யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல வலுப்படுத்தும் நோக்கில், Save a Life அமைப்பு, Ceylon Cold Stores மற்றும் Viridis Recyclers ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட “Jaffna Recycling Hub” இன்று (21.09.2026) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ்ப்பாணம் செம்மணி, அரியாலையில் அமைந்துள்ள மறுசுழற்சி மையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
அரசாங்க அதிபரின் உரை
இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை முற்றாகத் தடுப்பது சவாலானதாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், அவற்றின் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகச் சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது நடைமுறைக்கு ஏற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நடவடிக்கையாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். தாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் குளிர்பானங்கள் கண்ணாடிப் போத்தல்களில் வழங்கப்பட்டதுடன், அப்போத்தல்களை சேகரித்து மீண்டும் ஒப்படைத்து, அதற்குப் பதிலாக குளிர்பானங்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போதைய நிலையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மறுசுழற்சி மையத்தின் ஊடாக பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் நேரடியாக சுமார் 10 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாகவும், சேகரிக்கப்பட்ட கழிவுகள் அடுத்தடுத்த கட்டங்களில் பதப்படுத்தப்பட்டு புதிய பொருட்களாக மாற்றப்படுவதன் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றாகத் தடுக்க முடியாத நிலையிலும், அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை கணிசமாகக் குறைக்க முடியும். மாவட்டத்திலும் நாட்டிலும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு இத்தகைய முயற்சிகள் சிறந்த வாய்ப்பாக அமையும் எனவும் குறிப்பிட்டார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் Save a Life நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிப்பாக, “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு அந்நிறுவனம் வழங்கி வரும் ஆதரவு பாராட்டுக்குரியது எனவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண மறுசுழற்சி மையத்தின் செயற்பாடுகள் வெற்றியடைவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்து, தூய்மையானதும் பசுமையானதுமான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு இந்த முயற்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் எனவும் அரசாங்க அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு செல்லும் மையம் “Jaffna Recycling Hub”
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்து, அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் ஊடாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு கட்டுகளாக (Bales) அழுத்தப்பட்ட பின்னர் மறுசுழற்சிக்கு Colombo Viridis Recyclers நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முயற்சியானது தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் கையாள்வதற்கான சமூகப் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளுக்கு விலை நிர்ணயம்
பொதுமக்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இந்த மையத்தில் ஒப்படைக்க முடியும். ஒப்படைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் வகை மற்றும் எடைக்கு ஏற்ப ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
ஒப்படைக்கும் இடம்
பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்க விரும்புவோர் யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை, இலக்கம் 37, இளையதம்பி ஒழுங்கையில் அமைந்துள்ள மையத்தில் ஒப்படைக்க முடியும் என்பதுடன், 077 228 4939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் முடியும். இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, Save a Life அமைப்பின் பணிப்பாளர், திரு ராகுலன் கந்தசாமி, மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், Ceylon Cold Stores நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் தில்ஷானி எதிரிசிங்க, நுகர்வோர் மற்றும் வெளிப்புற ஈடுபாட்டு முகாமையாளர் பிரேமலால் பெரேரா, திட்டத் தலைவர் – வெளிப்புற சுற்றுச்சூழல் விவகாரங்கள் துமிந்து பெரேரா, Viridis Recyclers நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புத்திக முத்துகுமாரண உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கான 2026ஆம் ஆண்டின் தேசிய மட்ட வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நேற்று (19.09.2026) சனிக்கிழமை மட்டுவில் வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். செப்டெம்பர் 16ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டித் தொடரில் இலங்கை அரச சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு அரச திணைக்களங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றிருந்தன. இம்முறை முதன்முதலாக யாழ்ப்பாணத்தில் தேசிய மட்டத்தில் இப்போட்டித் தொடர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. போட்டிகளின் இறுதிநாளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான விறுவிறுப்பான போட்டிகள் இடம்பெற்றதுடன், வெற்றி பெற்ற அணிகளுக்கு விருந்தினர்களால் கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
போட்டி முடிவுகள்:
பிரிவு போட்டிகள் (A Division) லீக் சுற்று (பெண்கள்) :
விறுவிறுப்பான லீக் சுற்றின் முடிவில் விமானப்படை (Airforce) அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
கடற்படை (Navy) அணி இரண்டாம் இடத்தைப் (Runner-up) பெற்றது.
