதவியுயர்வுடன் இடமாற்றலாகிச் செல்லும் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம். ரிஸ்வி ரிஸிக் (Major General M. Rizvi Rizick RSP ndu) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (29.09.2026) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உள்ள அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, Brigadier L. P. Athukorala RSP USP psc மற்றும் Lieutenant E. D. C. De Zoysa ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3
சனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளைப் பிரதேச மட்டத்திற்கு பரவலாக்கியமைக்காக சிறப்பாகச் செயற்பட்ட பிரதேச செயலகங்களை மதிப்பீடு செய்து, வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பிரதேச செயலகங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தை நல்லூர் பிரதேச செயலகமும், இரண்டாம் இடத்தை தென்மராட்சி பிரதேச செயலகமும், மூன்றாம் இடத்தை கோப்பாய் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டன. இதன்போது குறித்த பிரதேச செயலாளர்கள் மற்றும் சனாதிபதி நிதியத்தின் பிரதேச விடய உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் சனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரொஷான் கமகே, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விமல் சாமிநாதன், வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 6 7 8 11
சிறுவர் பாதுகாப்பு என்பது அனைவரினதும் பொறுப்பு – சமூக மட்ட அமைப்புகள் இணைந்து செயற்பட வேண்டும் – அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (29.09.2026) முற்பகல் 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 70 சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையுரை :
இன்றைய சமூகத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை, போதைப்பொருள் பாவனை, பாடசாலை இடைவிலகல் மற்றும் சிறுவர்களிடையேயான வன்முறை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தற்போது காணப்படுகின்றன. சிறுவர்கள் ஒரு சமூகத்தின் எதிர்காலமாக இருப்பதால், அவர்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். சிறுவருக்கான முதலாவது பாதுகாப்பான சூழல் குடும்பத்திலேயே உருவாக வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குடும்பச் சூழலுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. எனவே, ஆரோக்கியமான குடும்பச் சூழலை உருவாக்குவதில் பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் முக்கியப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதேபோன்று, சமூக மட்டத்திலும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நீங்கள், சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் நெருக்கமாக அறிந்தவர்களாக இருக்கின்றீர்கள். ஒரு சிறுவர் தவறான பாதையில் செல்கின்றாரா, பாடசாலைக்கு முறையாகச் செல்கின்றாரா, போதைப்பொருள் பாவனை அல்லது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றாரா என்பதை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியும். சிறுவருக்கு எதிராக ஏதேனும் அநீதி, துஷ்பிரயோகம் அல்லது அசம்பாவிதம் இடம்பெறுவது தெரியவரும் போது, அதனை உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதும் உங்கள் முக்கியப் பொறுப்பாகும். நீங்கள் நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. ஆனால் பிரச்சினையை அடையாளம் கண்டு, உரிய இடத்திற்கு கொண்டு செல்வது அவசியம்.
சில சந்தர்ப்பங்களில் குடும்பக் கௌரவம், சமூக அந்தஸ்து அல்லது அச்சம் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறை சம்பவங்கள் வெளியில் தெரிவிக்கப்படாமல் இருக்கின்றன. எனவே, பதிவாகியுள்ள சம்பவங்களின் எண்ணிக்கை மட்டுமே சமூகத்தில் இடம்பெறும் உண்மையான நிலைமையை முழுமையாக பிரதிபலிக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை, முறைப்பாடுகளை வழங்குபவர்களின் நம்பிக்கையையும் இரகசியத்தன்மையையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் மனரீதியாக பாதிக்காத வகையில் அதிகாரிகளும் சமூக அமைப்புகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இங்கு கலந்துகொண்டுள்ள சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது பகுதிகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக உள்ளீர்கள். அந்த நம்பிக்கையை சமூக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். சமூகப் பணியில் ஈடுபடும் போது சில சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் சமூக மட்ட பிரதிநிதிகள் செயற்படுவது தனிப்பட்ட நலனுக்காக அல்ல உங்கள் கிராமம், குடும்பங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிறுவர்களிடையே பாடசாலை இடைவிலகல், போதைப்பொருள் பாவனை, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் உருவாகும் போது, அவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு ஆற்றுப்படுத்துவது மிகவும் அவசியம். ஒரு சிறுவரை சரியான பாதைக்கு கொண்டு வருவது அந்த சிறுவரின் எதிர்காலத்தையும், அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும்.
எனவே, மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் சமூக மட்ட அமைப்புகள் நெருக்கமாக இணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பு அல்ல; குடும்பம், சமூகம், பாடசாலை மற்றும் அரச நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஏற்க வேண்டிய பொறுப்பாகும். சிறுவர்களைப் பாதுகாப்பது அவர்களின் இன்றைய வாழ்க்கையை மட்டுமல்ல, எமது சமூகத்தின் எதிர்காலத்தையே பாதுகாப்பதாகும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து சிறுவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
வளவாளர்கள்:
கிராம மட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தை அடையாளம் காணுதல் மற்றும் உரிய தரப்பினரிடம் பாரப்படுத்துதல் தொடர்பில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி மு. வாசுதேவா அவர்களும், சிறுவர் சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திரு. வ. கனகராஜ் அவர்களும் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர். இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. செந்தூரன், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 1 2 3 4
 
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை2025 இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடக்கு மாகாண மாணவர்களுக்கான சனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் கூட்டுறவு பிரதியமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் கெளரவ கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பாடத்துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முதல் 20 இடங்களுக்குள் வந்த மாணவர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.100,000 வீதம் உதவித்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
சனாதிபதி நிதியத்தின் இத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டு ஒவ்வொரு பாடத்துறையிலும் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 115 மாணவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 91 மாணவர்கள், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 102 மாணவர்கள், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 86 மாணவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவர்கள் என மொத்தம் 477 மாணவர்களுக்கு ரூ.100,000 வீதம் மொத்தமாக ரூ.47.70 மில்லியன் பெறுமதியான உதவித்தொகை வழங்கப்பட்டது. விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. சனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரொஷான் கமகே அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விமல் சாமிநாதன் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டச் செயலாளர்கள், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண கல்விப் பணிப்பாளர், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12