நாக்-அவுட் சுற்று (பெண்கள்):
நாக்-அவுட் சுற்றில் அதிரடியாக விளையாடிய கடற்படை (Navy) அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விமானப்படை (Airforce) அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.'
B' பிரிவு போட்டிகள் (B Division) லீக் சுற்று(பெண்கள்):
இச்சுற்றில் விமானப்படை (Airforce) அணி சாம்பியன் பட்டத்தையும்,யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடத்தையும், வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
நாக்-அவுட் சுற்று (பெண்கள்):
நாக்-அவுட் சுற்றில் வட மாகாண கல்வித் திணைக்கள அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
விமானப் படை (Airforce) அணி இரண்டாம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி மூன்றாம் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டன.
'C' பிரிவு மற்றும் இதர சிறப்புப் பிரிவுகள் 'C' பிரிவு (C Division (பெண்கள்) :
இப்பிரிவில் வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
ஆண்கள் அணி:
ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக அணி சாம்பியன் பட்டம் வென்றது. ( 10 வருடத்திற்குப் பின்னர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது)
வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி இரண்டாம் இடம் பெற்றது.
40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு (Over 40) (பெண்கள்) :
யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சாம்பியன் பட்டத்தையும், வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி இரண்டாம் இடத்தையும் வென்றன.
கலப்பு பிரிவு (Mixed):
ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்ற கலப்புப் பிரிவிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சாம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியது. ( தொடர்ந்தும் இரண்டாம் தடவையாக சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது) வட மாகாண கல்வித் திணைக்கள (Education) அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், பிரதி பிரதம செயலாளர் (நிதி) திரு. என். எஸ். ஆர். சிவரூபன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், அரச சேவை வலைப்பந்தாட்டப் போட்டியின் தலைவர் திருமதி ரிக்ஷி நனயக்கார உள்ளிட்ட அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம், கைதடியில் ரூ.28 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையம் இன்று(19.09.2026) காலை உத்தியோகபூர்வமாக மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்திய கலாநிதி கெளரவ நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு குறித்த புதிய தபால் நிலையக் கட்டடத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 02ஆம் திகதி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களின் பங்கேற்புடன் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந் நிலையில், 11 மாதங்களுக்குள் கட்டுமானப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டு புதிய தபால் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கைதடி பிரதேசத்தில் வசித்த அமரர் ஆறுமுகம் சூரியகுமார் தபால் நிலையம் அமைப்பதற்காக காணியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அவரது மனைவி சூரியகுமார் தயாபரி மற்றும் பிள்ளைகளான சூரியகுமார் ரமணன், சூரியகுமார் மயூரன் ஆகியோரால் கடந்த வருடம் காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டு, நாடா வெட்டப்பட்டு தபால் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து தபால் நிலையத்தின் பணிகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அமரர் ஆறுமுகம் சூரியகுமாரின் சேவையை நினைவுகூரும் வகையில், தபால் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்தின் யாழ்ப்பாண உப அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட முத்திரைத்தாள் நினைவுச் சின்னமாக அவரது மனைவி மற்றும் இளைய மகனிடம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கெளரவ எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பிரதேச சபை கெளரவ தவிசாளர், தபால் திணைக்களத்தின் பிரதி தபால் மா அதிபர்களான துஷித ஹுலங்கமுவ மற்றும் ஹேமசந்திர ஹேரத், வடமாகாண பிரதி தபால் மா அதிபர் கே. நிவேதிகா, யாழ்ப்பாண பிராந்திய தபால் அத்தியட்சகர் கே. செந்தில் குமார், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு F. C. சத்தியசோதி, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு எஸ் கபிலன், உள்ளிட்ட தபால் திணைக்கள அதிகாரிகள், கைதடி தபால் நிலைய ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்புதிய தபால் நிலையத்தின் ஊடாக, கைதடி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு மேலும் மேம்படுத்தப்பட்ட தபால் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 336 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துக் களஞ்சியம், பணியாளர் குடியிருப்பு வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19.09.2026) சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து அவற்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது கெளரவ அமைச்சர் மரக்கன்றொன்றையும் நாட்டி வைத்தார். மேலும், 282.52 மில்லியன் ரூபா செலவில் மருந்துக் களஞ்சியம் மற்றும் பணியாளர் குடியிருப்பு வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, 53 மில்லியன் ரூபா செலவில் வைத்தியசாலையின் மின்தூக்கி மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் பணிகள் 2027ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் விடுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வைத்தியசாலையின் தற்போதைய செயற்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தேவைகள், மனித மற்றும் பௌதீக வளத் தேவைகள், தொழில்சார் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது, 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படாத சுகாதார சேவையின் உத்தியோகபூர்வ ஆளணி மீளாய்வு (Cadre Revision) பணிகளை இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக கெளரவ அமைச்சர் தெரிவித்தார். மேலும், வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 350 சுகாதாரப் பணி உதவியாளர்களில் 10 பேரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலுக்கு தற்காலிகத் தீர்வாக, அதன் தாதியர் மற்றும் மகப்பேற்றுப் பிரிவு சேவைகளில் ஒரு பகுதியை கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளில் தற்காலிகமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், ஆளுநர் செயலாளர் திரு. சத்தியசீலன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப. ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.பி.எஸ்.டி. பத்திரண, சாவகச்சேரி பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர், துறைசார் அரச அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை உதவியாளர்கள், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

“அத்தம” நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த வகையில் - சர்வதேச கரையோரத் தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு (19 செப்டம்பர்) , யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் மாவட்ட நிகழ்வு இன்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமை உரையாற்றிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட “அத்தம” வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவும், சர்வதேச கடற்கரைத் தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் கடற்கரைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 36 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 28 கிலோமீற்றர் நீளமான கடற்கரைப் பகுதி இத்திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். தூய்மையான கடற்கரை, ஆரோக்கியமான கடல் வாழ்வுகள், நிலையான எதிர்காலம்" எனும் கருப்பொருளின் கீழ், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) கொகமர்சியல் வங்கி, முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்பில் இந் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். கடற்கரைகளை தூய்மைப்படுத்துவது மட்டுமன்றி, மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் கடற்கரைகளில் கழிவுகளை வீசுவதும், பின்னர் அவற்றை தொடர்ச்சியாக தூய்மைப்படுத்துவதுமான நிலை நீடிக்கக் கூடாது. கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால், தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சிகள் வெறும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகவே மாறிவிடும்” என அரசாங்க அதிபர் தெரிவித்தார். “இன்று எமது கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் காணப்படுகின்றன. இந்நிலையை மாற்றுவதற்கு தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் மாணவர்களுக்கு கழிவு முகாமைத்துவத்தின் விழிப்புணர்வு அவசியம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ தர்சினி, கொமர்ஷல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் திரு. R. கஜதீபன் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் (MEPA) மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கடல் சுற்றுச் சூழலாளருமான திரு. M. கேசவன் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர். இப்பாரிய தூய்மைப்படுத்தல் பணியில் இலங்கை கடற்றொழில் பல்கலைக்கழகம் (Ocean University of Sri Lanka), கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA), கொமர்ஷல் வங்கியின் ஊழியர்கள், இராணுவம் மற்றும் கடற்படைப் பிரிவினர், சிவில் சமூக அமைப்புகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் ஆர்வத்துடன் இணைந்து பண்ணைக் கடற்கரைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தினர்.
இதேவேளை, அத்தம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாவாந்துறை தெற்கு கரையோரப் பகுதி சுத்தப்படுத்தல்! சனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித் திட்டத்தின் செப்டம்பர் மாதத்திற்கான மாவட்ட நிகழ்வு இன்று (19.09.2026) நாவாந்துறை தெற்கு J/84 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இறங்குதுறை ஆண்டிய கரையோரப் பகுதியில் நடைபெற்றது. இதன்போது கரையோரப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டதுடன், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கடற்றொழில் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். கரையோரச் சூழலைப் பாதுகாத்து தூய்மையாகப் பேணுவதற்கும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந் நிகழ்வு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.







